Pages

Friday, April 17, 2015

திருக்குறள் - நினைக்கப்படும்

திருக்குறள் - நினைக்கப்படும் 


நல்லவன் எல்லாம் துன்பப் படுகிறான்.

தீமை செய்பவன் நன்றாக சுகமாக இருக்கிறான்.

இதுதான் நாம் வாழ்வில் அன்றாடம் காண்பது.

சட்டத்தை மதிப்பவன், சமுதாயத்திற்கு பயப்படுபவன், நீதி நேர்மையை மதிப்பவன் துன்பத்தில் உழல்கிறான்.

பொய், புரட்டு, இலஞ்சம், இலாவண்யம், கொலை, கொள்ளை, திருட்டு என்று இருப்பவன் பெரிய பணக்காரனாக, பேரும் பெகுழுமாக இருக்கிறான்.

இப்படி இருந்தால் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தோன்றும் ?

அறம் என்று ஒன்று இல்லையா ? இது எப்படி என்று வள்ளுவரிடம் கேட்டால் , இது நினைக்கப்படும் என்கிறார்.

பாடல்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

பொருள்

அவ்விய நெஞ்சத்தான் = கோட்டம் உள்ள மனம் கொண்டவனின்

ஆக்கமும் = செல்வமும், புகழும், பெருமையும்

செவ்வியான் = நேரிய வழியில் வாழ்பவனது


கேடும் = துன்பமான வாழ்கையும்

நினைக்கப் படும் = யோசிக்கப் பட வேண்டிய விஷயம்.


கேள்வி கேட்டால், நீயே யோசித்துக் கொள் என்கிறார் வள்ளுவர்.

காரணம் இல்லாமல் இல்லை.

நாம் யோசிப்போம்.

முதலில் இரண்டு மாணவர்களை எடுத்துக் கொள்வோம்.

ஒருவன் நல்லவன். மற்றவன் கெட்டவன் .

நல்ல மாணவன், தினமும் ஒழுங்காக படிப்பான், அனைத்து வகுப்புகளுக்கும் சென்று ஆசிரியர் சொல்வதை கவனமாக கேட்பான், அவர் சொல்வதை குறிப்பு எடுத்துக்  கொள்வான். வீட்டில் வந்து அவர் சொன்னதை படித்துப் பார்ப்பான். கடினமாக உழைப்பான். பரிட்சையில் ஒழுங்காக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுகிறான்.


மற்றவன், படிப்பது இல்லை, பாதி நாள் பள்ளிக்கு வருவது இல்லை, ஆசிரியர் சொல்லவதை கேட்பது இல்லை. பரிட்சையில் காப்பி அடித்து, பிட் வைத்து எழுதி பாஸ் பண்ணி அவன் நல்ல மாணவனை விட அதிகம் மதிப்பெண் பெற்று விடுகிறான்.


இப்போது யோசித்துப் பாருங்கள்.

கெட்டவனின் அதிக மதிப்பெண்களா, நல்ல மாணவனின் குறைந்த மதிப்பெண்களா  எது உயர்ந்தது ?

இருந்தாலும், நல்ல மாணவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காதே, நல்ல வேலை  கிடைக்காதே என்று நீங்கள் நினைக்கலாம்.

கெட்ட மாணவன், கல்லூரியிலும் இதையே தான் செய்வான். அப்படியே கல்லூரியில் வெற்றி பெற்று விட்டால் கூட , வேலை கிடைத்தால் கூட, செய்யும்  வேலைகளை தப்பும் தவறுமாக செய்து என்றோ ஒரு நாள் தனக்கும் , தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் கேட்டினையே தேடித் தருவான். அதில்  சந்தேகமே இல்லை. வேலை தெரியாமல் இருந்து கொண்டு அந்த வேலையை தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படுவான். செய்ய கூடாதனவற்றை எல்லாம் செய்வான். அவனுக்கு கீழேவேலை பார்ப்பவன் அவனை மதிக்க மாட்டான், அவனை ஏமாற்றுவான், அவனை பயமுறுத்துவான். நாளும் செத்து செத்து பிழைக்க வேண்டும்.

