திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம்
நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. குளிர்ச்சியாக இருக்கிறது. பால் போல ஒளி தருகிறது.
நாளும் அது வளரும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முழு பௌர்ணமி அன்று மிக மிக அழகாக இருக்கும். கடற்கரையில், முழு நிலவின் அழகை இரசித்துக் கொண்டே இருக்கலாம்.
அந்த முழு நிலவு அப்படியே இருக்குமா ?
கொஞ்சம் கொஞ்சமாக தேயும். ஒளி மங்கும். ஒரு நாள் ஒன்றும் இல்லாத அம்மாவாசையாகி விடும். முற்றும் இருண்டு விடும்.
செல்வமும் அது போலத்தான். கொஞ்சம் கொஞ்சமாக வரும். வரும் போது சந்தோஷமாக இருக்கும்.
வாடகை வரும், வட்டி வரும், போட்ட முதல் நாளும் பெருகும் போது மனம் சந்தோஷப் படும்.
அது அப்படியே இருக்கும் என்று நினைக்காதே.
செல்வம் என்றால் "செல்வோம்" என்று தான் அர்த்தம் என்கிறார் திருமூலர்.
வரும் போகும் செல்வத்தை விட்டு, அவனை நாடுங்கள். பெரு மழை போல அவன் கருணை பெருக்கெடுத்து வரும் என்கிறார்.
பாடல்
இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே
பொருள்
இயக்குறு திங்கள் = உலவும் திங்கள்
இருட்பிழம் பொக்குந் = இருண்ட பகுதியை ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் = துன்பத்தைத் தரும் செல்வத்தை. துயங்குதல் என்ற சொல்லுக்கு தளர்வைத் தரும், ஆயாசத்தைத் தரும் என்று பொருள் சொல்லலாம்.செல்வம் தேடித் தேடி தளர்ந்து போவோம்.
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் விடுதியோ விட்டிடு வாயேல் உடாத வெற்றரை நேர்ந் துயங்குவேன் ஐயோ உன்னருள் அடையநான் இங்கே படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் பாடெலாம் நீ அறியாயோ
என்பார் வள்ளலார்.
கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.
என்பார் மணிவாசகர்.
சொல்லவும் வேண்டா = அதைப் பற்றி சொல்லவும் வேண்டாம். பார்த்தாலே தெரியும்
மயக்கற நாடுமின் = மயக்கம் இல்லாமல் நாடுங்கள்
வானவர் கோனைப் = வானவர்களின் அரசனை
பெயற்கொண்டல் போலப் = பெய்யும் முகில் போல
பெருஞ்செல்வ மாமே = பெரும் செல்வம் அதுவே
No comments:
Post a Comment