Pages

Friday, November 28, 2014

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.


திருவையாறு !

திரு ஞான சம்பந்தர் காலத்து திருவையாறு !

பச்சை பசேலென்ற வயல் பரப்புகள்.

வயல் எங்கும் நெல். வயலில் நீர் நிறைந்திருக்கிறது. எவ்வளவு நீர் என்றால் , அந்த வயல்களில் தாமரை மலர் பூத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு நீர் என்று.

பசுமையான நெற் பயிர்களின் ஊடே சிவந்த தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன.

வயல் வெளியில் ஊடாடும் தென்றல்.

அதன் அருகே கொஞ்சம் வீடுகள். வீட்டின் முற்றத்தில்  சில பல தென்னை மரங்கள். மரத்தடியில் தடி தடியாக சில எருமைகள். அதன் அருகே அந்த எருமையின் கன்றுகள்.

நெல்லின் தலை கோதிய காற்று தென்னை மரத்தின் மேலும் படர்ந்தது. அப்போது, அந்த தென்னை மரத்தில் இருந்த சில காய்ந்த தென்னக் குருளைகள் உதிர்ந்து விழுந்தன.

அந்த சத்தத்தில் , எருமை கன்றுகள் துள்ளி எழுந்து , தாமரை மலர்கள் சூழ்ந்த வயல் வெளியில் ஓடின.


இது தேவாரப் பாட்டில் வருகிறது சொன்னால் நம்ப முடிகிறதா ?


பாடல்

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த  அரக்கர் கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடும் தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாய இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி  இருந்து அங்கு ஓடி 
செஞ்சாலிக் கதிர் உழக்கி செழுங்கமல வயல் படியுந் திருவையாறே.

பொருள்

அஞ்சாதே = அஞ்சாமல்

கயிலாய மலை = கயிலாய மலையை

எடுத்த = எடுத்த

 அரக்கர் கோன் = அரக்கர்களின் அரசன்

தலைகள் பத்தும் = தலைகள் பத்தும்

மஞ்சாடும் = வலிமை பொருந்திய

தோள் நெரிய = தோள்களும் நெரியும் படி

அடர்த்து = சண்டையிட்டு (இங்கே அழுத்தி )

அவனுக்கு = அந்த இராவணனுக்கு

அருள் புரிந்த  = அருள் புரிந்த

மைந்தர் கோயில் = காப்பவனின் கோயில்

இஞ்சாய = இஞ்சி போல உலர்ந்த

இளம் தெங்கின் பழம் வீழ = சிறிய தென்னையின் குருளை விழ

இள மேதி = எருமைக் கன்றுக் குட்டி

இருந்து அங்கு ஓடி  = அங்கிருந்து ஓடி

செஞ்சாலிக் = செந் நெல்

கதிர் = கதிர்களை

உழக்கி = மிதித்துக் கொண்டு

செழுங்கமல = சிவந்த தாமரைகள் உள்ள

வயல் = வயல்கள்

படியுந் = உள்ள

திருவையாறே.= திருவையாறே

என்ன ஒரு அழகான பாட்டு...இல்லையா ?

பாட்டு அழகாக இருந்தாலும்...

வயல் வெளியில் தாமரை பூத்தது, தென்னை மரத்தில் இருந்து குருளை விழுந்தது, எருமைக் கன்று ஓடியது, இராவணனுக்கு அருள் புரிந்த சிவன் அமரும்  கோயில்....என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறதே ?

சிலருக்கு எதைப் பார்த்தாலும் தனக்கு அது வேண்டும் என்று நினைப்பார்கள்.

நல்ல வீட்டைப் பார்த்தால், நமக்கு இந்த மாதிரி ஒரு வீடு இருந்தால் தேவலை என்று நினைப்பார்கள்..

அழகான பெண்ணை பார்த்தால் , தனக்கு வேண்டும்.

காண்பதெல்லாம் வேண்டும்.

அது ஒரு வகை.

இன்னொரு வகை, அடைய வேண்டும் என்ற ஆசை இல்லாமல், அது அது அங்கங்கே இருக்கட்டும் என்று அவற்றை அப்படியே பார்த்து இரசிப்பதோடு நிற்பது.

இராவணன் என்ன நினைத்தான் ....?

கைலாய மலையே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். மலையை தூக்கிக் கொண்டு போய் விட நினைத்தான். அவன் வலிமைக்கு மலையை தூக்க நினைத்தான்.

நம் வலிமைக்கு நாம் எதை எதையோ தூக்க நினைக்கிறோம்.

எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பது ஆணவம். ஆணவம் அழியும் இடத்தில்  அருள் கிடைக்கும்.

பக்தி என்றால் எல்லா பற்றையும் விட்டு விட்டு இறைவன் மேல் அன்பு செலுத்துவது  ஒன்று மட்டும் தான் என்று ஒரு எண்ணம் பலருக்கு உண்டு.

உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். இறைவன் ஒருவனையே நேசிக்க வேண்டும் என்று பலர் நினைப்பது உண்டு.

அது அல்ல பக்தி,

பக்தி என்பது உலகை, இயற்கையை இரசிப்பது, அதன் ஆச்சரியங்களில் மூழ்குவது,

இறைவன் வேறு இயற்கை வேறு என்பது அல்ல.

தென்னை மரம், அதன் அடியில் எருமைக் கன்று, வயல் வெளி, அதில் பூத்த தாமரை என்று  இயற்கையோடு ஒன்றுகிறார் ஞான சம்பந்தர்.

நாம் செல்லும் வழியில் நிற்கும் மரங்களை  நாம் எத்தனை முறை இரசித்து இருக்கிறோம் ?

மழையில் நனைந்த மரங்களை, ஜன்னலோரம் பறந்து செல்லும் அந்த பெயர் தெரியாத  பறவையை, தாயின் தோளில் நிம்மதியாகக் தூங்கிக் கொண்டு வரும் குழந்தையை, நிலவோடு கட்டிப் பிடித்து விளையாடும் மேகங்களை, இப்படி நம் வாழ்க்கையில் அன்றாடம் ஆயிரம் அதிசயங்கள்  நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் கண் மூடிச் செல்கிறோம்.

பணம் ஒன்றே குறியாக  அலைகிறோம். அது வேண்டும், இது வேண்டும் , அதுவும்  வேண்டும், இதுவும் வேண்டும் என்று ஆலாய் பறக்கிறோம்....இராவணன் மாதிரி

மலையைப் பார்த்தால் தனக்கு வேண்டும்.

மற்றவன் மனைவியைப் பார்த்தால் தனக்கு வேண்டும்

சற்று நேரம் அடையும் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கையை இரசியுங்கள்....

மனைவியின் வெட்கப் புன்னகையை, பிள்ளையின் மலர்ந்த முகத்தை, சில்லென்று  முகத்தில் படும் நீரை...

இத்தனை சந்தோஷங்களும் உங்கள் முன்னால் கொட்டிக் கிடக்கிறது. அனுபவியுங்கள்.

பக்தி பின்னால் வரும்.....


1 comment:

  1. திருஞானசம்பந்தர் என்ன நினைத்து எழுதினாரோ இல்லையோ, உன் பொருளை இந்தப் பாடலில் புகுத்தி விட்டாய்!!!

    ReplyDelete