இராமாயணம் - வாலி வதம் - வேறு உளதோ தருமம் ?
இராமனின் அம்பால் அடி பட்டு இறக்கும் தருவாயில் உள்ள வாலி இராமனைப் பார்த்து சொல்லுகிறான் "என்னை கொல்லும் உன் அம்பை விட சிறந்த தருமம் வேறு உள்ளதோ "
பாடல்
'புரம் எலாம் எரி செய்தோன்
முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி, என்
வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என்
உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது
வேறு உளதுஅரோ, தருமமே?
பொருள்
'புரம் எலாம் = முப்புரங்களையும்
எரி செய்தோன் = எரி ஊட்டிய சிவனின்
முதலினோர் = இந்திரன் மற்றும் பிரமன் போன்றோர்
பொரு இலா = ஒப்பில்லாத
வரம் எலாம் உருவி = வரங்களை எல்லாம் கவர்ந்து
என் = என்னுடைய
வசை இலா = குற்றமற்ற
வலிமை சால் = பெரிய வலிமையை
உரம் எலாம் உருவி = உறுதியான மார்பை ஊடுருவி
என் உயிர் எலாம் நுகரும் = என்னுடைய உயிரை நுகரும்
நின் = இராமா உன்னுடைய
சரம் அலால் = அம்பைத் தவிர
பிறிது வேறு உளது = வேறு ஏதாவது இருக்கிறதா
அரோ = அசைச் சொல்
தருமமே = தர்மம் என்று ?
தன்னை மறைந்து நின்று கொன்ற இராமனின் அம்பை தர்மத்தின் வடிவம் என்று போற்றுகிறான் வாலி.
ஏன் அப்படி போற்ற வேண்டும் ?
கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்ப்போம்.
ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இந்த வாலி வதத்தை வேறு ஒரு கோணத்தில் சிந்தித்துப் பார்ப்போம் .
ஒரு வேளை , இராமன் நேரில் சண்டைக்கு வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் ?
ஒன்று, இராமனின் பாதி ஆற்றல் வாலிக்குப் போய் இருக்கும். பாதி ஆற்றலை இழந்த இராமன் கட்டாயம் தோற்றிருப்பான். அல்லது போரில் இறந்து கூட போய் இருக்கலாம். சீதை அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதான்.
அது போகட்டும். வாலி என்னவாகி இருப்பான் ? ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் இராமனின் ஆற்றலில் பாதியைக் கொண்டு, மிகப் பெரிய வீரனாக மாறி இருப்பான்.
சரி அடுத்து என்ன ஆகும் ?
வாலியை யாராலும் வெல்ல முடியாது.
ஆனால், வயது ஆகிக் கொண்டே போகும். எமன் கிட்ட வர பயப்படுவான். எனவே மரணம் வராது. ஆனால், மூப்பு வரும். கண் பார்வை மங்கும், காது கேட்காது, ஞாபக சக்தி போய் விடும். ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மரணம் என்ற ஒன்று இல்லாமல் வயதாகி, முடங்கி மூலையில் கிடப்பான். அப்படி ஒரு நிலை யாருக்காவது வேண்டுமா என்று கேட்டால் யாருமே வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். கல்ப கோடி ஆண்டுகள் மரணமில்லாமல், ஆனால் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்க யாருக்குப் பிடிக்கும் ? அப்படி
சரி, அப்படி எதுவும் நடக்கவில்லை.
இராமனை கண்டவுடன் வாலி அவனிடம் சரண் அடைந்து , அவனுக்கு உதவி செய்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் இராமானுக்கே நான் உதவி செய்தவன் என்ற எண்ணம் தான் அவனுக்கு இருந்திருக்கும். அந்த ஆணவம், அவன் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்திருக்கும்.
எப்படி பார்த்தாலும், சிக்கல் தான்.
ஆனால், இப்போது நடந்தது என்ன ?
இந்த சிக்கல் எல்லாம் தாண்டி, வாலி மோட்சம் அடைகிறான்.
இது வாலிக்குத் தெரிந்திருக்கிறது.
இதுதான் தருமம் என்று அவன் முடிவு செய்கிறான்.
http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post.html
http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post.html
எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் நீங்களே அருமையான சமாதானம் அளித்து விட்டீர்கள்.எல்லாம் அறிந்த ராமன் செய்த காரியம் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு போதும்! படிக்க படிக்க சுவையாக உள்ளது.
ReplyDeleteஇந்த வாலி வதத்தால் சாதாரண மக்களுக்குக் கிட்டும் பாடம் என்ன?
ReplyDelete