Pages

Monday, June 8, 2015

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?


பொதுவாக ஒரு அம்பது, அறுபதுகளில் பக்தி செய்யலாம் என்று ஒரு விதி வைத்து இருக்கிறோம்.

கோவில், கதா கலாட்சேபம் என்று பார்த்தால் வயதானவர்கள்தான் பொதுவாக இருப்பார்கள்.

படிக்கணும், வேலை தேடணும் , கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும், பின் பிள்ளைகள், பின் பிள்ளைகளை வளர்க்க வேண்டும், அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், அதுகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், இதற்கிடையில் வயதான பெற்றோர், அவர்களை வேறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் முடிந்து, இவற்றில் இருந்து விடுதலை அடைந்த பின், இறைவன் மேல் பக்தி செலுத்த நேரம் இருக்கும் என்று நினைக்கிறோம். அது வரை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

இராமலிங்க அடிகள் கூறினார்...பக்தியில் தோய்ந்து இறைவனை வழிபட முதலில் தாய் தடை என்றேன், பின் தாரம் தடை என்றேன், பின் பிள்ளைகள் தடை என்றேன், இப்படி ஒவ்வொரு தடையாக வந்து கொண்டே இருந்தால் நான் எப்போதுதான் உன் அருளை பெறுவது என்று...

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

என் செய்வேன், என் செய்வேன் என்று புலம்புகிறார்.


அப்புறம், நாளை, அடுத்த வருடம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

சரி, ஒத்துக் கொள்கிறேன்...அம்பது அறுபது கொஞ்சம் தாமதமான வருடம் தான்...ஒரு நாப்பது ? முப்பது சரியாக இருக்குமா என்று பொய்கை ஆழ்வாரிடம் கேட்போம்....

இல்லை, அதுவும் ரொம்ப தாமதமான காலம் என்கிறார்.

சரி, ஒரு இருபது , முப்பது ?

இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்.

சரி, ஒரு அஞ்சு பத்து வயசு சரியாக இருக்குமா என்று கேட்டால், இல்லை அதுவும் late என்கிறார்.

பின் எப்ப ஆரம்பிப்பது ? பிறந்த உடனேயா என்றால் , இல்லை அதுவும் காலம் கடந்தது என்கிறார்.

கருவிலேயே பக்தி செய்யத் தொடங்கி விட்டாராம்....

பாடல்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

சீர் பிரித்த பின்

ஒன்றும்  மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கரு அரங்கத்துள் கிடந்து  கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

பொருள்

ஒன்றும்  மறந்து அறியேன் = எதையும் நான் மறக்க வில்லை

ஓத நீர் = பொங்கும் நீர் (கடல் )

வண்ணனை நான் = போன்ற வண்ணம் கொண்ட (கடல் போன்ற நிறம் கொண்ட அவனை )

இன்று மறப்பனோ ஏழைகாள் = இன்று மறப்பேனா ?

அன்று = அன்று

கரு அரங்கத்துள் கிடந்து = கருவில் இருக்கும் போதே

கை தொழுதேன் = கை தொழுதேன்

கண்டேன் = கண்டேன்

திருவரங்க மேயான் திசை = திருவரங்கத்தில் உள்ள அவன் திசை

இது ஆழ்வார் மட்டும் சொல்லவில்லை.

திருநாவுகரசரும் இதையே சொல்கிறார்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

சீர் பிரிப்போம்.

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும்  கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உந்தன் நாமம் பயின்றேன் உனதருளால் 
திருவாய்ப் பொலியச் "சிவாய நம" என்று  நீறு அணிந்தேன் 
தருவாய் சிவ கதி நீ பாதிரிப் புலியூர் அரனே.

நம்மால் கருவில் இருந்து இப்போது தொடங்க முடியாது.

நாம் இரண்டு செய்யலாம்...

ஒன்று, பக்தி பற்றி இன்றிலிருந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

இரண்டு, பிள்ளைகளுக்கு, இளையவர்களுக்கு அது பற்றி சிந்திக்கக் கற்றுத் தரலாம்.

பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்...இளமையிலேயே பக்தி என்ற உணர்வைப் பெறுவதில் ஏதோ நன்மை இருக்கலாம்.

சிந்திப்போம்.

2 comments:

  1. நீங்கள் செய்யும் இந்த சேவை மிகவும் மேன்மையானது .

    எல்லாம்வல்ல அந்த இறைவன் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் தந்து அருள்பாலிக்கட்டம்

    ReplyDelete
  2. பக்தி என்றால் என்ன? சும்மா "ராமா, கிருஷ்ணா, சிவனே, பிள்ளையாரே, ஏசுவே, அல்லாவே" என்று தினம் நூறு முறை சொல்வதா? எல்லாவற்றையும் விட்டு விட்டு சும்மா பஜனை பண்ணுங்கள் என்பது பொருள் அல்ல. அதைவிட நன்றாக, பக்தி செய்வது என்றால் அறநெறியில் செல்வது என்று கொள்ளலாம்.

    அப்படி என்றால், அந்த அந்த வயதில் ஆகவேண்டிய கடமைகளைப் புரிந்துகொண்டே, இன்னொரு புறம் அறச் சிந்தனை கொள்ள வென்றும் என்று பொருளாகும்.

    ReplyDelete