Pages

Sunday, August 23, 2015

இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்


நான் பெற்ற இரு வரத்தால், இராமன் கானகம் போனான், உன் தந்தை வானகம் போனான்,  நீ அரசு பெற்றாய் என்றாள் கைகேயி பரதனிடம்.

பரதனுக்குப் புரியவில்லை. இராமன் ஏன் கானகம் போனான் என்று. தசரதன் ஏன் இராமனை கானகம் அனுப்பினான் ? அவன் என்ன தவறு செய்தான் ? இராமன் தவறு செய்ய மாட்டானே. அப்படியே அவன் தவறு செய்து இருந்தாலும், அது ஒரு தாய் அவளுடைய பிள்ளைக்கு செய்யும் தீமை போல அல்லவா இருக்கும்.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால், அதை பிடித்து இழுத்து, தன் கால்களுக்கு இடையில் அமுக்கி, அதன் வாயை வலு கட்டாயாமாகத் திறந்து மருந்தைப் புகட்டுவாள் . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் ஏதோ கொடுமை செய்வது போலத் தெரியும். பிள்ளை குணமாக வேண்டுமே என்று அவள் அப்படிச் செய்வாள். அது போல, இராமன் தீமையே செய்திருந்தாலும், அது நல்லதற்கே அன்றி வேறு ஒன்றும் அதில் தீமை இருக்காது என்று பரதன் நம்பினான்.

பாடல்

‘தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?

ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

‘தீயன = தீமையை

இராமனே செய்யுமேல் = இராமனே செய்திருந்தாலும்

அவை = அவை

தாய் செயல் அல்லவோ = ஒரு தாயின் செயல் போன்றது அல்லவா

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த பூ உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது  = இராமன் கானகம் போனது

தாதை விண் புக்க பின்னரோ? = தந்தையாகிய தசரதன் வானகம் போன பின்பா


ஆயதன் முன்னரோ?  = அல்லது அதன் முன்பா

அருளுவீர்’ என்றான் = அருள் கொண்டு சொல்லுங்கள் என்று கைகேயி பரதன்  கெஞ்சிக் கேட்கிறான்.

இன்று பிள்ளைகள் பெற்றோரோ ஆசிரியரோ, மற்ற பெரியவர்களோ ஏதாவது  கண்டித்துச்  சொன்னால், அவர்களை அந்த பிள்ளைகள் விரோதிகளைப் போல பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது நன்மைக்குத் தான் சொல்கிறார்கள் செய்கிறார்கள்  என்ற நம்பிக்கை இல்லை.

பெரியவர்கள் மேல், பெற்றவர்கள் மேல், ஆசிரியர்கள் மேல் பிள்ளைகளுக்கு நம்பிக்கை இல்லை.

நீ என்ன சொல்வது. நான் என்ன கேட்பது என்று இருக்கிறார்கள்.

எது சொன்னாலும் காரணம் கேட்கிறார்கள். சந்தேகம், நம்பிக்கை இன்மை பெரிதும் வளர்ந்து  விட்டது.

இராமன் மேல் பரதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே அவன் செய்தது தவறு போலத் தோன்றினாலும், அது  தவறாக இருக்காது.  அது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறான்.

இப்படி ஒரு நம்பிக்கை பெற்றவர்கள் மேலும், ஆசிரியர்கள் மேலும், பெரியவர்கள் மேலும்  பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்கள் உயர்வார்களா இல்லையா ?

பரதன் உயர்ந்தான் என்று வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கம்பன் சொல்கிறான்.

பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளர்க்க பரதன் கதை உதவும்.

சொல்லி வையுங்கள்.

விதை போடுவது உங்கள் வேலை. போடுங்கள்.

வளரும் , பலன் தரும் என்று நம்புங்கள்.

பரதன் நம்பினான். நீங்களும் நம்புங்கள்.

நம்புவதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது ?





1 comment:

  1. என்ன அருமையான, உணர்ச்சி நிரம்பிய பாடல்!

    கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete