இராமாயணம் - இராமன் ஏன் பிறந்தான் ?
காலம் செல்லச் செல்ல , மனிதன் எது சரி , எது தவறு என்று தடுமாறத் தொடங்குகிறான்.
அறம் எது, மறம் எது என்பதில் குழப்பம் வந்து விடுகிறது. சமுதாயம் வழி தெரியாமல் தவிக்கத் தொடங்குகிறது.
நல்லவர்கள் துன்பப் படுவதும், கெட்டவர்கள் இன்பமாக இருப்பதும் மக்களை குழப்பத் தொடங்குகின்றன.
பதவியில் இருக்கும் கெட்டவர்கள் சட்டங்களை தங்கள் வசதிக்கு மாற்றுவார்கள்.
தீவினைகள் வளர்ந்து கொண்டே போகும்.
அறம் நாளும் சோதனைக்கு உள்ளாகும்.
தீமையின் அளவு அதிகமாகும் போது, அது, அதன் பளுவாலேயே நசுங்கி அழியும்.
அந்த மாதிரி சமயத்தில் மக்களை தீய வழியில் இருந்து மாற்றி நல் வழி படுத்த அவதாரங்கள் நிகழ்கின்றன. பெரியவர்கள் தோன்றுவார்கள்.
தீவினை செய்த தீவினையாலும், அறம் செய்த நல்லவைகளாலும் இராமன் தோன்றினான்.
பாடல்
‘விரிந்திடு தீவினை செய்த
வெவ்விய தீவினையாலும்.
அருங் கடை இல் மறை அறைந்த
அறம் செய்த அறத்தாலும்.
இருங் கடகக் கரதலத்து இவ்
எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க்
கவுசலை என்பாள் பயந்தாள்.
பொருள்
( http://interestingtamilpoems.blogspot.in/2015/05/blog-post.html
)
‘விரிந்திடு = நாளும் பெருகிக் கொண்டே செல்லும்
தீவினை = தீய செயல்கள்
செய்த = செய்த
வெவ்விய தீவினையாலும் = பெரிய தீய வினைகளாலும்
அருங் = அருமையான, பெருமையான
கடை இல் = முடிவு இல்லாத
மறை அறைந்த = வேதங்கள் சொன்ன
அறம் செய்த அறத்தாலும். = அறம் செய்த அறத்தாலும்
இருங் கடகக் கரதலத்து = கடகம் என்ற ஆபரணம் அணிந்த கைகள்
இவ் = இந்த
எழுத அரிய திருமேனிக் = எழுத முடியாத அழகைக் கொண்ட
கருங்கடலைச் = கரிய கடல் போன்ற மேனி கொண்ட இராமனை
செங் கனி வாய்க் = சிவந்த இதழ்களை கொண்ட
கவுசலை என்பாள் பயந்தாள் = கௌசலை என்பவள் பெற்றாள்
தீமை செய்த தீமையாலும்
நன்மை செய்த நன்மையாலும் இராமன் பிறந்தான்.
அழகான பொருள் நிறைந்த பாடல்
உன்மை, அழகான பொருள் நிறைந்த பாடல் தான்
ReplyDelete//தீமையின் அளவு அதிகமாகும் போது, அது, அதன் பளுவாலேயே நசுங்கி அழியும்.//
Power without wisdom will fall on its own weight - Horace
//தீமை செய்த தீமையாலும்
நன்மை செய்த நன்மையாலும் இராமன் பிறந்தான்.//
அழகு