இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து
நாம் ஒரு காரியம் செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை. ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.
இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.
அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.
நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால் உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.
இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.
ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.
அது ஏன் ?
ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு சோதனை மேல் சோதனை வருகிறது.
அது ஏன் ?
விடை தெரியாமல் தவிக்கிறோம்.
நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.
கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.
தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.
உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.
சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.
இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.
சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.
பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.
ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.
சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?
மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?
அமுதனார் சொல்கிறார் ...
"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "
பாடல்
என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.
சீர் பிரித்த பின்
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவில்லையே.
பொருள்
என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்
ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி
அருள் சுரந்த = அருள் பொழிந்து
முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை
வேரறுத்து = வேரோடு அறுத்து
ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை
பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய
இராமானுசன் = இராமானுசன்
பரன் = தொன்மையானவன் , பெரியவன்
பாதமும் = பாதங்களை
என் = என்னுடைய
சென்னித் = தலையில்
தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்
எனக்கு ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே
சரி, இதில் நிறைய புரியவில்லையே...
நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை அடுத்த பிறவியில் வந்து சேரும் ? இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?
சிந்திப்போம்....
ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி
அருள் சுரந்த = அருள் பொழிந்து
முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை
வேரறுத்து = வேரோடு அறுத்து
ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை
பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய
இராமானுசன் = இராமானுசன்
பரன் = தொன்மையானவன் , பெரியவன்
பாதமும் = பாதங்களை
என் = என்னுடைய
சென்னித் = தலையில்
தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்
எனக்கு ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே
சரி, இதில் நிறைய புரியவில்லையே...
நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை அடுத்த பிறவியில் வந்து சேரும் ? இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?
சிந்திப்போம்....
இந்தக் கர்மா எல்லாம் சும்மா.
ReplyDelete