இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?
வாலி வதை என்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. இராமன் என்ற அவதார புருஷன் இப்படி ஒரு தவறு செய்யலாமா என்று அவனின் பக்தர்களே ஜீரணிக்க முடியாமல் திணறும் ஒரு இடம் வாலி வதம் .
இராமன் தவறு செய்தான் என்று வைத்துக் கொண்டாள் , ஏன் அந்தத் தவற்றை செய்தான் ? அதற்கு காரணம் என்ன ? காரணம் இருந்தாலும், செய்தது சரிதானா என்ற கேள்விகள் காலம் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இராமன் , ஆராயாமல் எடுத்த முடிவுக்குக் காரணம் அனுமன்.
மனைவியைப் பிரிந்து, சோகத்தில் இருக்கும் இராமனை தூண்டி விட்டு , அவனை உணர்ச்சி வசப்படச் செய்து தன் காரியத்தை முடித்துக் கொண்டது அனுமனின் சாமர்த்தியம்.
"சுக்ரீவனனின் மனைவியையும் எடுத்துக் கொண்டான்" என்று சொல்கிறான் அனுமன். அப்படி என்றால் என்ன ? சுக்ரீவனனின் அரசையும் எடுத்துக் கொண்டான் என்று பொருள் பட பேசுகிறான்.
வாலி மூத்தவன். அரசு அவனுக்குத் தான் சொந்தம். அப்படி இருக்க , சுக்ரீவனின் அரசை அவன் எடுத்துக் கொண்டான் என்று சொல்வது எப்படி சரியாகும்.
அது மட்டும் அல்ல.
வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று ஒரு இடத்தில் கூட கம்பன் பதிவு செய்யவில்லை.
இறைவனின் மேல் விழுந்து அழும் மண்டோதரி சொல்கிறாள் "சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் என நாடி தடவியதோ ஒருவன் வாளி " என்று.
வாலியின் மேல் விழுந்து புலம்பும் தாரை அப்படி ஒரு வரிகூட சொல்ல வில்லை.
வாலியின் மேல் வீண் பழியை சுமத்தியது அனுமன். இராமனை தூண்டி அவனிடம் வாலியை கொல்லுவேன் என்று சத்யம் வாங்கியது அனுமனின் பேச்சுத் திறம்.
பாடல்
உருமை என்று இவர்க்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.
பொருள்
உருமை = சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை . அது உருமை என்று வந்தது.
என்று = என்று
இவர்க்கு = சுக்ரீவனுக்கு
உரிய தாரமாம் = உரிமை உள்ள தாரமாம்
அருமருந்தையும் = அறிய மருந்தையும். இங்கு அவன் கூறும் அந்த 'ம்' காவியத்தின் போக்கை மாற்றுகிறது.
அவன் = வாலி
விரும்பினான் = விரும்பினான்
இருமையும் = தாரத்தையும், அரசையும்
துறந்து = துறந்து
இவன்= சுக்ரீவன்
இருந்தனன் = இருந்தான்
கருமம் இங்கு இது = இங்கு நடந்தது இதுதான்
எம் கடவுள் = எமக்கு கடவுள் போன்றவனே
என்றனன் = என்று அனுமன் கூறினான்
வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று சொல்ல வில்லை. "விரும்பினான்" என்று கூறுகிறான்.
பின், சுக்ரீவன் "இருமையும் இழந்தான்" என்று கூறுகிறான்.
மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த இராமன், எல்லாவற்றையும் தானே முடிச்சுப் போட்டுக் கொண்டு "சுக்ரீவனுக்கு உரிய தாரத்தையும், அரசையும் வாலி கவர்ந்து கொண்டான் " என்ற முடிவுக்கு வருகிறான்.
பாடம் நடத்துகிறான் கம்பன்.
1. உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. அறிவு பூர்வமாக, சிந்தித்து, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால் கால காலத்துக்கும் துன்பம் தான்.
2. மனைவி என்பவள் மருந்தைப் போன்றவள் என்கிறான் கம்பன். இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் இது போல கூறுகிறான். துன்பத்தை போக்குவது மருந்து. வலியை குறைப்பது, நீக்குவது மருந்து. கணவனுக்கு வரும் துன்பத்தை போக்குபவளாக மனைவி இருக்க வேண்டும். துன்பத்தை கொண்டு வந்து தருபவளாக அல்ல.
3. எப்படி பேசுவது என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய காரியத்தையும் நடத்தி விடலாம். யாருடைய உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும். பேசிப் பழக வேண்டும். வார்த்தைகளை கையாள்வதில் திறமை வேண்டும். வெற்றிக்கு அது முதல் படி.
இராமன் செய்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும்.
அதில் இருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
அறிவோம். உயர்வோம்.
http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_15.html
இந்த மாதிரி சூழ்ச்சியாகப் பேசியதில் அனுமனுக்கு என்ன பெருமை? அதுவும் ஒரு எமாற்றுதானே? அதுவும் ஒரு விதத்தில் பொய்தானே?
ReplyDeleteஇராமன் ஒரு "இளிச்ச வாயன்" என்று ஆகி விடுகிறது!
Adamant atrocity people one day or other day will be destructed by someone.
ReplyDelete