ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?
எப்படி உணவு உண்ண வேண்டும் என்று ஆசாரக் கோவை மிக விரிவாகச் சொல்கிறது.
அதில் முதல் பாடல்
பாடல்
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து.
பொருள்
நீராடிக் = குளித்து
கால்கழுவி = கால் கழுவி
வாய்பூசி = வாய் கொப்பளித்து
மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையா சுற்றிலும் நீர் வலம் செய்து
உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப் படுபவர்
அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்
உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல
வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவி செல்வார்கள்
அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து
கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )
ஏன் இப்படி செய்ய வேண்டும் ?
நீராடி = புரிகிறது. உடலில் உள்ள அழுக்கு போன பின், புத்துணர்வோடு உண்பது ஒரு சுகம்.
கால் கழுவி = ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்னால் நீராட முடியாது. குறைந்த பட்சம் கால் கழுவ வேண்டும். கண்ட இடத்திலும் நடப்பதால், காலில் அசுத்தங்கள் ஒட்டி இருக்கலாம். அவை உணவோடு சேர்ந்து உள்ளே போகாமல் இருக்க கால் கழுவி.
வாய் பூசி = உண்பதற்கு முன்னால் வேறு எதையாவது குடித்திருப்போம் (காப்பி, டீ ). அது நாவில் ஒட்டி இருக்கும். உணவின் சுவையை அறிய விடாது. வாய் கழவி விட்டால் , உணவின் சுவை நன்றாகத் தெரியும்.
நீர் வலம் செய்து = நீர் சுற்றிலும் இருந்தால் எறும்பு போன்ற ஜந்துக்கள் உணவை நாடி வராது. அதை விட முக்கியமானது, பசி அவசரத்தில் பக்கத்தில் நீர் எடுத்து வைக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால், திடீரென்று விக்கல் வந்தால் நீர் இல்லாமல் சிரமப் படுவோம். முதலிலேயே நீர் வலம் செய்தால், அந்த நீர் இருக்கும் அல்லவா.
அப்படி எல்லாம் செய்ய வில்லை என்றால் அரக்கன் வந்து உங்கள் உணவை கொண்டு போய் விடுவான் என்று சும்மா பயமுருதுரதுதான்....:)
No comments:
Post a Comment