திருக்குறள் - தடையும் , விடா முயற்சியும்
வாழ்வில் எத்தனையோ தடைகள் வரும்.
நினைத்தது நடக்காது. தோல்விகள் வரும். எதிர்பாராத சறுக்கல்கள் இருக்கும்.
எல்லாம் சரியாக, நாம் நினைத்தது படி நடந்து கொண்டிருந்தால் நல்லதுதான்.
நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக ஏதாவது நடந்தால் என்ன செய்வது ?
போரில், யானை மேல் அம்புகள் பாயும். ஆனால், அந்த யானை அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய கம்பீரம் குறையாமல் போரில் மேல் செல்லும். அது போல ஊக்கம் உடையவர்கள் , என்ன துன்பம் வந்தாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மேலே செல்வார்கள்.
பாடல்
சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
சீர் பிரித்த பின்
சிதை இடத்து ஓல்கார் உரவோர் புதை அம்பில் பட்டு பாடு ஊன்றும் களிறு
பொருள்
சிதை இடத்து = சிதைவு வந்த இடத்தில். துன்பம் வந்த போது
ஓல்கார் = தளர்ந்து பின் வாங்க மாட்டார்
உரவோர் = வலிமை உடையோர்
புதை அம்பில் பட்டு = புதைக்கின்ற அம்பினால் பட்டு
பாடு = கடமை, வேலை
ஊன்றும்பா = நிலை நிறுத்தும்
களிறு = யானை
அம்பு பட்ட யானை போல தளராது வேலை செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
இது ஒரு பெரிய கருத்தா ? இதை யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். வள்ளுவர் சொல்லும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது ?
பார்ப்போம்
துன்பம் இயற்கையாக வரலாம். அல்லது நமக்கு வேண்டாதவர்கள் மூலம் வரலாம்.
போரில் உள்ள யானைக்கு வந்த துன்பம் எதிரிகள் மூலம் வந்த துன்பம். அதிலும் ஒரு ஆள் செய்த துன்பம் இல்லை. பல எதிரிகள் எய்த அம்பு.
அது போல வாழ்வில் எதிரிகளை கண்டு கலங்கி விடக் கூடாது. உடலால், மனதால், பொருளாதாரத்தால் நமக்கு துன்பம் விளைவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கலாம். வாங்கிய கடனை திருப்பித் தராதவர்கள், பணத்தை வாங்கி கொண்டு அதற்குரிய பொருளை, சேவையைத் தராமல் ஏமாற்றுபவர்கள், நம் பொருளை , உழைப்பை கவர்ந்து கொள்பவர்கள், நம்மை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுபவர்கள், நமக்கு வர வேண்டிய நன்மையை தடுத்து நிறுத்துபவர்கள் என்று பல வித எதிரிகள் இருக்கலாம்.
போரில், ஒவ்வொரு எதிரியாக வந்து அம்பு போடமாட்டான். எல்லோரும் ஒன்றாக அம்பு எய்வார்கள். அது போல நமக்கும் துன்பம் வரும் போது , ஒன்றாக வரும். ஒவ்வொன்றாக வராது.
புதை அம்பு என்றார் வள்ளுவர். ஏதோ மேலே பட்டு குத்தி விட்டு கீழே விழுந்து விடும் அம்பு அல்ல. உடம்பில் குத்தி உள்ளே சென்று , இரத்தம் வெளி வர , வலி உண்டாக்கும் அம்புகள்.
ஒரு அம்பு குத்தியவுடன், "ஐயோ, வலிக்கிறதே , இதை வெளியில் எடுத்து, கட்டு போட்டு , குணமானபின் வந்து சண்டை போடலாம் " என்று சொல்ல முடியாது. ஒரு அம்பு பாய்ந்து , இரத்தம் வந்து கொண்டிருக்கும் போது , இன்னொரு அம்பு பாயும். நின்று யோசிக்க நேரம் இல்லை. களைப்பாற நேரம் இல்லை. காயத்துக்கு கட்டுப் போட நேரம் இல்லை.
அது போல, ஒரு துன்பம் வந்தால், தளர்ந்து இருந்து விடக் கூடாது. இன்னும் வரும், அதையும் சேர்த்து தாங்குவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரு அம்புக்கே தளர்ந்து விட்டால், பின் பத்து அம்பை எப்படி தங்குவது.
உரவோர் - வலிமை மிக்கவர் என்று பொருள்.
உரம் என்ற சொல்லில் இருந்து வந்தது. உரம் என்பது மற்றவற்றை நன்கு வளர உதவி செய்வது. அது போல, வலிமையானவர்கள், தான் வலிமையாக இருப்பதோடு தன்னை சார்ந்தவர்களையும் வலிமை உள்ளவர்களாக ஆக்குவார்கள்.
யானைப் படை முன்னால் அடித்து துவம்சம் செய்து கொண்டு போகும். அதன் பின்னால் மற்ற படைகள் முன்னேறும். எதிரியின் அரண்களை தன் வலிமையால் தகர்த்து மேலே செல்லும். அதன் வழியை பின் பற்றி மற்ற படைகள் முன்னேறும்.
அது போல, நாம் வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு மேலே சென்றால் , நம் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் நம் பின்னால் வருவார்கள்.
யானை வலிக்கு பயந்து புறமுதுகு கொண்டு ஓடினால் , தன்னுடைய படைக்கே அது எமனாக மாறிவிடும். எதிரியை கொல்வதற்கு பதில், தான் படைக்கே அது சேதம் விளைவித்து விடும்.
அது போல, நாம் துன்பத்தை கண்டு தளர்ந்து விட்டால், அது நம் குடும்பத்தில் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும். எனவே, வலியைம் அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும்.
மேலும், யானை தன் மேல் பட்ட அம்புகளை தாங்கி கொண்டு மேலே செல்லும்போதும் அதன் கம்பீரம் குறையாது. அது கூனி குறுகிச் செல்லாது.
துன்பத்தை கண்டு நாம் தயங்கி விடக் கூடாது. கம்பீரமாக மேலே செல்ல வேண்டும்.
அப்படிச் செல்ல என்ன வேண்டும் ?
ஊக்கம் வேண்டும்.
அப்படி செய்வது, "கடமை" என்கிறார் வள்ளுவர். அது ஏதோ விரும்பி செய்வது அல்ல. அது ஒரு கடமையும் கூட.
இதைத்தான் அவ்வையாரும் ஒரே வரியில் சொல்லி விட்டுப் போனார்
"ஊக்கமது கைவிடேல் " என்று.
ஊக்கத்தை கை விடாதீர்கள்.
எத்தனை தடையும் வந்தாலும் , வெல்ல முடியும்.
வெல்வீர்கள்.
இந்த இரண்டு வரியை நானே படித்திருந்தால் இவ்வளவு அர்த்தம் புரிந்திருக்காது. தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம்.இதுவே ஊக்கத்தை அளிக்கவல்லது.
ReplyDeleteஎப்படி ஐயா உங்களுக்கு நன்றி சொல்வது ? முருகன் திரு அருளில் நன்றாகா குடும்பத்துடன் நல் வாழ்வு வாழ பிரத்தனை
ReplyDelete