குறுந்தொகை - புது நலன் இழந்த
சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.
தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.
"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"
இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.
முதலில் பாடலைப் பார்ப்போம்.
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
கடலுங் கானலுந் தோன்றும்
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.
படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.
கொஞ்சம் சீர் பிரிப்போம்.
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே .
பொருள்
இவளே = இதோ நிற்கிறாளே இவள்
நின் சொல் = நீ சொன்ன சொற்களை
கொண்ட =கேட்டு
என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை
தேறி = ஏற்றுக் கொண்டு
பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட
ஞாழற் = ஒரு மரம்
பல் சினை = பல கிளைகளில்
ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்
புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை
இழந்த = இழந்து
புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை
உடையள் = கொண்டு இருக்கிறாள்
உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்
எய்ய = அசை நிலை
உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்
நிலவும் இருளும் போலப் = நிலவும் இருளும் போல
புலவுத் = மாமிச வாடை வீசும்
திரைக் = அலை பாயும்
கடலும் = கடலும்
கானலும் = அதை அடுத்த கரையும்
தோன்றும் = இருக்கும்
மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்
பெண்ணை = பனை மரங்களை கொண்ட
எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே
இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.
கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------
1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி கூறுவது. இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு. அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால் தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.
சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.
அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.
அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும் இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள், என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.
இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான் என்று சொல்லுவார்கள்.
இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில் யாரும் சொல்லுவது இல்லை.
திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே, யார் கொடுத்தது " என்று .
ஞான சம்பந்தர் சொன்னார்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
பெம்மான் இவன் அன்றே என்று கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான் என்று இறைவனை அண்மைச் சுட்டில் காட்டினார்.
பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.
சரி, பாடலுக்கு வருவோம்.
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி
இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல். இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி அங்கே நிற்கிறாள். அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது.
நின் சொல் கொண்ட என் சொல் தேறி
உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு
இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம்.
தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம்.
தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும் அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் "
அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை தலைவி ஏற்றுக் கொண்டாள் .
இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும்.
தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும். ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன் சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான் சொன்னேன் " (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).
மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது.
அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக் கொள்ளா விட்டால் என்ன செய்வது என்ற தலைவனின் பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி தலைவியின் காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.
அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம்.
No comments:
Post a Comment