Pages

Tuesday, September 16, 2014

இராமாயணம் - இராமன் முடி சூடுதல்

இராமாயணம் - இராமன் முடி சூடுதல் 


எல்லோரும் அறிந்த பாடல்தான்.

அரியணை அனுமன் தாங்க,
    அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
    இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
    வசிட்டனே புனைந்தான் மௌலி.

பொருள்

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்கிக் கொள்ள

அங்கதன் உடைவாள் ஏந்த, = அங்கதன் உடை வாளை ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க, = பரதன் வெண் கொற்றக் குடை பிடிக்க

இருவரும் கவரி வீச = இலக்குவனும், சத்ருக்னனும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க  = மலர் சூடிய குழலைக் கொண்ட அவள் பெருமிதம் கொள்ள

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = திரு வெண்ணையூர் சடையனின்

மரபுேளார் கொடுக்க வாங்கி = முன்னோர் கொடுக்க , அதை வாங்கி

வசிட்டனே புனைந்தான் மௌலி. = வசிட்டன் முடி சூட்டினான்

மேலோட்டமான பொருள் இதுதான்.


சற்று ஆழமாக சிந்திப்போம் 

1. வசிட்டனே புனைந்தான் மௌலி - அது என்ன வசிட்டனே என்று ஒரு ஏகாரம் ? வசிட்டன் புனைந்தான் மௌலி என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ? முதலில் பதினான்கு   ஆண்டுகளுக்கு முன்பும் வசிட்டன் தான் முடி சூட்டுவதாய் இருந்தது.  அன்று நடக்கவில்லை. இன்றும் அவனே புனைந்தான் என்று  ஒரு அழுத்தம். 


2. அது எல்லாம் சரி, யார் முடி புனைந்தார்கள் ? கம்பர் அதை சொல்ல வில்லை.  இராமனுக்கு முடி சூட்டினான் என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை.  முடி சூட்டிக் கொண்டது அறம் , வாய்மை, நேர்மை, ஒழுக்கம்...தனி மனிதனுக்கு  சூட்டப் பட்ட முடி அல்ல அது என்பதால் முடி யாருக்கு சூட்டினான்  என்பதை விட்டு விடுகிறான் கம்பன். 


3. எடுத்த எடுப்பில் அரியணை அனுமன் தாங்க என்று அனுமனை சிறப்பிக்கிறான் ? முதலில் பரதனை சொல்லி இருக்கலாம், அல்லது பதினான்கு ஆண்டுகள்  கூடவே வந்து கைங்கர்யம் செய்த   இலக்குவனை  சொல்லி  இருக்கலாம், இல்லை சீதையாவது சொல்லி இருக்கலாம். அனுமனை  முன்னிறுத்த காரணம் என்ன ? அனுமன், இராமனை காத்தான்,  தற்கொலை  செய்ய இருந்த சீதையின் உயிரை காத்தான், நந்தி கிராமத்தில் உயிர் விட  இருந்த பரதனின் உயிரை காத்தான், போரில் அடிபட்டு உயிர் போகும் தருவாயில்   இருந்த இலக்குவநனின் உயிரைக் காத்தான். இப்படி எல்லோர் உயிரையும்  காத்த அனுமனுக்கு  முதல் இடம் தருகிறான் கம்பன். 


4. அரசனுக்கு மூன்று அடையாளங்கள் - செங்கோல், வெண் கொற்றக் குடை, உடை வாள் . உடை வாள் என்பது அரசின் சின்னம். குறியீடாக அங்கதனுக்கு அரசை  கொடுத்தேன் என்று சொல்லாமல் சொன்ன வாக்கு அது. "அங்கதன் உடை வாள் ஏந்த "

5. அனுமனும், அங்கதனும் இராமனுக்கு காட்டில் கிடைத்த உறவுகள்.  கானகம்  போனதிலும் நன்மை இரண்டு நல்லவர்களின் அறிமுகம் கிடைத்தது. 


3 comments:

  1. ///அங்கதன் உடை வாள் ஏந்த///
    http://temple.dinamalar.com/StoryDetail.php?id=35487

    ReplyDelete
  2. அருமையான விளக்க உரை...நன்றி

    ReplyDelete
  3. அற்புத விளக்கம். இன்று தான் என் தம்பி மூலம் இதை படிக்க வாயத்தது. நன்றி. நீங்கள் FB யில் இருக்கிறீர்களா?

    ReplyDelete