Pages

Friday, October 23, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால்

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால் 


நம்மைப் பார்த்து "நீங்கள் யார் " என்று கேட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நம்முடைய வீர தீர பிராதாபங்களை எடுத்து  அடுக்குவோம். நம்மிடம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லாவிட்டாலும்,  நம் பரம்பரையில்  சில பல தலைமுறைகளுக்கு முன்னால் யாராவது எதையாவது சாதித்து இருந்தால் அதைச் சொல்லி நம்மை அதோடு  தொடர்பு படுத்தி பெருமை கொள்வோம்.

அடக்கம் என்பது அணுவளவும்  கிடையாது.

ஆரவமுதனார் சொல்கிறார்

"சொல்லையும் பொருளையும் இசையோடு சேர்த்து, அன்போடு இராமனுஜரை எத்தனையோ பேர் பாடி இருக்கிறார்கள். எனக்கு புத்தி இல்லாமல், கவிதை எழுதி பழகும் நான், இந்தப் பாவி,  இராமானுஜரின் பெருமைகளை பாட முயல்கின்றேன் "

என்ன ஒரு அடக்கம் 


பாடல்

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.


பொருள்

இயலும் = சொல்லும் (சப்தமும்)

பொருளும் = சொல்லின் பொருளும்

இசையத் தொடுத்து = இசையோடு சேர்த்து

ஈன் கவிகளன்பால் = ஈன் + கவிகள் + அன்பால் = ஈனுகின்ற என்றால் பெற்று  எடுக்கின்ற   என்று பொருள். பசு கன்று ஈன்றது என்று சொல்லுமாப் போல். கவிதை  மனதில் கருக் கொண்டு, நாளும் வளர்ந்து பின் ஒரு குழந்தை பிரசவத்தில்  வருவது போல கவியின் மனதில் இருந்து கவிதை பிறக்கிறது. அப்படி, வரும் கவிதையும் , அன்பால்  வந்தது.

மயல்கொண்டு = ஆசை கொண்டு

வாழ்த்தும் = வாழ்த்தும்

இராமா னுசனை = இராமானுஜரை

மதியின்மையால் = அறிவு இல்லாமையால்

பயிலும் கவிகளில் = படித்துக் கொண்டிருக்கும் கவிதையில்

பத்தியில் லாதவென் = பக்தி இல்லாத என்

பாவிநெஞ்சால் = பாவி நெஞ்சால்

முயல்கின் றனன் = முயற்சி செய்கிறேன்

அவன் றன் = அவன் தன்

பெருங் கீர்த்தி = பெரிய புகழை

மொழிந்திடவே = சொல்லி விடவே .


என்னிடம் பக்தியும் இல்லை, அன்பும் இல்லை, கவி பாடும் திறமையும் இல்லை என்று எவ்வளவு தன்னடக்கத்துடன் கூறுகிறார்.






1 comment:

  1. அருமையான அடக்கம். மிக நன்று.

    ReplyDelete