Pages

Thursday, August 20, 2015

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?


பதினான்கு ஆண்டுகள் கழித்து வருவேன் என்று சொல்லிச் சென்றான் இராமன்.

பதினான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. கடைசி நாள். இராமன் வந்தபாடில்லை.

இராமன் வராததால் பரதன் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் விடுவேன் என்று கூறி தீயில் விழத் துணிகிறான்.

கோசலை ஓடி வருகிறாள்.

"நின்னும் நல்லன் என்றே" என்று இராமனைப் பார்த்து கூறிய கோசலை என்று பரதனைப் பார்த்துக்

"எண்ணிக்கையில் அடங்க முடியாத கோடிக் கணக்கான இராமர்களை ஒன்று சேர்த்தாலும், அண்ணல், உன் அருளுக்கு அருகில் கூட வர முடியாது. புண்ணியமே வடிவான உன் உயிர் பிரிந்தால் இந்த உலகில் ஒரு உயிரும் வாழாது "

என்று கூறினாள்


பாடல்

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?


பொருள் 

‘எண் இல் = எண்ணிக்கை இல்லாத, எண்ணிக்கையில் அடங்காத

கோடி இராமர்கள் என்னினும் = கோடி இராமர்கள் சேர்ந்தால் கூட

அண்ணல் = அண்ணலே

நின் அருளுக்கு = உன்னுடைய அருளுக்கு

அருகு ஆவரோ? = அருகில் வர முடியுமா ?

புண்ணியம் எனும் = புண்ணியமே வடிவனான

நின் உயிர் போயினால் = உன் உயிர் போய் விட்டால்

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? = மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ

பரதனின் அருளை நோக்கின்னால் அது ஆயிரம் இராமர்களின் அருளை விட அதிகமாக  இருக்கும் என்று இராமனைப் பெற்ற கோசலை கூறுகிறாள்.

பரதனால் நாடிழந்த இராமனின் தாய் கோசலை கூறுகிறாள் என்றால் அவன் அருள் அவ்வளவு  இருந்திருக்க வேண்டும்.

முதலில் இராமனுக்கு இணையாக இருந்தவன், பின் இராமனை விட நல்லவனாக மாறினான்  ("நின்னினும் நல்லன் "), பின் இராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தான் ("ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ") பின் கோடி இராமனை விட உயர்ந்தான் (எண்ணில் கோடி இராமர்).

அப்படி அவன் என்னதான் செய்து விட்டான் ?

அவன் மனத்தால் உயர்ந்தான்.

மனம் உயர் வாழ்வு உயரும். வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது  உயர்வு.

எப்படி பரதன் மனதால் உயர்ந்தான் என்று பார்ப்போம்.



2 comments:

  1. இது சூப்பர்: "முதலில் இராமனுக்கு இணையாக இருந்தவன், பின் இராமனை விட நல்லவனாக மாறினான் ("நின்னினும் நல்லன் "), பின் இராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தான் ("ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ") பின் கோடி இராமனை விட உயர்ந்தான் (எண்ணில் கோடி இராமர்)" என்ன படிப்படியான உயர்வு!

    ReplyDelete
  2. வால்மீகி ராமாயணம் -வனவாசத்தை கைகேயி சொன்னவுடன் ராமன் அவளிடம் சொல்கிறான் " உனக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு? வனவாசம் ஒன்றும் பெரியதல்ல; உடலை தயார்செய்து கொண்டால் போதுமானது. ஆனால் ராஜ்யத்தை ஆள்வது என்பது மிகப் பெரிய சுமையை தலையில் வைத்துக்கொள்வது போன்றது. அந்த சிரமம் எனக்கு வரவேண்டாம் என்பதற்காகத்தானே அதை உன் மகனுக்கு அளிக்கச் சொல்கிறாய்? " என்று.
    ராமரின் நற்குணத்தை சொல்வதா? பரதனின் மேன்மையைச் சொல்வதா?

    ReplyDelete