இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1
இறைவனிடம் பக்தர்கள் சரணாகதி அடைவது பற்றி நிறைய படித்து இருக்கிறோம். இறைவனே சரணாகதி செய்து கேட்டு இருக்கிறோமா ? அப்படி செய்தால் என்ன ஆகும் ?
இராமாயணத்தில் வரும் வரும் ஒரு சுவையான இடம்.
வானர சேனையோடு கடற்கரைக்கு வந்துவிட்டான் இராமன்.
கடலை கடக்க வேண்டும். எப்படி கடப்பது ?
யோசனை கேட்கிறான் - யாரிடம் ? வீடணனிடம்.
நேற்று வந்து சேர்ந்தவன் வீடணன். எதிரியின் தம்பி. அறிவில், ஆற்றலில் சிறந்த அனுமன் இருக்கிறான், அனுபவம் நிறைந்த ஜாம்பாவன் இருக்கிறான்.அவர்களை எல்லாம் விட்டு விட்டு வீடனணிடம் ஆலோசனை கேட்கிறான் இராமன்.
அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஒரு துளியும் சந்தேகிக்கவில்லை இராமன்.
இந்தக் கடல் நமக்கு கட்டுப்படுமானால் இந்த மூன்று உலகையும் அடக்கவும், அழிக்கவும் நம்மால் முடியும். எண்ணற்ற நூல்களை கற்ற வீடணனே ,இந்த கடலை கடக்கும் வழியை சிந்திப்பாய் என்றான் இராமன்.
பாடல்
'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும்
தோளால்
அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள்
அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர்
பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல்
கற்றாய்!'
பொருள்
'தொடக்கும் என்னில் = கட்டுப்படும் என்றால் (இந்த கடல்)
இவ் உலகு ஒரு மூன்றையும் = மூன்று உலகங்களையும்
தோளால் = என் தோள் வலிமையால்
அடக்கும் வண்ணமும் = அடக்கும் வழியும்
அழித்தலும் = அழிக்கும் வழியும்
ஒரு பொருள் அன்றால் = ஒரு பெரிய விஷயமே அல்ல
கிடக்கும் = பரந்து விரிந்து கிடக்கும்
வண்ண வெங் கடலினைக் = வண்ணமயமான வெம்மையான கடலினை
கிளர் பெருஞ் சேனை = ஆராவாரிக்கும் பெரிய சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி = கடக்கும் வழியை சிந்திப்பாய்
எண்ணு நூல் கற்றாய்! = எண்ணற்ற நூல்களை கற்றவனே
இராமாயணத்தில் சில பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு ஒன்றும் மாறி விடாது. இருந்தும், ஏன் அந்த பகுதிகளை வைத்து இருக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது.
உதாரணமாக, குகப் படலம் இல்லை என்றால் இராமாயணம் என்ற காப்பியத்திற்கு என்ன குறை வந்து விடும் ? ஒன்றும் இல்லை. இருந்தும் குகன் என்ற பாத்திரத்தின் மூலம் ஏதோ ஒரு செய்தி நமக்கு சொல்கிறார்கள் வால்மீகியும், கம்பனும்.
அதே போல சபரி.
அப்படி வந்த இன்னொரு பகுதி தான் இந்த கடல் காண் படலம்.
இந்த பகுதி இல்லாவிட்டாலும் இராமாயணம் என்ற காப்பியத்தின் சுவை குன்றி இருக்காது.
இன்னும் சொல்லப் போனால், இது போன்ற பகுதிகள் கதையின் விறு விறுப்பை கொஞ்சம் தடை செய்கின்றன.
இருந்தும், வேலை மெனக்கெட்டு சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ இருக்க வேண்டும்.
என்னதான் அப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
இந்தப் பாடலில்,
- அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் இராமன் அவனை சந்தேகிக்க வில்லை. சந்தேகம் இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏற்றுக் கொண்டபின் சந்தேகப் படக் கூடாது.
எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர்.
- இரண்டாவது, எண்ணு நூல் கற்றாய் என்று வீடணனை குறிப்பிடுகிறான் இராமன்.
இராவணனும் நிரம்பக் கற்றவன் தான். தவம், வீரம், கல்வி, செல்வம் என்று அனைத்தும் அவனிடம் இருந்தது. பின் ஏன் வீழ்ந்தான்? அவன் கற்ற கல்வி அவனுக்கு அறத்தை சொல்லித் தரவில்லை. அறம் இல்லாத கல்வி அழிவைத்தரும். இராவணனுக்கு தந்தது.
- மூன்றாவது, மூன்று உலகையும் அழிக்கும் ஆற்றல் உள்ள அரசன் என்றாலும் மந்திரியின் சொல் கேட்டு நடக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பாடலிலும் பலப் பல உண்மைகளை தருகிறார் கம்பர்.
மேலும் சிந்திப்போம்....
ரசிக்கத் தக்க பாடல். நன்றி.
ReplyDelete