Pages

Friday, November 7, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1


இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் மிக ஆளுமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஓரிரவில் ஒரு சாம்ராஜ்யத்தின் தலை எழுத்தை மாற்றி எழுதிய கூனியாகட்டும் ,

இரண்டே வரத்தால் ஒரு சக்ரவர்த்தியைக் கொன்று, புது சக்ரவர்த்தியை கானகம் அனுப்பி, யாரும் நினைக்காத ஒருவனை சக்ர்வர்த்தியாக்கிய கைகேயியாகட்டும்,

முக்கோடி வாழ் நாள் கொண்ட இராவணனை அற்பாயுளில் முடித்த சூர்பனகையாகட்டும்,

எல்லோரும் மிக மிக வலிமையான ஆளுமை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 

வாலியின் மனைவி தாரை.

ஒரு பெண்ணின் ஆளுமையை தாரையின் பாத்திரத்தில் வடிக்கிறான் கம்பன்.

தாரை அரசாங்க விஷயங்களில் மிக மிக ஆழமாக ஈடு பட்டிருக்கிறாள். இன்னும் சொல்லப் போனால் ஒற்றரர்கள் தாரையிடம் பல விஷயங்களை சொல்லி இருக்க வேண்டும். நாட்டில் நடப்பவைகளைப் பற்றி வாலிக்குத் தெரியாத விஷயங்கள் கூட  தாரைக்கு தெரிந்திருக்கிறது.

வாலியை சுக்ரீவன் போருக்கு அழைக்கிறான்.

இத்தனை நாள் பயந்து ஒளிந்து இருந்தவன் எப்படி இன்று துணிவோடு சண்டைக்கு வருகிறான் என்று சிந்திக்கத் தவறி விடுகிறான் வாலி.

வலி(மை) வாலியைத் தடுமாற வைத்தது.

தாரை தடுத்துச் சொல்கிறாள்.

சுக்ரீவனோடு போருக்குப் போகிறேன் என்று வாலி சொல்லக் கேட்ட தாரை சொல்லுவாள் "அரசனே, சுக்ரீவனுக்கு உயிரினும் இனிய நட்பாக இராமன் என்பவன் கிடைத்திருக்கிறான்; அவன் உன் உயிரை எடுக்க உறுதி கூறி இருக்கிறான். இதை நான் நம் மேல் தூய அன்புள்ளவர்கள் சொல்லக் கேட்டேன் "

பாடல்


அன்னது கேட்டவள்,
      'அரச!' ''ஆயவற்கு
இன் உயிர் நட்பு
     அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு
      உடன் வந்தான்'' எனத்
துன்னிய அன்பினர்
      சொல்லினார்' என்றாள்.

பொருள்

அன்னது கேட்டவள் = அதைக் கேட்டவள்

'அரச!'  = அரசனே

ஆயவற்கு = அவர்களுக்கு

இன் உயிர் நட்பு = உயிரினும் இனிய நட்பாக 

அமைந்து = அமைந்த

இராமன் என்பவன் = இராமன் என்பவன்

உன் உயிர் கோடலுக்கு = உன் உயிரை எடுப்பதற்கு

உடன் வந்தான்''  = உடன் வந்தான்

எனத் = என

துன்னிய அன்பினர் = நமக்கு நெருங்கிய அன்புள்ளவர்கள்

சொல்லினார்' என்றாள்.= சொல்லினார் என்றாள்

சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையிலான நடப்பைப் பற்றி வாலிக்குத் தெரியவில்லை. தாரைக்குத் தெரிந்திருக்கிறது.

அது மட்டும் அல்ல, சொன்னது ஒரு ஆள் இல்லை. பல பேர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். "சொல்லினார்" என்றாள் .




2 comments:

  1. நல்ல பாடல் மற்றும் அழகான கருத்து

    ReplyDelete
  2. "தையல் சொல் கேளீர்" என்பதற்கு எதிர்மறையான பாடல்.

    ReplyDelete