நினைத்துப் பாருங்கள்,  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் சிறந்ததா ? அப்படி ஒரு  வாழ்கை உங்களுக்கு வேண்டுமா ?

ஊரை ஏமாற்றி வாழ்பவன் சிறப்பாக இருக்கிறானே என்று நாம் நினைக்கலாம் ?

அவன் சிறப்பு என்ன என்று அவனுக்குத் தெரியும். என்றோ ஒரு நாள் சிறை செல்ல வேண்டி  இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். மரியாதை இழக்க வேண்டி வரும்.  மனைவியின் முன், பெற்ற பிள்ளைகளின் முன் தலை குனிந்து நிற்க வேண்டும் என்று நாளும் அவன் மனதுக்குள் புளுங்குவான். நிம்மதி  இருக்காது.

கெட்டவன் பெற்ற செல்வம் எப்படி வந்தது ? பல கெட்டவர்களின் கூட்டால் வந்தது. கெட்டவர்களின் சகவாசம் எங்கே கொண்டு போய் விடுமோ என்று அவன்  நாளும் நடுங்கிக் கொண்டிருப்பான். நம்மைப் போலத்தானே அவனும் ஒரு அயோக்கியன். நாளை என்னை காட்டி கொடுத்து விட்டால் என்ன செய்வது  என்று யாரைப் பார்த்தாலும் பயப் படுவான். நாளும் பயந்து பயந்து வாழ்வான்.

கெட்ட வழியில் பணம் சேர்த்தவன் எல்லோருக்கும் பயப்படவேண்டும்..

அதுமட்டும் அல்ல, எப்போ இந்த செல்வம் போகுமோ என்று மனதுக்குள் வருந்திக் கொண்டு  இருப்பான்.  இருக்கும் போதே அனுபவித்து விடுவோம் என்று  என்னென்ன தீய வழிகள் இருக்கிறதோ அத்தனையும் முயல்வான். அது அவனை மேலும் தீய வழியில் செலுத்தும்.

அது மட்டும் அல்ல, தீய வழியில் வந்த செல்வம் போகும்போது, அது நல்ல வழியில்  சேர்த்த கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் சேர்த்து கொண்டு போகும்.

கெட்ட வழியில் வந்த செல்வத்தை பாதுகாக்க மேலும் பல கெட்ட வழிகளில் செல்ல  வேண்டி இருக்கும். பணத்தை பதுக்க வேண்டும், மற்றவன் பேரில் சொத்து  வாங்க வேண்டி வரும், அவன் ஏமாற்றி விடாமல் இருக்க அவனை தாஜா செய்ய வேண்டும், மீறினால் அவனை கொலையும் செய்ய வேண்டும், எங்கே இந்த  கெட்டவன் தன்னை கொலை செய்து விடுவானோ என்று மற்றவன்  கெட்டவனை கொலை செய்ய வழி தேடிக் கொண்டிருப்பான்.

தூக்கம் போகும்.

நிம்மதி போகும்.

மானம் மரியாதை போகும்.

யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும்.

மாறாக, நல்லவன் சேர்த்த சொத்து கொஞ்சமாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழ  முடியும். நிம்மதியாக இருக்க முடியும். மரியாதையுடன் வாழ முடியும்.

நினைத்துப் பாருங்கள் - செவியான் கேடு உண்மையிலேயே கேடா ?

ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் இது. இது பற்றி மேலும் சிந்திப்போம்.



1 comment:

  1. சுருக்கமாகச் சொன்னாள்: "கெட்டவனுக்கு மன நிம்மதி இருக்காது; நல்லவனுக்கு இருக்கும்" என்கிறாய்.

    ஹ்ம்ம்... யாருக்குத் தெரியும்?

    நல்லவர்கள் பல வழிகளில் வருந்துகிறார்கள் என்பது நிஜம். ஒரு வாய் சோற்றுக்கும் வழி இல்லாமல் வருந்தும் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், கெட்டவர்கள் உள்ளுக்குள் கஷ்டப்படுகிரார்களா என்பது யாருக்குத் தெரியும்? நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் கதை அது.

    ReplyDelete