இராமாயணம் - தாரையின் ஆளுமை
சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன், சொன்ன சொல்லை மறந்து, போதையில் மிதந்தான்.
அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான்.
இலக்குவன் மிகுந்த கோபத்தோடு வருகிறான். கோட்டை மதிலை கற்களை கொண்டு குரங்குகள் அடைத்தன. இலக்குவன், அவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு வருகிறான்.
என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்து நின்றனர்.
அப்போது, அனுமன் "தாரை அவன் முன் சென்று நின்றால், அவன் கோபம் மாறும் " என்றான்.
அதைக் கேட்ட தாரை
"நீங்க எல்லாம் விலகுங்கள். நான் போய் இலக்குவனை சந்தித்து அவன் மன நிலை என்ன என்று அறிந்து வருகிறேன் " என்று கிளம்பினாள் . அவளுக்கு வழி விட்டு எல்லோரும் விலகி நின்றனர்.
ஒரு அரசியல் திருப்பத்திற்கு , தாரை வழி வகுக்கிறாள். இத்தனை ஆண்பிள்ளைகள் இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் . தானே நேரில் சென்றால்தான், இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று முடிவு செய்து, "நீங்க எல்லோரும் தள்ளுங்கள்..நான் போகிறேன் " என்று கிளம்புகிறாள்.
ஒரு பெண்ணின் தைரியம், அவளின் தன்னம்பிக்கை, ஆளுமை வியக்க வைக்க வைக்கிறது.
பாடல்
'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும்.
பொருள்
'நீர் எலாம் = நீங்கள் எல்லாம் (அனுமன், அங்கதன் எல்லோரும்)
அயல் நீங்குமின் = நீங்கிப் போங்கள்
நேர்ந்து , யான் = நான் சென்று
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும் = வீரனாகிய இலக்குவனின் உள்ளத்தை விசாரிக்கிறேன்
பேர நின்றனர் = எல்லோரும் விலகி நின்றனர்
யாவரும் = எல்லோரும்
பேர்கலாத் = நல்ல நெறிகளில் இருந்து பெயராத, விலகாத
தாரை சென்றனள் = தாரை சென்றாள்
தாழ் குழலாரொடும் = தன் தோழியரோடு
யோசித்துப் பார்ப்போம்.
தன் கணவனை, இராமனின் துணையோடு, வஞ்சகமாக கொன்றவன் சுக்ரீவன்.
அவனுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது.
தாரை நினைத்திருந்தால் "நல்லா வேண்டும்...என் கணவனை கொன்றவன் இப்போது வகையாக மாட்டிக் கொண்டான். இலக்குவன் அவனை கொல்லட்டும் , என் மகனுக்கு ஒரு வேளை ஆட்சி கிடைக்கலாம் " என்று நினைத்து இருக்கலாம்.
கணவனை கொன்றவன் மேலும் கருணை.
கணவனை கொன்றது மட்டும் அல்ல, மகனுக்கு ஆட்சி கிடைக்காமல் செய்தவன்.
அப்படிப் பட்ட சுக்ரீவன் மேலும் கருணை கொள்கிறாள் தாரை.
மேலும் உயிர் சேதம் விளைவதை அவள் விரும்பவில்லை.
குடும்பச் சண்டையில் மற்றவர்கள் பாதிக்கப் கூடாது என்று நினைக்கிறாள்.
பிரச்சனையை தீர்க்க தானே முனைகிறாள்.
அவளின் பெரிய மனதை நாம் கண்டு வியக்கிறோம்.
இப்படிப் பட்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.
வீரமும், அறிவும், விவேகமும்,பரந்த மனமும், கருணையும் கலந்து அற்புத பிறவிகளாக இருந்திருக்கிறார்கள்.
வருங்காலப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக தாரையைப் படைக்கிறான் கம்பன்.
முன்பு ஒரு முறை, "பெண்கள் சொல் கேட்கக் கூடாது" என்று நீ எழுதியதாக எனக்கு நினைவு இருக்கிறதே?
ReplyDeleteதாரை, சொல்லவில்லை. செய்தாள்.
Deleteபெண்கள் சொன்னதை கேட்டதால் இராமயணத்தில் என்ன நடந்தது ?
கூனி சொன்னதை கைகேயி கேட்டால்.
கைகேயி சொன்னதை தசரதன் கேட்டான்
சீதை சொன்னதை இராமன் கேட்டான் (பொன் மான் வேண்டும் என்று)
சூர்பனகை சொன்னதை இராவணன் கேட்டான்