Pages

Monday, December 1, 2014

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது 


 இந்தப் பிறவி இன்பமானதா ? துன்பமானதா ?

ஒட்டகம் முள் மரத்தின் இலைகளை  தின்னும்.அப்படி தின்னும் போது , அந்த முள்  மரத்தில் உள்ள முள் தைத்து , ஒட்டகத்தின் உதட்டில் இருந்து இரத்தம் வழியும். அப்படி வழிந்த இரத்தம் ஒட்டகத்தின் வாயில்  சென்று  சேரும். தன் இரத்தத்தை தான் அறியாத ஒட்டகம், இந்த முள் மரத்தின் இலைகள் மிக சுவையாக இருக்கின்றன என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் உதடு கிழிபட தின்னும்.

துன்பத்தை இன்பமாக நினைத்தது அந்த முட்டாள் ஒட்டகம்.

இந்தப் பிறவிக்குத்தான் எத்தனை துன்பம் ? நோயால் துன்பம், நம் மீது அன்பு கொண்டவர்கள் நம்மை பிரிந்தால் துன்பம், வறுமை வந்தால் துன்பம், பழி வந்தால் துன்பம், நினைத்தது கிடைக்கவில்லை என்றால் துன்பம்..இப்படி துன்பத்திற்கு இருப்பிடமாகும் இந்தப் பிறவி.


இந்தப் பிறவி, துன்பத்தின் இருப்பிடம் என்று அறிந்த பெரியவர்களோடு மிக மிக நெருங்கி  பழக வேண்டும்.

பாடல்


அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.


சீர் பிரித்த பின்

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.

பொருள்

அடைந்தார்ப் பிரிவும் = நம்மை அடைந்தவர்களின் பிரிவும். பெற்றோரை வெட்டு பிரிவது, காதலன் / காதலி பிரிவது, பிள்ளைகளை பிரிவது, நண்பர்களைப் பிரிவது, என்று பலவிதமான பிரிவு

அரும்பிணியும் = கொடுமையான நோயும்

 கேடும் = மற்ற பலவிதமான துன்பங்களும்

உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் = இந்த உடம்பை கொண்டவர்களுக்கு வருவதால்

தொடங்கிப் = தொடக்கம் முதல்

பிறப்பு இன்னாது என்று உணரும் = இந்த பிறப்பு துன்பம் தருவது என்று உணரும்

பேரறிவினாரை = பெரிய அறிவை கொண்டவர்களை


உறப் புணர்க அம்மா என் நெஞ்சு = மிக நெருங்கிப்  பழகுக, என் நெஞ்சே

கண்டு பிடியுங்கள்...அப்படி யாராவது இருக்கிறார்களா என்று. இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருங்கள்.

 .


1 comment:

  1. இந்த ஒட்டக ஓவமை எங்கிருந்து பிடித்தாய்??

    ReplyDelete