பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1
துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.
துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?
குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.
எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.
நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.
அறிவியல் என்ன செய்கிறது ?
அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.
இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.
எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.
இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.
எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.
எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.
சரி.
ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.
நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?
இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.
இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.
நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.
குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.
இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற நிறைவான எண்ணம் வருகிறது.
பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.
இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.
பாடல்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
பொருள்
வையம் = உலகம், பூமி
தகளியா = விளக்காக
வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே
நெய்யாக = நெய்யாக
வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே
விளக்காக = அந்த விளக்கின் சுடராக
செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய
ஆழி யானடிக்கே = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே
சூட்டினேஞ் = சூட்டினேன்
சொன் மாலை = சொற்களால் ஆன மாலை
இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.
துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப் பெரிதாக.
உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக
இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.
முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள்.
இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ?
இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment