பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி
வெளி ஊரில் உள்ள உங்கள் நண்பர் வீட்டுக்குப் போய் இருக்கிறீர்கள். நண்பர் வசதியானவர். நன்றாக உபசரித்து, உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார். இரவு வருகிறது. உங்களுக்கு என்று ஒரு தனி அறை தந்து "எங்கே படுத்துக் கொள்ளுங்கள். A C இருக்கிறது. இங்கே தண்ணி இருக்கிறது..." என்று எல்லாம் எடுத்து வைத்துவிட்டு போகிறார். நீங்களும் பயணக் களைப்பு, உண்ட மயக்கம் 'அப்பாட' என்று நிம்மதியாக படுக்கிறீர்கள்.
சிறிது நேரத்தில் நண்பர் வந்து "ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்...இராத்திரி ஒரு பத்து பதினொரு மணிக்கு ஒரு ஆறடி நீள கரிய நாகப் பாம்பு ஒண்ணு இந்த ஜன்னல் வழியா வந்து அந்த ஜன்னல் வழியா போயிரும். உங்களை ஒண்ணும் செய்யாது...நீங்க பாட்டுக்கு தூங்குங்க" என்று சொல்லி விட்டுப் போகிறார்.
அப்புறம் தூக்கம் வருமா ? எப்போ பாம்பு வருமோ, என்ன செய்யுமோ என்று நெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ளும் அல்லவா ? களைப்பு போயிரும், தூக்கம் போயிரும்....பயம் மட்டுமே இருக்கும்.
அது போல, இந்த வாழ்கை.
எல்லா சுகமும் இருக்கிறது...உணவு, உடை, மனைவி , மக்கள், நண்பர்கள், உறவு, சொத்து சுகம் எல்லாம் இருக்கிறது...புலன் இன்பம் அல்லது ஆசை என்ற பாம்பு அப்பப்ப வந்து போகும்...மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை....
இன்பங்களை அனுபவிக்க முடியுமா ? பாம்போடு வாழ முடியுமா ?
வேண்டாம்ப்பா இந்த பிறவி ...போதும், பட்டது எல்லாம் போதும், இனி ஒரு பிறவி வேண்டாம் என்கிறார் திருமங்கையாழ்வார்.
பாடல்
தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா.
பொருள்
தூங்கார் = சஞ்சலம் மிக்க
பிறவிக்க ளின்னம்= பிறவிகளில் இன்னும்
புகப்பெய்து = நுழைய வைத்து
வாங்காயென்று = என்னை நீ வாங்கிக் கொள்ள மாட்டாய் என்று
சிந்தித்து = நினைத்து
நானதற் கஞ்சி = நான் அதற்கு அஞ்சி
பாம்போடு = பாம்போடு
ஒரு கூ ரையிலே = ஒரே கூரையின் கீழ் (வீட்டில் )
பயின்றாற்போல் = வசித்தார் போல
தாங்காதுள் ளம்தள்ளும் = என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாது
என் தாமரைக் கண்ணா.= தாமரை போன்ற கண்களை உடையவனே
தூங்கும்போது பாம்பு வரும் என்று தெரிந்தும் தூங்குபவர்களை என்ன செய்ய முடியும் ?
No comments:
Post a Comment