திருக்குறள் - அடக்கமுடைமை - செறிவு அறிந்து சீர்மை பயக்கும்
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்.
அடக்கத்தை ஒரு பொருளாக நினைத்து காக்க வேண்டும் என்றார்.
அப்படி மனம், மெய், மொழிகளை அடக்கினால் என்ன கிடைக்கும் ? அதனால் என்ன இலாபம் ? என்ற கேள்விகள் ஒரு புறம்.
எப்படி புலன்களை, மனதை, மொழியை அடக்குவது ?
இந்த குறளில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தருகிறார்.
பாடல்
செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
பொருள்
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் = சிறந்த நன்மையை அளிக்கும்
அறிவு அறிந்து = அறிவு அறிந்து
ஆற்றின் = வழியில்
அடங்கப் பெறின் = அடங்கப் பெற்றால்
இந்த குறளுக்கும் , முன்பு சொன்ன கேள்விக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பது போலத் தெரியவில்லையா ?
உள்ளே இறங்கி சிந்திப்போம்.
அறிவு அறிந்து அப்படி என்றால் என்ன ?
அறிவு எதை அறிய வேண்டும் ?
எதை அடக்க வேண்டுமோ அதை அறிவு அறிய வேண்டும்.
முதலில் புலனடக்கத்தை எடுத்துக் கொள்வோம்.
புலன் இன்பங்கள் மூன்று காரணங்களால் நிகழ்கிறது.
ஒன்று, இன்பத்திற்கு காரணமான புறப் பொருள்கள். உதாரணமாக ஒரு இனிப்பு பண்டம், நல்ல இசை, அழகான காட்சிகள்.
இரண்டாவது, அந்த புறப் பொருட்கள் தரும் இன்பம் - சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம் (அல்லது மணம் )
மூன்றாவது - அவற்றை அனுபவிக்க உதவும் கரணங்கள் அதாவது புலன்கள். நாக்கு, கண், தோல், காது, மூக்கு என்பன.
இந்த மூன்றின் தொகுப்பாக புலன் இன்பம் நிகழ்கிறது. இதை அறிய வேண்டும்.
அது மட்டும் அல்ல, ஏன் நமக்கு ஒரு குறிப்பிட்ட ஒன்றின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது என்று அறிய வேண்டும். உடம்புக்கு கெடுதல் என்று அறிந்தும் ஏன் அளவுக்கு அதிகமாக சிலர் உண்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள் ...ஏன் ?
அதை அறிய வேண்டும்.
அறிந்த பின்,
"ஆற்றின்" = ஆற்றுதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள். புலன் இன்பத்தைப் பற்றி அறிந்தால் மட்டும் போதாது அதை எப்படி அடக்க வேண்டும் என்ற வழியை அறிய வேண்டும். சிலர், உணவு கட்டுபாட்டுடன் இருக்கப் போகிறேன் என்று கொலை பட்டினி கிடப்பார்கள். சில நாட்களில் அதை தொடர முடியாமல் மீண்டும் பெரும் தீனி தின்னத் தொடங்கி விடுவார்கள். பட்டினி கிடப்பது அல்ல "வழி". கொஞ்சமாக உண்ண வேண்டும். நேரத்துக்கு உண்ண வேண்டும். இப்படி நல்ல வழிகளை வகுத்துக் கொண்டு அந்த பாதையில் போக வேண்டும்.
வழியை கண்டு பிடிச்சாச்சு...அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
அந்த வழியில் சென்று "அடங்கப் பெறின் " மன மொழி மெய் அடங்கப் பெற்றால்.
செறிவு அறிந்து சீர்மை பயக்கும்.
சீர்மை என்றால் சிறப்பு. சிறப்பைத் தரும்.
செறிவு அறிந்து என்றால் அதன் தன்மை அறிந்து சீர்மை பயக்கும். எந்த அளவுக்கு அடக்கம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பு உண்டாகும்.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள் .
அறிவுதான் அனைத்து அடக்கத்திற்கும் மூல வேர்.
அடக்கம் இல்லாதவன் அறிவில்லாதவன் என்றே அர்த்தம் அல்லது அறிவு இருந்தும் அதை பயன் படுத்தாதவன்.
அறிவின் மூலம், நம் புலன்கள், மனம், மற்றும் மொழி எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து, அதன் தன்மை அறிந்து, சிறந்த வழியில் அதைக் அடக்கினால் சிறப்புகள் வந்து சேரும்.
அடக்கத்தை அறிவு கொண்டு யோசித்து, செயல்படுத்த வேண்டும் என்கிறார். நன்று. நன்றி.
ReplyDelete