பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள்
இறைவனை யார் அடையலாம் ? அவனை அடைவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா ? இந்த குலத்தில் பிறந்திருக்க வேண்டும், இந்த புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், இந்த இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை கடை பிடித்திருக்க வேண்டும் என்று பட்டியல் இருக்கிறதா ?
அப்படி இருப்பதாய் பல பேர் சொல்லித் திரிகிறார்கள்.
அது போகட்டும், இறைவனை வழிபடும் முறை என்று ஒன்று இருக்கிறதா ? குளித்து, முழுகி, சமய சின்னங்களை உடல் எங்கும் தரித்து, பக்திப் பாடல்களை பாடிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று ஏதாவது முறை இருக்கிறதா ?
இல்லை.
இல்லை என்று யார் சொன்னது ?
பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்...வேடன், மந்திரி, சின்னப் பிள்ளை, அரசன், வயதான பெரியவர், குயவன், இரண்டு பெண்டாட்டி கட்டியவன் என்று யார் யாரோ இறைவனை
அடைந்திருக்கிறார்கள்...அவர்களின் வாழ்கை தொகுதிதான் பெரிய புராணம். நம் தமிழ் உலகம் அதை பெரிய புராணம் என்று கொண்டாடுகிறது.
யார் வேண்டுமானாலும் இறைவனை அடையலாம்.
எப்படி வேண்டுமானாலும் இறைவனை அடையலாம் என்று எடுத்துச் சொன்ன நூல் பெரிய புராணம்.
பாடியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.
பாயிரத்தில் தான் செய்யும் நூலின் பெயரை கூறுகிறார் சேக்கிழார்.
இந்த உலகில் இரண்டு இருள் உண்டு. ஒன்று இரவு நேரத்தில் வரும் இருள். இன்னொன்று மக்கள் மனதில் உள்ள அறியாமை என்ற இருள். புற இருளை போக்குவது சூரியன். அக இருளை போக்க வந்த இந்த நூலின் பெயர் திருத் தொண்டர் புராணம்
என்று அவர் கூறுகிறார்.
பாடல்
இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.
பொருள்
இங்கு = இங்கு
இதன் = இந்த நூலின்
நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்
இவ் உலகத்து = இந்த உலகத்தில்
முன்னாள் = முன்னாளில்
தங்கு இருள் = தங்கிய இருள்
இரண்டில் = இரண்டில்
மாக்கள் = விலங்குகள்
சிந்தையுள் = மனதில் , புத்தியில்
சார்ந்து நின்ற பொங்கிய இருளை = சார்ந்து நின்ற பொங்கிய இருளை
ஏனைப் = மற்ற
புற இருள் போக்கு கின்ற = புற இருளை போக்குகின்ற
செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல
நீக்கும் = அக இருளை நீக்கும்
திருத் தொண்டர் புராணம் என்பாம் = திரு தொண்டர் புராணம் என்று சொல்லுவோம்
அக இருளின் தன்மை சொல்கிறார் சேக்கிழார்....
சார்ந்து + நின்று + பொங்கிய இருள்.
இந்த அக இருள் , அறியாமை, ஆணவம் என்பது முதலில் நம்மைச் சார்ந்து நிற்கிறது. நாம் இல்லாமல் அது இல்லை.
பின்னால், அது நிலைத்து நிற்கிறது. நாளடைவில் இந்த அக இருள் நம்மில் ஒரு பகுதியாகவே மாறி விடுகிறது.
பின், அது பொங்குகிறது. அறியாமை நாளும் வளர்கிறது. முட்டாள் தனத்திற்கு எல்லை ஏது.
இப்படி சார்ந்து, நின்று பொங்கும் அக இருளை நீக்க வந்த நூல் பெரிய புராணம்.
அக இருள் போக வேண்டும் என்றால், இந்த நூலைப் படியுங்கள் என்கிறார் தெய்வப் புலவர்.
அது வெறும் அடியவர்களின் வரலாற்று நூல் அல்ல. நமக்கு வேண்டிய அறிவை அள்ளி அள்ளி தரும் நூல்.
நேரமிருப்பின், படித்துப் பாருங்கள்.
அக இருள் நீங்கும். அறிவு ஒளி வீசும்.
No comments:
Post a Comment