Pages

Thursday, September 10, 2015

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


எந்த வீட்டுக்கும், காலையில் போய் பார்த்தால் தெரியும்...ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கும். ...

குழந்தைகளை எழுப்புவதும், அவர்களை குளித்து பள்ளிக்குச் செல்ல தயார் பண்ணுவதும், சிற்றுண்டி தயார்  பண்ணுவதும்,  மதிய உணவு தயார் செய்ய  வேண்டும், இதற்கிடையில் தொலை காட்சியில்  ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும், தொலை பேசி வரும்...இப்படி பெரிய களேபரமாய் இருக்கும்.

ஒரு வீட்டில்,இரண்டு அல்லது மூணு பேரை தயார் செய்து அனுப்புவது என்றாலே இவ்வளவு சத்தம், களேபரம்....இந்த உலகையே படைப்பது என்றால் எவ்வளவு சிக்கலான காரியம் ?

இந்த உலகத்தை ஒரு மலர் மலர்வது போல மிக மென்மையாக அபிராமி படைத்தாளாம்.

பூத்தவளே புவனம் பதினான்கையும்

அனைத்து உலகங்களையும் ஒரு மலர் மலர்வது போல் படித்தாள்.

சரி, படைத்தாகி விட்டது. அத்தனை உயிர்களையும் காக்க வேண்டும் அல்லவா. எப்படி மென்மையாக படைத்தாளோ, அதே போல் அனைத்து உயிர்களையும் காக்கின்றாள்.

பூத்த வண்ணம் காத்தவளே. 

நமக்கு வாழ்வில் துன்பம் வரும். வேண்டியது கிடைக்காது. கிடைத்தது கை விட்டுப் போகும்.  நட்டம் வரும். இழப்பு வரும். கிடைக்க வேண்டியது கிடைக்காமல் துன்பப் படுவோம்.

வீட்டில் விசேஷம் என்றால் அம்மா பல பலகாரங்கள் செய்வாள். குழந்தை அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கும்.  தாய் பார்த்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மேலே போனால், பலகாரங்களை எடுத்து உள்ளே வைத்து விடுவாள். "காலியா போச்சு, நாளைக்குத் தருகிறேன் " என்று மறைத்து வைத்து விடுவாள். குழந்தை அழும். அம்மாவுக்குத் தெரியும், அழுதாலும் தர மாட்டாள். குழந்தையின் மேல் உள்ள அன்பால், அதுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று நினைத்து அந்த ருசியான பலகாரங்களை மறைத்து  வைப்பாள்.

அபிராமியும் அப்படித்தான். நமக்குத் தராமல் சிலவற்றை மறைத்து வைக்கிறாள் என்றால் ஏதோ காரணம் இருக்கும்.

"பின் கரந்தவளே" (கரத்தல் = மறைத்து வைத்தல்)

பெண் பல வடிவம் எடுக்கிறாள். அது தாயக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், சகோதரியாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் ஒரே பெண் பல வடிவம் எடுக்கிறாள்.

மகள் சின்னப் பெண்ணாக இருப்பாள்., அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ உடல் நிலை சரி என்றால், திடீரென்று வளர்ந்து பெரிய பெண் போல அவள் வீட்டை நிர்வகிக்க தொடங்கி விடுவாள். அவளே சமையல் செய்வாள். காப்பி போடுவாள். "பாரேன், இந்த பிள்ளைய " என்று பெற்றவர்களே வியப்பார்கள்.

நமக்கு உடல் நிலை சரி என்றால் , மனைவியே தாயாக மாறி பணிவிடை செய்வாள்.

பாட்டியாகவே இருக்கட்டும், பேரன் ஒரு சேலை வாங்கித் தந்தால் , பதினாறு வயது பெண் போல வெட்கப் படுவாள்.

அவளுக்கு வயது இல்லை. எல்லாமாக அவள் இருக்கிறாள்.

பட்டர் பார்க்கிறார்...இந்த அபிராமிக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு சமயம் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி இருக்கா....இன்னொரு சமயம் பார்த்தால் பெரிய பெண் போல இருக்கிறாள்...

"கறை கண்டனுக்கு மூத்தவளே". கண்டத்திலே கறை உள்ளவன் சிவன். அவனை விட மூத்தவள் போல இருக்கிறாள்.

"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே " திருமாலுக்கு இளையவள் போலவும் இருக்கிறாள்.

 இவளை விட்டால் வேறு யார் நமக்கு ?

பாட்டை இன்னொரு தரம் படியுங்கள் ...


பூத்தவளே,

புவனம் பதினான்கையும்

பூத்தவண்ணம் காத்தவளே

பின் கரந்தவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


(இதற்கு உரை எழுதிய பெரியவர்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். புவனம் எழா ? அல்லது பதினான்கா ? 

சிவனுக்கு மூத்தவள், திருமாலுக்கு இளையவள் என்றால் சிவன் திருமாலை விட  இளையவனா மூத்தவனா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.  
இது எனக்குத் தோன்றியது. அனைத்தயும் படித்துப் பாருங்கள். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் )


3 comments:

  1. இந்த விளக்கம்தான் இனிமை. சிவன் திருமாலை விட இளையவனா என்று விவாதிப்பது நகைப்புகுரிய செயல்.

    ReplyDelete
  2. விளக்கவுரையை திருமாலுக்கு இளையவள் என்று தவறுதலாக எழுதி இருக்கிறார். சைவ சித்தாந்தத்தை மனதில் வைத்து நவதருபேதத்தை நினைவில் வைத்து விளக்கத்தை எழுதினால் சரியாக இருக்கும்

    ReplyDelete
  3. சக்தி தத்துவத்திலிருந்து சதாசிவ தத்துவம் தோன்றுகிறது என்ற அடிப்படையில் கறைகண்டனுக்கு மூத்தவள் என்று எழுதியிருக்கலாம்.மேலும் சாக்தம் தழுவி சக்தி முதலில் தோன்றியது என்று சொல்லும் பட்டர் அப்படித்தானே எழுதமுடியும்.

    ReplyDelete