திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?
எது நம்முடையது ?
செல்வம் நம்முடையதா ? நேற்று வரை யாரிடமோ இருந்தது ...இன்று நம்மிடம் இருக்கிறது...நாளை யாரிடம் இருக்குமோ ?
நம் மனைவி, கணவன், மக்கள் நம்முடையதா ? இல்லை, அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அவர்களுக்கென்று ஆசாபாசம் இருக்கிறது, கனவுகள்,கற்பனைகள் என்று அவர்கள் வாழ்க்கை தனி.
அவர்கள் நம் சொத்து அல்ல.
சரி நம் நிழலாவது நமக்குச் சொந்தமா என்றால் அதுவும் இல்லை.
வெயிலில் நடந்து போகிறோம்.கால் சுடுகிறது. நம் நிழல் நமக்கு உதவுமா ? உதவாது.
சரி, நம் உடம்பாவது நமக்குச் சொந்தமா என்றால் இல்லை. நாம் சொல்கிறபடி நம் உடல் கேட்குமா ? நரைக்காதே என்றால் கேட்கிறதா ? உதிராதே என்றால் உதிராமல் இருக்கிறதா ?
இந்த உயிர் நம் சொந்தமா ?
போகாதே என்றால் இருக்குமா ? அது பாட்டுக்கு போய் விடுகிறது.
பின் எதுதான் நம் சொந்தம் ?
பாடல்
தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்3
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
பொருள்
தன்னது சாயை = தன்னுடைய நிழல்
தனக்குத வாதுகண்டு = தனக்கு உதவாதது கண்டு
என்னது = என்னுடையது
மாடென் றிருப்பர்கள் = செல்வம் என்று இருப்பார்கள்
ஏழைகள் = ஏழைகள்
உன்னுயிர் போம் = உயிர் ஒரு நாள் போய் விடும்
உடல் ஒக்கப் பிறந்தது = உடலோடு கூடவே பிறந்தாலும், உயிர் போய் விடுகிறது.
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே = கண்ணால் பார்த்து கண்டு கொள்ளுங்கள்
அருமை ஐயா
ReplyDeleteநல்ல வேளை ... சிவனுக்குப் பூசை பண்ணுங்கள் என்று எழுதவில்லை!
ReplyDeleteகாணொளி கண்டு கொளீரே என்பதே சிவனை கண்டு கொளீரே என்றே அர்த்தம்....
Delete