வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?
நம்பிக்கை.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு செல்வம், அதிகாரம், இருந்தாலும்...வாழ்வில் சில நேரம் வரும்...நம்பிக்கை தளரும் நேரம் வரும்....
அத்தனை செல்வமும், அதிகாரமும், உறவும், நட்பும் உதவாமல் போகும் காலம் வரும்.
நம் பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று சில நேரம் வரும்.
நம்பிக்கை தளரும். என்னால் முடியாது என்று மனமும் உடலும் சோர்ந்து போகும் நேரம் வரும்.
என்ன செய்வது ? யாரைக் கேட்பது, யார் உதவுவார்கள், எப்படி சமாளிப்பது என்று திகைக்கும் காலம் வரும்.
அந்த நேரத்தில் நம்பிக்கையை ஊட்ட நம் இலக்கியங்கள் உதவுகின்றன.
இறைவனை நம்பு. அவன் உனக்கு உதவே காத்து இருக்கிறான்...அவனுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்று படித்துப் படித்து சொல்கின்றன.
அப்படி ஒரு நெருக்கடி பாண்டவர்களுக்கு வந்தது.....
பாண்டவர்கள் வன வாசம் செய்யும் காலம்.
அந்த நேரத்தில் துருவாசர் என்ற முனிவர் தன் சீடர்கள் புடை சூழ துரியோதனின் அரண்மனைக்கு வந்தார். துரியோதனனும் அவரை நன்றாக உபசரித்தான். அதில் மகிழ்ந்த அவர், "உனக்கு என்ன வேண்டும் " என்று கேட்டார்.
"முனிவரே, எப்படி இங்கு வந்து விருந்து உண்டு எங்களை மகிழ்வித்தீர்களோ, அதே போல் பாண்டவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
பாண்டவர்களோ வனத்தில் இருக்கிறார்கள். முனிவரின் கூட்டமோ பெரியது. எப்படியும் பாண்டவர்களால் முனிவரின் கூட்டத்திற்கு உணவளிக்க முடியாது. அதனால் சினம் கொண்டு முனிவர் அவர்களை சபிப்பார்...பாண்டவர்கள் நல்லா கஷ்டப்பட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படி கேட்டான் துரியோதனன்.
முனிவரும் தன் மாணவ குழாத்துடன் பாண்டவர்கள் இருக்கும் இடம் வந்தார்.
பாண்டவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். பாண்டவர்களில் புத்திசாலி சகாதேவன்.
அவன் சொன்னான் "கண்ணனை அழைப்போம்...அவன்தான் நம்மை காக்க முடியும் " என்று.
கண்ணன் இருப்பது துவாரகையில். பாண்டவர்கள் இருப்பதோ கானகத்தில். முனிவர் குளிக்கப் போய் இருக்கிறார். அவர் குளித்து வருவதற்குள் கண்ணன் வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.
முதலில் கண்ணனுக்கு எப்படி செய்தி அனுப்புவது ?
இறைவன் , தன்னை யார் எப்போது எங்கு அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பானாம். கூப்பிட்ட உடனே ஓடி வந்து விடுவானாம்.
தருமன் , கண்ணனை நினைத்தவுடன் உடனே அவன் மனத்தில் வந்து நின்றானாம்.
பாடல்
தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக,
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை
அறத்தின் மகன்;
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
என நின்ற
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை
வந்து உதித்தானே.
பொருள்
தப்பு ஓதாமல் = தவறாக எதையும் பேசாத (தருமன்)
தம்பியர்க்கும் = தம்பிகளுக்கும்
தருமக் கொடிக்கும் = தர்மமே கொடியாக வந்தது போல் இருந்த பாஞ்சாலிக்கும்
இதமாக = இதமாக
அப்போது = அந்த நேரத்தில்
உணரும்படி = தன்னை உணரும்படி கண்ணனிடம் வேண்டினான்
உணர்ந்தான் = அதை உணர்ந்தான். யார் ?
அசோதை மகனை = யசோதை மகன்
அறத்தின் மகன்= தர்மத்தின் மகன் (தர்ம புத்திரன்)
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
என நின்ற = எப்போது , யாவர், எவ்விடத்தில் என்னை நினைப்பார்கள் என்று இருக்கும்
ஒப்பு ஓத அரியான் = தனக்கு ஒப்பு இல்லாத , வாசித்து அறியமுடியாத அவன்
உதிட்டிரன் தன் = தர்ம புத்திரனின்
உளப்போதிடை = உள்ளித்தில்
வந்து உதித்தானே = வந்து உதித்தான்
நம்புங்கள். அதுதான் வாழ்க்கை.
No comments:
Post a Comment