ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன்
சில பேர் சாப்பாட்டுக்கு முன்னால் உட்கார்ந்தால் , அவன் பாட்டுக்கு சாப்பிடுவான், போவான். மத்தவங்க சாப்பிட்டாங்களா, யார் இன்னும் சாப்பிடனும், அதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பான்.
அப்படி இருக்கக் கூடாது. தனக்கு முன்னால் யார் யார் எல்லாம் உணவு உண்டார்கள் என்று கேட்க வேண்டும். அதற்கு ஒரு பட்டியல் தருகிறது ஆசாரக் கோவை. அந்த பட்டியலில் உள்ளவர்கள் முதலில் உண்ண வேண்டும். அப்புறம் தான் நாம் சாப்பிட வேண்டும்.
முதலில் விருந்தினர் உண்ண வேண்டும். மனைவி மக்கள் கூட இல்லை. முதல் இடம் விருந்தினருக்கு. அமிழ்தாயினும் விருந்து புறத்து இருக்க உண்ணாத பண்பாடு நமது பண்பாடு.
அடுத்தது, வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு உணவு தர வேண்டும்.
அடுத்தது, வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்கள்....பசு, கிளி போன்றவற்றிற்கு உணவு தர வேண்டும்.
இவர்களுக்கு உணவு தந்த பின்னரே வீட்டில் உள்ள மற்றவர்கள் உண்ண வேண்டும்.
பாடல்
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
பொருள்
விருந்தினர் = விருந்தினர்
மூத்தோர் = வயதில் மூத்தோர்
பசு = பசு
சிறை பிள்ளை = கிளிப் பிள்ளை
இவர்க்கூண் = இவர்கு ஊண் (உணவு )
கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும் = கொடுத்து + அல்லால் + உண்ணாரே + என்றும்
ஒழுக்கம் பிழையா தவர் = ஒழுக்கம் தவறாதவர்கள்
இன்று வாழ்க்கை நெருக்கடி. அலுவகலம் போக வேண்டும், பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டும் என்று முதலில் அவர்களுக்கு உணவு தந்து பின் வீட்டில் உள்ள பெரியவர்களை கவனிக்க வேண்டி இருக்கிறது.
இருந்தும், பண்பாட்டின் உச்சம் தொட்டு வாழ்ந்த இனம் இந்த தமிழ் இனம்.
நம் கலாசாரத்தை கடை பிடிக்க முடியாவிட்டாலும் அறிந்தாவது கொள்வோமே.
மனதின் ஓரம் கிடக்கட்டும். என்றாவது இதில் கொஞ்சமாவது செய்ய முடிந்தால் கூட நல்லதுதான்.
No comments:
Post a Comment