கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே
வருகிறேன் என்று சொல்லிப் போனவன் இன்னும் வரவில்லை. அவள் மனம் ஏங்குகிறது. ஒரு
வேளை வர மாட்டானோ என்று சந்தேகிக்கிறது. அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று
பயப் படுகிறது.
அவளின் சோர்ந்த நிலை கண்டு, அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள்.
"கவலைப் பட்டு எதுக்கு நீ இப்படி மெலிஞ்சு போற. இந்த வானம்
இப்படி இடி இடிக்கிறதே ஏன் தெரியுமா ? உன்னை விட்டு பிரிந்த உன் தலைவனைப் பார்த்து, "காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உன் தலைவியிடம் போ " என்று
சொல்லத்தான்."
இடி இடிப்பது கூட, காதலுனுக்கு சேதி சொல்வது போல இருக்கிறது என்று தோழி ஆறுதல்
சொல்லுகிறாள்.
பாடல்
தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.
பொருள்
தொடியிட = தொடி+ இட = தொடி என்றால் வளையல். வளையல் இட
வாற்றா = ஆற்றாமல், முடியாமல்
தொலைந்த = மெலிந்த (அழகு தொலைந்த)
தோ ணோக்கி = தோள் நோக்கி
வடு = மாவடுவை
விடைப் = இடையில், நடுவில்
போழ்ந்த = பிழந்த
கன்ற = அகன்ற
கண்ணாய் = கண்ணைக் கொண்டவளே
வருந்தல் = வருத்தப் படாதே
கடி = பெரிய, வலிய
திடி = இடி முழக்கும்
வான = வானம்
முரறு = சப்தம் இடுவது
நெடுவிடைச் = நீண்ட தொலைவு
சென்றாரை = சென்றவரை
நீடன்மி னென்று = இன்னும் காலத்தை நீட்டாதே என்று சொல்ல
வழக்கமாக இடியை பயமுறுத்தும் பொருளாகவும், இருட்டுடன் சம்பந்தப்பட்டதாகவுமே படித்திருக்கிறோம். இந்தப் பாடலில் இடியை நல்ல செய்தியை உரைக்கும் பொருளாக கற்பனை செய்திருப்பது இனிமை. நன்றி.
ReplyDelete