Pages

Saturday, February 27, 2016

திருக்குறள் - இல் வாழ்பவனின் கடமை

திருக்குறள் - இல் வாழ்பவனின் கடமை 


முந்தைய குறளில் பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவர்கள், துறவிகள் இந்த மூவருக்கும் உதவி செய்வது இல்லறத்தில் ஈடு பட்டவர்களின் கடமை என்று கூறப் பட்டதைப் பார்த்தோம்.

அடுத்த மூன்று கடமைகளை இங்கு சொல்கிறார் வள்ளுவர்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

துறந்தார்
துவ்வாதார்
இறந்தார்

ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

துறந்தார் - அது தான் முந்தைய குறளிலேயே சொல்லியாச்சே துறவிகளுக்கு உதவி செய்யணும்னு. அப்புறம் என்ன மீண்டும் துறந்தார்னு இந்த குறள்ல வேற ?

முந்தைய குறள் , தானே துறந்தவர்கள்.

இந்த குறளில் பிறரால் துறக்கப் பட்டவர்கள், அல்லது கை விடப் பட்டவர்கள். யாருமற்றவர்கள். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது ஒவ்வொரு இல்லறத்தானின் கடமை ஆகும்.

அடுத்தது துவ்வாதார். அது என்ன துவ்வாதார் ?

உயிர்கள் எப்போதும் இன்பங்களை துய்க்க விரும்பும். இன்பங்களை அனுபவிக்க விரும்பும். இன்பத்தை விரும்பாத உயிர் எது. அப்படி இன்பத்தை அனுபவிக்க  முடியாதவர்கள் துவ்வாதார்.


அது யார் இன்பத்தை அனுபவிக்க முடியாதவர்கள் என்றால் அது ஒரு பட்டியல் போடலாம்.

முதலாவது, வறுமை உற்றவர்கள். கையில் செல்வம் இல்லாமையால் இன்பங்களை அனுபவிக்க முடியாமல் இருப்பவர்கள். இன்பங்கள் என்றால் ஏதோ ஆடம்பரமான   இன்பங்கள் அல்ல. நல்ல உணவு, நீர், சுத்தமான உடை, இருக்க இடம், பாதுகாப்பு போன்ற அடிப்படை இன்பங்களை கூட அனுபவிக்க முடியாதவர்கள்.

நம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை பள்ளியில் படிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .  பள்ளியில் கட்ட வேண்டிய கட்டணத்தை கட்ட பணம்  இல்லாமல் இருக்கலாம். கற்பதனால் வரும் இன்பத்தை அந்தக் குழந்தை பெற முடியாமல் போகலாம். அதற்கு உதவி செய்வது.

இரண்டாவது, உடல் ஊனம் அடைந்தவர்கள். கண் இல்லை என்றால் நல்ல காட்சியை பார்க்க முடியுமா? தெருவில் பயமின்றி நடக்க முடியுமா, கால் இல்லாதவன் , நோய் வாய் பட்டவர்கள் இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவர்களுக்கு  இல் வாழ்வான் துணையாக இருக்க வேண்டும்.

மூன்றாவது, மன நோய் கொண்டவர். மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள், அதீதமான துக்கத்தால் மன நிலை  பாதிக்கப் பட்டோர் போன்றோருக்கு இல்வாழ்வான்  துணை செய்ய வேண்டும்.

அடுத்ததாக , இறந்தார்.

இறந்தாருக்கு எப்படி உதவி செய்ய முடியும் ?

அதாவது, அனாதையாக இறந்தவருக்கு ஈமக் கடன் செய்ய வேண்டியது ஒரு இல்லறத்தானின் கடமை.

சடாயு இறந்த போது , அவருக்கு இராமன் அவருக்கு ஈமக் கடன் செய்தான். சடாயுவை தன் தந்தையாகவே நினைத்து அவருக்கு ஈமக் கடன் செய்தான்.


இந்தனம் எனைய என்ன கார் 
     அகில் ஈட்டத்தோடும் 
சந்தனம் குவித்து, வேண்டும் 
     தருப்பையும் திருத்தி, பூவும் 
சிந்தினன்; மணலின் வேதி 
    தீது அற இயற்றி, தெண் நீர் 
தந்தனன்; தாதை தன்னைத் தடக் 
     கையான் எடுத்துச் சார்வான்,

மீதிக் கடமைகளை அடுத்த குறளில் பார்ப்போம்.


No comments:

Post a Comment