திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?
எதற்கும் ஒரு குறிக்கோள், காரணம் இருக்க வேண்டும். காரியம் ஆன பிறகும் காரியம் செய்து கொண்டு இருக்கக் கூடாது.
ஓட்டப் பந்தயம் முடிந்து, எல்லைக் கோட்டை தொட்டு விட்டால், ஓடுவதை நிறுத்த வேண்டும். அப்புறமும் ஓடிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.
சேர வேண்டிய ஊர் வந்து விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டும். அப்புறமும் போய்க் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.
வாழ்வின் அர்த்தம் என்ன ? குறிக்கோள் என்ன ? எதை அடைய இந்த வாழ்க்கை முயல்கிறது ? பணமா ? புகழா ? அறிவா ? உறவா ? அல்லது இது எல்லாமுமா ? எவ்வளவு வேண்டும் ? எப்போது நிறுத்துவது ?
மாணிக்க வாசகர் சொல்கிறார் .... இறை அருள் பெறுவது தான் இந்த வாழ்வின் நோக்கம். அதை அடைந்து விட்டால் பின் வாழ்வில் அர்த்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்.
சில காதலர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும்...இந்த நொடி நான் அப்படியே செத்துரலாம் போல இருக்கு என்று சந்தோஷமாக சொல்லுவார்கள். மகிழ்வின் உச்சம்.
(முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு...முதல்வன் பாடல்)
இது போதும், இதுக்கு மேல் எதுவும் வேண்டாம். இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது என்ற உன்மத்தம் வந்து விடுகிறது.
அருள் பெற்ற அடிகள்...உன்மத்த நிலையில் இறைவனைப் பற்றி பேசித் திரிகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப் பற்றி தங்கள் மனதுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள்.
அதைப் பற்றியெல்லாம் அடிகள் கவலைப் படவில்லை. "சாவது எந்நாளோ" என்று கேட்கிறார்.
பாடல்
உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?
பொருள்
உத்தமன் = உயர்ந்தவன்
அத்தன் = முதல்வன், தந்தை, ஆதியானவன்
உடையான் = உடையவன்
அடியே நினைந்து உருகி = அவனுடைய திருவடிகளை நினைத்து உருகி
மத்த மனத்தொடு = களிப்பு கொண்ட மனத்தோடு
`மால் இவன்' என்ன = இவன் (மனிவாசாகர் ) மயக்கம் உற்றவன் என்று
மன நினைவில் = மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட = என் (மணிவாசகர்) மனதில் தோன்றிய , ஒத்த கருத்துகளை கூறிட
ஊர் ஊர் திரிந்து = ஊர் ஊராகத் திரிந்து
எவரும் = எல்லோரும்
தம் தம் மனத்தன பேச = அவர்கள் மனதில் தோன்றியதைப் பேச
எஞ்ஞான்று கொல் = எப்போது
சாவதுவே? = இறப்பது ?
இறைவனை நினைத்து அவர் மனம் உருகுகிறது.
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி.
உருகிய மனத்தில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
அந்த களிப்பில் ஏதேதோ சொல்லுகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் சொல்கிறார்கள்.
ஒரு புறம் உண்மை கண்ட களிப்பு. மற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் முடியவில்லை. அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் மேல் பற்று சுத்தமாக இல்லை.
இருந்து என்ன செய்ய ?
எப்போது இறப்பது என்று வினவுகிறார்.
இது போன்ற பாடல்களுக்கு உரை படித்து புரிந்து கொள்ள முடியாது.
உரையைப் படித்த பின், அதை மறந்து விடுங்கள்.
நேரடியாகப் பாடலைப் படியுங்கள்.
மனதை என்னவோ செய்யும். அதுதான் அந்தப் பாடலின் உண்மையான அர்த்தம்.
உண்மை தான் மனதை என்னவோ செய்கிறது. ...இந்த மனநிலை வர எண்ணம் ஏங்குகிறது
ReplyDelete"எப்போது சாவது" என்று ஏன் கேட்கிறாரோ! இறைவன் அடி அடைய விரைந்து செல்ல வேண்டும் என்ற அவாவாக இருக்கலாம். நன்றி.
ReplyDeleteஇல்லை பித்த உலகின் பேச்சுக்கள் சகிக்காமல் வேதனையில் சொல்லியது
ReplyDeleteநிச்சயமாக.
ReplyDelete