Pages

Friday, December 19, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அமுதம் வந்தது. ஆலகால விஷமும் வந்தது. திருமால், அமுதத்தை தேவர்களுக்குக் கொடுத்தார்.

இது கதை.

நம்பும் படி இருக்கிறதா ? கடலை கடைய முடியுமா ? தண்ணீரைக் கடைந்தால் என்ன கிடைக்கும் ? அதைக் கடைய எவ்வளவு பலம் வேண்டும்....இப்படி ஒரு அர்த்தமில்லா கதையை ஏன் படைத்து இருக்கிறார்கள் ?

பாற்கடல் என்பது நம் வாழ்க்கைதான். இந்த உலகம் தான்.

இதில் உண்மை தேடி (அமுதம்) நாளும் கடைந்து கொண்டு இருக்கிறோம். இந்த உலகில் நல்லதும் இருக்கிறது. பொல்லாததும் இருக்கிறது.

நல்லதை (அமுதை) எடுத்துக் கொண்டு அல்லாததை (விஷத்தை ) விட்டு விடவேண்டும்.

இதுவரை நாம் அமுதத்தை கண்டதில்லை. அதனால், அதை நேரில் வந்து யார் தந்தாலும் அது அமுதம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

எப்போதெல்லாம் மனித குலம் நல்லது எது , கெட்டது எது என்று அறியாமல் தவிக்கும் போது பெரியவர்கள் தோன்றி வழி காட்டி இருக்கிறார்கள்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரியார்.

எத்தனை அற நூல்கள், எத்தனை குருமார்கள்....

அமுதை அள்ளி தந்திருக்கிறார்கள்....நாம் தான் அமுதை விட்டு விட்டு வேறு எங்கோ  அலைந்து கொண்டிருக்கிறோம்.....

பாடல்

கூடிநீரைக் கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடு கின்ற நின்தனை
நாடும் வண்ணம்சொல்லாய் நச்சுநா கணையானே!

பொருள்

கூடி = தேவர்களும் , அசுரர்களும் ஒன்றாகக் கூடி (நல்லவர்களும் கெட்டவர்களும் )

நீரைக் கடைந்த வாறும் = கடலை கடைந்து

அமுதம் தேவர் உண்ண = அமுதை தேவர்கள் உண்ண

அசுரரை - அசுரர்களை

வீடும் வண்ணங்களே    =  விட்டுப் போகும்படி (விடுவது வீடு)


செய்துபோன வித்தகமும் = செய்த வித்தகமும்

ஊடு புக்கு = உள்ளே புகுந்து 

எனது ஆவியை உருக்கி = எனது ஆவியை உருக்கி

உண்டிடு கின்ற நின்தனை = உண்ணும் உன்னை

நாடும் வண்ணம் = நான் அடையும் வண்ணம்

சொல்லாய் = சொல்வாய் 

நச்சு நாகணையானே! = நஞ்சை கொண்ட பாம்பணையில் துயில்பவனே


1 comment:

  1. லா.ச.ராமாமிருதம் அவர்களின் "பாற்கடல்" என்ற கதை நினைவு இருக்கிறதா? அதில் சொல்வது இந்தக் கருத்தைத்தானே? குடும்ப வாழ்க்கை என்பது ஒரு பாற்கடல். அதில் இருந்து நஞ்சும் வரும், அமுதும் வரும்.

    ReplyDelete