இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?
எதுவரை அறத்தை கடை பிடிக்கலாம் ?
உயிருக்கே ஆபத்து என்றாலும் அறத்தை கடை பிடிக்க வேண்டுமா ? உயிரை விட்டு விட்டு அறத்தை தூக்கிப் பிடித்து என்ன பயன் ? தற்காப்புக்காக அறத்தை மீறலாமா ?
நம் சட்டங்கள் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்று அனுமதி அளிக்கிறது. தன்னைக் கொல்ல வருபவனை கொல்லுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?
நம் உயிருக்கு ஆபத்து என்றால் கூட சில சமயம் பொறுத்துக் கொள்ளலாம். நாம் மிகுந்த அன்பு செலுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் அறமாவது மண்ணாவது என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.
மனைவியின் உயிர், பிள்ளையின் உயிர், கணவனின் உயிருக்கு ஆபத்து என்றால் யார் அறத்தைப் பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்கள் ?
இராமன் சிந்தித்தான். தன் உயிருக்கு மட்டும் அல்ல, உயிரினும் மேலான தம்பியின் உயிருக்கு ஆபத்து என்ற போதும் அவன் அறத்தை மீறவில்லை.
தாடகை கோபத்தோடு வருகிறாள். கையில் சூலத்தை ஏந்திக் கொண்டு வேகமாக வருகிறாள். சூலத்தை இராம இலக்குவனர்களின் மேல் எறியப் போகிறாள்.
விஸ்வாமித்திரன் சொல்கிறான், "அவளைக் கொல் " என்று.
இராமன் பேசாமல் நிற்கிறான். பெண்ணைக் கொல்வது அறம் அன்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.
எவ்வளவுதான் கொடியவள் என்றாலும் பெண் என்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.
பாடல்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள். தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும். பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து. நான்மறை அந்தணன் கூறுவான்.
பொருள்
வெறிந்த = மணம் வீசும். இங்கே நாற்றம் எடுக்கும் என்ற பொருளில் வந்தது.
செம் மயிர் = சிவந்த மயிர். எண்ணெய் போடாமல் செம்பட்டையாக இருந்த முடி.
வெள் எயிற்றாள் = வெண்மையான பற்களைக் காட்டிக் கொண்டு வருகிறாள் தாடகை
தனை = அவளை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் = சூலாயுதத்தை எறிந்து இராம இலக்குவனர்களை கொல்லுவேன் என்று ஏந்திக் கொண்டு வந்த போதும்
பார்க்கிலாச் = அதை கண்டு கொள்ளாத
செறிந்த தாரவன் = அடர்ந்த மலர்களை கொண்டு செய்த மாலையை அணிந்த இராமன் (தார் = மாலை)
சிந்தைக் கருத்து எலாம் = சிந்தனையின் ஓட்டம், அவன் கருத்து எல்லாம்
அறிந்து = அறிந்து கொண்ட
நான்மறை அந்தணன் கூறுவான் = நான்கு வேதங்களை ஓதிய அந்தணனாகிய விஸ்வாமித்திரன் கூறுவான்.
விஸ்வாமித்திரன் அந்தணன் அல்ல. அவன் ஒரு அரசன். அது கம்பனுக்கும் தெரியும். இருந்தும் தேடி எடுத்து அந்தணன் என்ற சொல்லைப் போடுகிறான்.
அந்தணன் என்போன் அறவோன். அற வழியில் நிற்பவன் அந்தணன். இங்கே விஸ்வாமித்திரன் அற வழியில் நின்று அறத்தைக் கூறுகிறான் என்ற பொருள் பட அவனை அந்தணன் என்று அழைக்கிறான் கம்பன்.
அது மட்டும் அல்ல, அற வழியில் நிற்போர் எல்லாம் அந்தணர் தாம்.
பரிமேல் அழகர் கூறுவார் அந்தணர் என்பது காரணப் பெயர் என்று.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
சுகமான காலத்தில், ஆபத்து இல்லாத காலத்தில் எல்லோரும் அறத்தை கடை பிடிப்பார்கள்.
கொல்ல வரும் அரக்கி, சூலத்தொடும் கோபத்தோடும் எதிரில் நிற்கும் போது ?
அது இராமன் காட்டிய வழி....
இதற்காகவும் இராமாயணம் படிக்க வேண்டும்.
Innum padikka virumbukirom. Nandri.
ReplyDelete