இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அன்பின்றி ஆக்கம் இல்லை
எல்லா அற நூல்களும் புலனை அடக்கு, புலனை அடக்கு என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்கின்றன.
எல்லா புலன்களையும் அடக்கிய பின் என்ன வாழ்க்கை ? வாழ்க்கை என்பதே அனுபவிக்கத்தானே, புலன்களை எல்லாம் அடக்கிய பின் மரக்கட்டை மாதிரி, கல்லு மாதிரி வாழ்வது ஒரு வாழ்க்கையா என்ற கேள்வி எழும் அல்லவா ?
வசிட்டர் சொல்லுகிறார்....இந்த புலன்களை எல்லாம் அடக்க வேண்டாம்...அன்பு ஒன்றே போதும்....
எதுக்காக இந்த முனிவர்களும், தேவர்களும் இந்த புலன்களை கொல்லுவது எதற்காக ? முன்பும் இனியும் , இந்த மூன்று உலகத்திலும் அன்பை விட சிறந்தது ஒன்று உண்டா ?
பாடல்
என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம்
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?
பொருள்
என்பு = எலும்பு
தோல் = தோல்
உடையார்க்கும் = உடையவர்களுக்கும் (எலும்பும் தோலுமாக உள்ள முனிவர்கள்)
இலார்க்கும் = இல்லாதவர்களுக்கும் (தேவர்களும் )
தம் = தங்களுடைய
வன் = வலிமையான
பகைப் = பகையான
புலன் = புலன்கள்
மாசு அற = குற்றம் இல்லாமல்
மாய்ப்பது என்? = கொல்வது ஏன் ?
முன்பு பின்பு இன்றி = முன்பும், பின்பும் இன்றி
மூ உலகத்தினும் = மூன்று உலகத்திலும்
அன்பின் நல்லது = அன்பை விட
ஓர் ஆக்கம் உண்டாகுமோ? = ஒரு சிறப்பு உண்டாகுமோ ? உண்டாகாது என்பது அர்த்தம்.
சரி, அன்பு உயர்ந்ததுதான். அதுக்காக புலனடக்கம் இல்லாமல் கண்டதையும் செய்யலாமா ?
ஒரே குழப்பமா இருக்கே ?
ஒரு குழப்பமும் இல்லை...
அன்பு முதலில் தன்னில் இருந்து தொடங்க வேண்டும்....தன் மேல் அன்பு உள்ள ஒருவன் தனக்கு தீமை செய்வானா ? மாட்டான் அல்லவா ?
ஒழுங்காக உண்பது, உடலை பேணி காப்பது, தூய்மையாக வைத்து இருப்பது, ஒழுக்கமான வழியில் செல்வது உடலின் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடு .
தன் உடலைத் தாண்டி, அடுத்து தன் குடும்பத்தை நேசிப்பவன் உண்மையாக உழைப்பான், நேர்மையாக உழைப்பான்.
அதுத்து தன் குடும்பத்தை தாண்டி மற்றவர்களையும் நேசிப்பவன் அவர்களுக்குத் துன்பம் செய்ய மாட்டான், கொலை, களவு, வன்முறை என்று மற்றவர்களை துன்பம் செய்ய மாட்டான்.
ஆழ்ந்து யோசித்தால் அனைத்து அறமில்லாத செயல்களுக்கும் காரணம் தன் மேலும் , பிறர் மேலும் அன்பு இல்லாததே என்று புரியும்.
இதையே வள்ளுவரும்
அன்பில் அதனை வெயில் போல் காயுமே
அன்பில் அதனை அறம்
என்றார்.
அன்பு கொள்ளுங்கள், அதைவிட பெரிய அறம் ஒன்று இல்லை.
"அன்பு மட்டும் எப்படிப் போதும்?" என்ற கேள்விக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பதில் எழுதி விட்டாய்!!
ReplyDelete