இராமாயணம் - துன்பம் வரும் வழி
எல்லா உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன. துன்பத்தை வெறுக்கின்றன.
ஆனாலும், அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வழியில் துன்பத்தில் உழல்கின்றன.
துன்பம் எப்படி வருகிறது ? துன்பம் எங்கிருந்து வருகிறது ?
ஆழ்ந்து சிந்தித்தால் இன்று நமக்கு இருக்கும் துன்பத்திற்கு நாம் முன்பு செய்த அல்லது செய்யாமல் விட்ட ஏதோ ஒன்று காரணமாக இருக்கும்.
நான் முற்பிறவியில் செய்ததைப் பற்றி சொல்லவில்லை.
படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் இருந்தால் பின்னாளில் ஏழ்மை வரத்தான் செய்யும்.
இளமைக் காலத்தில் நல்லது சொன்னால் கேட்காமல் இருந்தால் பின்னாளில் துன்பப் படத்தான் வேண்டும்.
பொறாமை, பேராசை, போன்றவை அளவுக்கு மீறிய செயல்களை செய்யத் தூண்டும்...அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது, நிறைய வட்டி வரும் என்று எதிலோ பணத்தை போட்டு முதல் இழந்து வருந்துவது நிகழும்.
நீங்கள் இப்போது செய்யும், செய்யாமல் விடுவது பின்னாளில் உங்களுக்கு விளைவுகளைத் தரும்.
என்ன செய்கிறீர்கள் என்று அறிந்து செய்யுங்கள்.
வசிட்டர் சொல்கிறார்....இராமா இதுவரை நீ சூது முதலிய செயல்களில் ஈடுபடவில்லை. எனவே,அதனால் வரும் துன்பங்கள் உனக்கு இல்லை. இருப்பினும், அனைத்து துன்பங்களுக்கும் சூது முதலிய கெட்ட செயல்களே காரணம். துன்பங்களுக்கு மூல காரணம் என்ன என்பதை அறிந்து செயல்படு என்கிறார்.
பாடல்
‘சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்,
நீதி மைந்த! நினக்கு இலை; ஆயினும்,
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே.
பொருள்
‘சூது = சூது
முந்துறச் = அதற்கு முற்பட்ட தீய செயல்கள்
சொல்லிய மாத் துயர் = சொல்லப் பட்ட பெரிய துன்பங்கள்
நீதி மைந்த! = நீதியின் மைந்தனே
நினக்கு இலை;= உனக்கு இல்லை
ஆயினும் = இருப்பினும்
ஏதம் என்பன யாவையும் = துன்பம் என்று சொல்லப்பட்டவை யாவையும்
எய்துதற்கு = அடைவதற்கு
ஓதும் மூலம் = சொல்லிய மூலம்
அவை என ஓர்தியே = அவை என்று உணர்
அவை என்று அவர் சொல்லி விட்டு விட்டார்.
அந்த 'அவை"யில் எது எது வரும் என்று நிறைய பட்டியல் தருகிறார்கள்...
சோம்பேறித்தனம், கள் உண்ணல் , காமம், கோபம், இன் சொல் சொல்லாமை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
எதுவானாலும், துன்பத்திற்கு காரணம் நல்லன அல்லாத செயல்கள்.
அன்று செய்தது இன்று வந்தது.
இன்று செய்தால் நாளை கட்டாயம் வரும்.
நாளை துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இன்றை சரி செய்யுங்கள்.
No comments:
Post a Comment