Pages

Saturday, November 22, 2014

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

வாழ்க்கையில் பல துன்பங்களுக்குக் காரணம் மெய் எது பொய் எது என்று அறியாமல் குழம்புவதுதான்.

சரி எது, தவறு எது ?
நல்லது எது, கெட்டது எது ?
நல்லவர் யார் , கெட்டவர் யார் ?
எது சரியான பாதை, எது தவறான பாதை ?

என்று தெரியாமல் பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு தவிக்கிறோம்.

பொய்யானவற்றை விட்டு உண்மையானவற்றை அடைய வேண்டும்.


பொய் என்பது பொய் அறிவு, பொய் உணர்வு.
மெய் என்பது மெய் அறிவு, மெய் உணர்வு.


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு  என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு  என்பதும் அவர் வாக்கே.

இறைவனை அறியும் போது பொய் விலகும், உண்மை புரியும்.



1 comment:

  1. யார் என்ன சொன்னாலும், நாமே ஆராய வேண்டும் என்று சொன்னால், மாணிக்க வாசகரின் கூற்றையும் ஆராய வேண்டாமா? சும்மா அவர் சிவன் மேல் பாடுவதெல்லாம் சரி என்று எப்படிக் கொள்ள முடியும்?!

    ReplyDelete