இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை
இன்று இராமாயணம் பேசும் சிலர் , "பரதன் பாட்டன் வீட்டில் இருந்து கொண்டு , தாயை ஏவி விட்டு அரசைப் பெற்றுக் கொண்டான்" என்று கூறுகிறார்கள். இவர்களுடைய கீழ்மையை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றுகிறார்கள்.
பரதன் அப்படிப் பட்டவானா ?
தசரதன் தனக்குத் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி உனக்கு அரசையும் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி சொல்லி முடிக்கும் முன், தன் தலைக்கு மேல் கூப்பிய கைகளை கீழே கொண்டு வந்து இரண்டு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டான் பரதன்.
பாடல்
சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!
பொருள்
சூடின மலர்க் கரம் = தலை மேல் கூப்பிய கரங்கள்
சொல்லின் முன் = கைகேயி சொல்லி முடிக்குமுன்
செவி கூடின; = அவனின் இரு காதுகளின் பக்கம் வந்து கூடின
புருவங்கள் குனித்துக் = புருவங்கள் வளைந்து
கூத்து நின்று ஆடின = கூத்து ஆடின
உயிர்ப்பினோடு = உயிருடன்
அழல் கொழுந்துகள் ஓடின = நெருப்பு ஆறு ஓடியது
உமிழ்ந்தன = வடித்தன
உதிரம் கண்களே! = கண்கள் இரத்தத்தை
ஒரு இடத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சில நாள் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொல்கிறார்கள். சில நாள் , காவல் படையும், இராணுவமும் சேர்ந்து தீவிரவாதிகளை கொல்கின்றன. பத்திரிகைகளும், மற்ற ஊடகங்களும் இவற்றை நாளும் எடுத்துச் சொல்கின்றன.
இன்று யாரை, யார் கொன்றார்கள் என்று கணக்குத் தருகின்றன.
இவற்றை தினமும் படித்துக் கொண்டிருந்தால், நமக்கு என்ன தோன்றும் ?
நாளடைவில், இது ஒரு பெரிய செய்தாகப் படாது. நாலைந்து பேர் இறந்தார்கள் என்றால் , சரி என்று அடுத்த பக்கத்தை புரட்டப் போய் விடுவோம்.
என்ன ஆகிறது என்றால், தீமைகள் மரத்துப் போகிறது நமக்கு. இதெல்லாம் சாதாரணம், எப்போதும் நடப்பதுதான் என்று எடுத்துக் கொண்டு விடுகிறோம்.
தவறுகளுக்கு, தீமைகளுக்கு மனம் பழகி விடுகிறது.
இதற்கு அடுத்த கட்டம், அதிகமான தீமையை தவற்றை எதிர்பார்ப்பது.
ஆயிரம் இரண்டாயிரம் இலஞ்சம் வாங்கினான் என்றால் யாரும் கண்டு கொள்வது இல்லை. பெரிதாக எதிர் பார்க்கத் தொடங்கி விடுகிறது.
சின்ன இலஞ்சம் வாங்கின யாரையாவது கைது பண்ணினால், "அவனவன் இலட்சம் கோடினு வாங்கிறான்...அதை விட்டு விட்டு ஆயிரம் ரூபாய் வாங்கினவனை போய் பிடிச்சிகிட்டு" என்று நமக்கு ஒரு சலிப்பு வந்து விடுகிறது.
இதில் அடுத்த கட்டம் என்ன என்றால், எல்லாரும் தான் வாங்குகிறார்கள், நாமும் வாங்கினால் என்ன என்று தோன்றும்.
பொய்யில், தீமையில்,தவறில் ஒரு சுவாரசியம் வந்து விடுகிறது. ஒரு சுவை வந்து விடுகிறது.
தவறு செய்வதில் ஆர்வமும், நல்லது செய்பவனை பார்த்தால் ஒரு இளக்காரமும் வந்து விடுகிறது.
தீயவைகளை காது கொடுத்துக் கூட கேட்கக் கூடாது. கேட்டால் அதில் ஒரு ஆர்வமும், சுவையும் வந்து விடும்.
கைகேயி சொன்னதை பரதன் முழுதாகக் கூட கேட்கவில்லை.
என்ன வரம், அதன் சாரம் என்ன, அதில் என்ன ஓட்டை இருக்கிறது, எப்படி கேட்டாய், எங்கு கேட்டாய், என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.
ஒரு தவறை முற்றுமாகக் கூட அவனால் கேட்க முடியவில்லை என்றால் அவன் மனம் எவ்வளவு மென்மையானதாக இருந்திருக்க வேண்டும் ?
பேருந்தில் ஒரு பெண் மானபங்கப் படுத்தப் பட்டாள் என்றால், அதை விலாவாரியாக விவரிப்பதும், அதை ஒரு வார்த்தை விடாமல் படிப்பதும் கூட ஒரு வக்கிரம் தான்.
தீயாரை காண்பதுவும் தீதே , அவர் சொல் கேட்பதுவும் தீதே என்றாள் அவ்வை.
பொய் சொல்வதை கேட்பது, புரணி சொல்வதை கேட்பது, புறம் சொல்வதை கேட்பது, தவறுகளை விவரித்துக் கூறுவதை கேட்பது ....இவற்றை தவிர்க்க வேண்டும்.
தீயவற்றை மனதுக்குள் போட்டால் அது அங்கேயே தங்கி விடும். அகற்ற வழி இல்லை.
குழந்தைகளை தீயனவற்றை பார்க்கவோ, கேட்கவோ அனுமதிக்காதீர்கள்.
மனம் உயர அது ஒரு வழி.
தீயவற்றை கேட்க்கக் கூசினான் பரதன்.
மேலும் பார்ப்போம்.
என்ன அருமையான விளக்கம்!
ReplyDelete"Call of Duty", "Gran Tourismo 5" என்றெல்லாம் ஆட்டங்கள், ஒரு ஆளைக் கொலை செய்வது, சுடுவது என்பது சும்மா பொரிகடலை சாப்பிடுவது போல உணர வைக்கின்றன. அவற்றையெல்லாம் நம் பிள்ளைகளை ஒரு வயதுக்குமுன் விளையாட அனுமதிக்கக் கூடாது.