இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா
தாரை சொல்ல சொல்ல கேளாமல் சுக்ரீவனோடு போரிட்டு இராம பாணத்தால் வாலி இறந்து போனான்.
தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள். அவள் புலம்பலிலும் அறிவின் தீட்சண்யம் தெரியும்.
"நான் இங்கு துன்பத்தில் கிடந்து நைந்து போகிறேன். நீயோ உண்மையான வானோர்கள் உள்ள நாட்டிற்கு சென்று விட்டாய். நான் உன் உயிர் என்று நீ என்னிடம் சொல்லி இருக்கிறாய். ஆனால், இன்றோ நான் இருக்கும்போது நீ எப்படி செல்ல முடியும் . ஒரு வேளை நீ சொன்னது பொய்யோ. ஆனால், நீ பொய் சொல்ல மாட்டாயே...."
பாடல்
‘நையா நின்றனன் நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திருநாடு மேவினாய்;
ஐயா! ‘நீ எனது ஆவி ‘என்றதும்
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா!
பொருள்
‘நையா நின்றனன் நான் =நைந்து நின்றேன் நான்
இருந்து இங்ஙன் = இங்கிருந்து
மெய் = மெய்யான
வானோர் = வானவர்கள்
திருநாடு மேவினாய் = திரு நாட்டிற்கு சென்றாய்
ஐயா! = ஐயா
‘நீ எனது ஆவி ‘என்றதும் = என்னிடம் நீ "நீ என் ஆவி" என்று கூறியது
பொய்யோ? = பொய்யோ ?
பொய் உரையாத புண்ணியா! = பொய் சொல்லாத புண்ணியனே
தாரைக்கும் வாலிக்கும் உள்ள அன்பின் ஆழம் தெரிகிறது. வாலி, தாரையை உயிருக்கு உயிராக நேசித்து இருக்கிறான்.
நான் உன் உயிர் என்று நீ (வாலி) சொன்னது பொய்யானால், நீ எப்படி பொய் புகலாத வானவர் நாடு போவாய் (மெய் வானோர் திரு நாடு மேவினாய்)
வாலியின் சிறப்பு, வாலிக்கும் தனக்கும் உள்ள அன்பின் நெருக்கம், வாலியைப் பிரிந்த துயரம் எல்லாம் அவளின் புலம்பலில் காணக் கிடைக்கும்.
மேலும் பார்ப்போம்.
No comments:
Post a Comment