Pages

Monday, October 19, 2015

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம்

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம் 


பெரிய புராணம் போன்ற நூல்களை எதற்குப் படிக்க வேண்டும் ? ஏதோ கொஞ்சம் நாயன்மார்கள் இருந்தார்கள், பக்தி செய்தார்கள், சொர்க்கம் சென்றார்கள். இதைப் படிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று படிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் படிக்காமல் விட்டது மட்டும் அல்ல, அடுத்த தலைமுறைக்கும் அதன் சிறப்புகளை சொல்லாமல் விட்டு விடுகிறோம். அப்படி , நம் மொழியில் உள்ள பலப் பல அருமையான நூல்களின் சிறப்புகள் ஒரு தலைமுறைக்கே போய் சேராமல் நின்று விடுகிறது.

பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

நேர்முகத் தேர்வில் (interview ) தேர்ச்சி பெறுவது எப்படி ?

ஒரு நல்ல presentation தருவது எப்படி ?

இவை எல்லாம் நமக்கு மிக இன்றி அமையாதது, வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.

இவற்றை நமக்குச் சொல்லித் தருகிறது பெரிய புராணம்.

ஒரு கேள்வி கேட்டால், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் ? அந்த பதில் முழுமையாக இருக்க வேண்டும் . கேள்வி கேட்டவருக்கு அந்த பதிலால் ஒரு பயன்  இருக்க வேண்டும். அந்த பதிலை கேள்வி கேட்டவர் உபயோகப் படுத்த முடிய வேண்டும்....இதை எல்லாம் ஆராய்ந்து, தெளிவாக பதில் சொன்னால் பரீட்சையில்  நல்ல மதிப்பெண் வரும், நேர்முகத் தேர்வில் சிறப்பாக பதில் சொல்ல முடியும்,  presentation சிறப்பாக அமையும்.

எப்படி என்று பார்ப்போம்.

அப்பூதி அடிகள் என்று ஒரு நல்லவர் இருந்தார். அவருக்கு திருநாவுக்கரசர் மேல் அளவு கடந்த பக்தி. அவர் செய்யும் எல்லா திருதொன்டிற்கும் திருநாவுகரசர் பெயரையே சூட்டுவார்.

திருநாவுகரசர் தண்ணீர் பந்தல்.

திருநாவுக் ரசர் மருத்துவ மனை

திருநாவுக்கரசர் அன்ன தான சத்திரம் என்று எல்லாம் அவர் பெயரில் செய்வார்.

இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது.

ஒரு நாள் , திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் இருக்கும் ஊருக்கு வந்தார். அங்கு வந்து , அடிகள் வைத்திருந்த தண்ணீர் பந்தலை கண்டு, இப்படி தன் பெயரில் தண்ணீர் பந்தல்  வைத்திருக்கும் அவர் யார் என்று அங்கு வேலை செய்பவர்களை கேட்டார்.

இங்கு சற்று நிறுத்துவோம்.

நீங்கள் அங்கு வேலை செய்து, உங்களை யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்.

"யாராய் இருந்தால் உனக்கு என்ன ...உனக்கு என்ன தண்ணி தான வேண்டும்...குடிச்சிட்டு போவியா "

என்று எடுத்து எரிந்து பேசலாம்.

அல்லது,

"அப்பூதி அடிகள் னு ஒருத்தர்...அவர் தான் இந்த தண்ணீர் பந்தலை வைத்து நடத்துகிறார் " என்று பவ்யமாகச் சொல்லலாம்.

அதற்கு மேலே என்ன இருக்கிறது சொல்ல ?

அங்கு வேலை செய்த ஆள் கூறுகிறார்...


கேட்ட ஒரு கேள்விக்கு 6 பதில் தருகிறார். இந்தத் தண்ணீர் பந்தலை நடத்துபவர்

1. அவர் பொருந்திய நூலை மார்பில் அணிதிருப்பவர் (பூணுல்)
2. இந்த பழைய ஊரில் தான் இருக்கிறார்
3. வீட்டுக்குப் போனார் (நீங்க அங்க போனால் அவரைப் பார்க்கலாம் என்பது உள்ளுறை)
4. இப்பதான் போனார் (அதுனால நீங்க அவர் வீட்டுக்குப் போனால், அங்க தான் இருப்பார்)
5. அவர் வீடு பக்கத்தில் தான் இருக்கு,
6. தூரம் இல்லை

பாடல்


என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.


பொருள்

என்று உரைக்க = இந்த தண்ணீர் பந்தல் முதலிய அறங்களை செய்வது கேட்டு

அரசு  கேட்டு = திருநாவுக்கரசர் கேட்டு

இதற்கு என்னோ கருத்து என்று = இதற்கு காரணம் என்ன ? தன் பெயரில் செய்யாமல் திருநாவுக்கரசர் பெயரில் செய்யக் காரணம் என்ன என்று

நின்ற வரை நோக்கி = அங்கு நின்றவரை பார்த்து

அவர் எவ்விடத்தார் என வினவத் = இதையெல்லாம் செய்யும் அந்த அப்பூதி அடிகள் எந்த ஊர் காரர் என்று கேட்க

துன்றிய நூல் மார்பரும் = பொருந்திய நூலை மார்பில் அணிந்தவரும்

இத் தொல் பதியார் = இந்த ஊரில் ரொம்ப நாள் இருப்பவர்

மனையின் கண் சென்றனர் = அவருடைய வீட்டுக்குப் போனார்

இப்பொழுது = இப்போதுதான் போனார்

அதுவும் சேய்த்து அன்று  = அவர் வீடு ரொம்ப தூரம் இல்லை

நணித்து என்றார்.= பக்கத்தில் தான் இருக்கிறது என்றார்.

இப்போதுதான் போனார் என்றால், அது வரை அங்கு இருந்து அவர் தண்ணீர் பந்தல் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் என்று அர்த்தம்.

எப்படி ஒரு கேள்வியை புரிந்து கொண்டு , அதற்கு முழுமையான ஒரு பதிலை ஒரு வேலையாள் தருகிறான் பாருங்கள்.

இப்படி பேசிப் பழக வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டும். முழுமையாகச்  சொல்ல வேண்டும்.

அப்படி சொல்ல வேண்டும் என்றால், கேள்வியை புரிந்து கொண்டு, ஆழமாக சிந்தித்து  பின் பதில் சொல்ல வேண்டும்.

அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்.

பழகுங்கள். வரும்.






No comments:

Post a Comment