Pages

Wednesday, December 24, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை 



அழகழகான பெண்கள் புடை சூழ தாரை, இலக்குவன் முன் போய் நிற்கிறாள்.

அப்போது இலக்குவனின் நிலையை கம்பன் சொல்கிறான்.

ஒரு ஆணுக்கு இலக்கணம் வகுக்கிறான்.

முதலில் அவனுடைய கோபம் போயிற்று.

இரண்டாவது, அவர்களை பார்க்காமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான்.

பார்த்தால் தானே சலனம் வரும்...முதலில் கண்ணை அவர்களை விட்டு வேறு இடம் நோக்குகிறான்.

பின்னர், அவர்களுக்கு நேர் எதிரே நிற்காமல், ஒதுங்கி நிற்கிறான்.

பின்னர், மீண்டும் முகம் திருப்பி அவர்களை பார்க்கவும் அஞ்சினான்.

என்னடா இவன் பெண்களை பார்க்க எதற்கு அஞ்ச வேண்டும், ஒரு வேளை இவன் ஒரு கோழையோ என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அப்படி நின்றவன் "மலை போல் உயர்ந்த தோள்களை" கொண்டவன் என்கிறான் கம்பன்.

பாடல்


ஆர்க்கும் நூபுரங்கள் பேரி,
    அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப,
    மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர,
    முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப்
    பருவரை அனைய தோளான்.

பொருள்

ஆர்க்கும் = விம்மி வரும்

நூபுரங்கள் = மார்பகங்கள்

பேரி = முரசு போல

அல்குலாம் தடம் = இடுப்புப் பகுதி

தேர் சுற்ற = தேர் போல அசைய 

வேல் கண் = வேல் போன்ற கண்கள்

வில் புருவம் = வில் போன்ற புருவம்

போர்ப்ப = போருக்கு வர

மடந்தையர் மிடைந்த போது = பெண்கள் வந்த போது

பேர்க்க  அருஞ்சீற்றம் = மாற்ற முடியாத கோபம்

 பேர = மாறிப் போக

முகம் பெயர்த்து = முகத்தை வேறு இடத்திற்கு மாற்றி - அதாவது பார்வையை மாற்றி

ஒதுங்கி = அவர்களிடம் இருந்து ஒதுங்கி

பின்னர்ப் = மீண்டும்

பார்க்கவும் அஞ்சினான் = பார்க்கவும் அஞ்சினான்

அப் = அந்த

பருவரை  = மலை போன்ற

அனைய தோளான் = பெரிய தோள்களை உடைய (இலக்குவன் )

பெண்களை நேராக பார்க்காமல், அவர்கள் முன்னால் நேருக்கு நேர் நில்லாமல், அவர்களை பார்ப்பது கூட தவறு என்று அஞ்சி விலகி நின்றான்.

இது போன்ற உயர்ந்த கருத்துகளை இளம் வயதில் பையன்களுக்கு சொல்லிக் கொடுத்தால்,  அவர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்ன, எது சரி, எது தவறு என்று  தெரியும்.

பாலியல் கொடுமைகள் குறையும்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அதில் உள்ள உயர்ந்த பாத்திரங்களின்  குணங்களை இரசித்து, அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஒரு சமுதாயம் உருவானால், மிக நன்றாக இருக்கும்.



No comments:

Post a Comment