Pages

Friday, December 11, 2015

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை - பாகம் 1

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை  - பாகம் 1




தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பி மா புரம் மேவிய பெம்மானிவ னன்றே.

மிக பிரபலமான தேவாரப் பாட்டு.

எல்லோரும் அறிந்தது.

ஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருடைய தந்தையார் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் செல்லுமுன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். ஞான சம்பந்தரை குளக்  கரையில், அமரச் செய்துவிட்டு, அவர் மட்டும் நீராடச் சென்றார்.

தந்தையார் நீரில் மூழ்கியவுடன், தந்தையைக் காணவில்லையே என்று குழந்தையான ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரல் கேட்டு பார்வதியும் சிவன் வந்தனர் . பார்வதி தன் ஞானப் பாலை அவருக்குத் தந்தார்.

குளத்தில் இருந்து நீராடி வந்த ஞானசம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, யார் உனக்கு பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை மேலே கண்ட பாடலைப் பாடியது என்பது புராணம் தரும் செய்தி.

இந்தத் தேவாரம் காட்டும் சில ஆழ்ந்த கருத்துகளை பார்ப்போம்.

உனக்கு யார் பால் தந்தது என்று தந்தையார் கேட்ட போது , குழந்தை கூறியது  "இவன் அன்றே" என்று.

இதோ இருக்கிறானே இவன் தான் என்று.

அவன் அன்றே என்று சொல்லி இருந்தால் வேறு எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று  கொள்ளலாம். இவன் அன்றே என்பது அண்மைச் சுட்டு. அருகில்  உள்ள ஒன்றை சுட்டிக் காட்டுவது.

பக்கத்தில் இருக்கிறான்.

ஞான சம்பந்தருக்குத் தெரிகிறது. அவருடைய தந்தையாருக்குத் தெரியவில்லை.

இப்படித்தான், உண்மை மிக மிக அருகில் இருந்தும், நாம் அதை அறியாமலேயே  எங்கே எங்கே என்று ஊரெல்லாம் தேடிக் கொண்டிருப்போம்.

உண்மை, உங்களுக்கு மிக மிக அருகில் இருக்கிறது. பார்க்கும் கண் வேண்டும்.

ஞானசம்பந்தரின் தந்தை மட்டும் அல்ல, அருகில் இருந்த யாரும் இறைவனை  காணவில்லை. கண்டதாக குறிப்பு ஒன்றும் இல்லை.

அவர்கள் எல்லோரும் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதைத் தேடுகிறோமோ அதைத்தானே கண்டடைவோம் ?

தேடுங்கள் , கிடைக்கும் என்றார் இயேசு.

ஆம். தேடியது கிடைக்கும்.

எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் தொடரும்.





No comments:

Post a Comment