திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை
அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.
"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "
தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...
அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா
என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.
தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி
அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று குளியல் அறை நோக்கி ஓடினாள் ...
தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....
பாடல்
`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்
`முத்து அன்ன = முத்தைப் போன்ற
வெள் = வெண்மையான
நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே
முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து
எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து
"என் அத்தன் = என் தந்தை
ஆனந்தன் = என் ஆனந்தம் ஆனவன்
அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்
என்று = என்று
அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி
தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்
வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற
`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்
ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே
பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே
புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்
புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து
ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும் உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ
`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன உன்னுடைய அன்பு"
எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி
`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்
பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்
`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்
எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே
மிக மிக இனிய பாடல்.
இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.
காத்திருக்கிறோம்!
ReplyDelete