பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே
பிரபந்தம் போன்ற நூல்களை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிக்கக் கூடாது. மனனம் செய்து திருப்பிப் படிப்பது என்றால் அதற்கு நாம் எதற்கு ? ஒரு ஒலிப் பதிவு நாடா (tape recorder) போதுமே. ஒரு முறை பதிவு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அது அப்படியே பாடும்.
பெரியாழ்வார் சொல்கிறார்....இந்த பல்லாண்டு பாடல்களை நவில வேண்டும் என்று.
"நவின்றுரைப் பார்"
நவின்று உரைப்பார்.
அது என்ன நவில்தல் ?
நவில்தல் என்றால் அறிந்து கொள்ள வேண்டும் என்று வாசிப்பது . சும்மா மேலோட்டமாக வாசித்துக் கொண்டு போவது அல்ல. ஒரு நூலின் ஆழ்ந்த பொருளை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு வாசிப்பதற்கு நவில்தல் என்று பெயர்.
திருவள்ளுவர் சொல்லுவார் ....
நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (783)
நவில் தொரும் நூல் நயம் போலும் பயில் தொரும் பண்புடையாளர் தொடர்பு.
ஒரு நூலை நவில நவில எப்படி அதில் புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ, அது போல நல்லவர்களின் தொடர்பு புது புது நன்மைகளை தரும் என்கிறார்.
திருப்பல்லாண்டை நவில வேண்டும். ஆழ்ந்து கற்க வேண்டும்.
இது ஒரு செய்தி.
அறிய வேண்டும், கற்க வேண்டும் என்றால் எதை அறிய வேண்டும் ? எதை கற்க வேண்டும் என்ற கேள்வி வரும்.
அதற்கும் அவர் விடை தருகிறார்.
"நல்லாண் டென்று நவின்று "
இது நமக்கு நல்லது என்று அறிந்து கொண்டு.
பெரியாழ்வார் சொன்னார் என்பதற்காக கற்க வேண்டாம், அது பெருமாள் மேல் பாடப் பட்ட பாடல் என்பதால் கற்க வேண்டாம், உங்களுக்கு நல்லது என்று அறிந்து கொள்ளுங்கள் என்கிறார்.
சரி, ஆழ்ந்து படித்து, அதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டாயிற்று, அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் அதை அறிந்தால் போதாது. அறியாத மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
"நல்லாண் டென்று நவின்றுரைப் பார்"
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்
நமக்கு நல்லது என்று அறிந்து (நவின்று) உரைப்பார்
எதை உரைப்பார்கள் ?
"நமோ நாராய ணாயவென்று"
நமோ நாராயாணாய என்று
இப்போது பாடலை முழுதும் பார்ப்போம்
பாடல்
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே
சீர் பிரித்தபின்
பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராய ணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராய ணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
பொருள்
பல்லாண்டு என்று = பல்லாண்டு என்று
பவித்திரனை = பவித்தரமானவனை
பரமேட்டியை = பரம ஏட்டில் பரம பதத்தில் உள்ளவனை
சார்ங்கம் என்னும் = சார்ங்கம் என்ற
வில் ஆண்டான் தன்னை = வில்லை ஆண்டவனை
வில்லிபுத்தூர் விட்டுசித்தன் = ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற ஊரில் இருந்த விஷ்ணு சித்தன் என்ற நான்
விரும்பிய சொல் = விரும்பிய இந்த பல்லாண்டு என்ற பாடல்களை
நல் ஆண்டு என்று = நல்லது என்று
நவின்று = கற்று உணர்ந்து
உரைப்பார் = மற்றவர்களுக்கு சொல்லுவார்
நமோ நாராய ணாய என்று = நமோ நாராய ணாய என்று
பல்லாண்டும் = பல ஆண்டுகள்
பரமாத்மனைச் = பரமாத்மனை, பெருமாளை
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே = சுற்றி இருந்து புகழ்வர் பல்லாண்டே
இந்தப் பாசுரத்தோடு திருப்பலாண்டு நிறைவு பெறுகிறது
இந்தத் திருப்பலாண்டு ஒரு புரட்சிகரமான வெளிப்பாடு.
பொதுவாக வாழ்த்துபவர், வாழ்த்து பெறுபவரை விட உயர்ந்தவராக இருக்க வேண்டும்.
பெற்றோர், பிள்ளைகளை வாழ்தலாம், ஆசிரியர் மாணவனை வாழ்தலாம்...ஆனால் மாணவன் ஆசிரியரை வாழ்துவது என்பது நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது.
பெருமாள், பெரியாழ்வாரை விட எந்த விதத்தில் குறைந்தவர். இருந்தும் பெரியாழ்வார் "நீ பல்லாண்டு வாழ்க" என்று வாழ்துகிறார். அது மட்டும் அல்ல, அவர் பெருமாளை மட்டும் அல்ல, பெருமாளையும், ஸ்ரீதேவியையும், சங்கு , மற்றும் சக்ரத்தையும் வாழ்துகிறார்.
அது எப்படி சரியாகும் ?
பக்தியின் உச்ச கட்டம் - அன்பு மட்டுமே நிறைந்த மனம். வாழ்த்த வயது, அறிவு போன்ற தகுதி எதுவும் வேண்டாம்....அன்பு மட்டும் இருந்தால் போதும். அது ஒன்றே தகுதி.
வைணவர்கள்தான், வாழ்த்த அன்பைத் தவிர வேறு ஒரு தகுதியும் வேண்டாம் என்று முன் மொழிந்தவர்கள்.
இனிமேல், வாழ்த்த தகுதியை பார்க்காதீர்கள்.
இது ஒரு செய்தி.
மற்றொன்று, எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று தான் மனிதன் பறக்கிறான்.
கோவிலுக்குப் போனால், ஏழைகளை விட பணக்காரன் தான் அதிக ம் கேட்கிறான். அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சைக் காரனைப் போல கடவுளிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
இருப்பது போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை.
இத்தனை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல மனம் வருவது இல்லை. இன்னும் தா, இன்னும் தா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
"நீ இதுவரை எனக்கு தந்ததற்கு நன்றி. போதும். நீ உன் மனைவி மற்றும் சொத்துக்களோடு நல்லா இரு" என்று கடவுளிடம் கூறிய முதல் ஆள் பெரியாழ்வார்.
திருப்தி படுங்கள். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லுங்கள். கொடுத்தவனை வாழ்த்துங்கள்.
எல்லாம் நல்லபடியா நடக்கும்.
மொத்தத்தில், தனக்கு வேண்டும் என்று எண்ணாமல், இறைவனை பல்லாண்டு வாழ வாழ்த்துவது நல்ல கருத்துதான்.
ReplyDelete