நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள்
அது ஒரு பழங்கால தமிழ் நாட்டின் ஒரு கிராமம். ஊரில் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. அந்த வேப்ப மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வசிக்கிறது. அப்போதுதான் முட்டை போட்டு இருக்கிறது. அந்த வேப்ப மரத்தின் நிழலில் கொஞ்சம் சிறுவர்கள் நெல்லிக் காயை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மாலை வந்து விட்டது. உழவர்களும் , பயிற்சிக்கு சென்ற வீரர்களும் வீடு திரும்புகிறார்கள். வீட்டில் , இனிமையான அவள் விளக்கு ஏற்றுகிறாள். இரவு நீள்கிறது.
இதை விவரிக்கும் பாடல்
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே.
ஈன் பருந்து = ஈன்ற பருந்து. முட்டை இட்ட பருந்து
உயவும் = வருந்தவும்
வான் பொரு = வானளாவிய
நெடுஞ் = நீண்ட
சினைப் = கிளைகளைக் கொண்ட
பொரி = கடினமான
அரை வேம்பின் = வேப்ப மரத்தின் கிளையின்
புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல்
கட்டளை அன்ன இட்டு = கட்டளை இட்டது போல
அரங்கு இழைத்து = விளையாடும் இடம் செய்து
கல்லாச் சிறாஅர் = கற்காத சிறுவர்கள்
நெல்லி வட்டு ஆடும் = நெல்லிக் கனியை விளையாடும் காயாகக் கொண்டு ஆடும்
வில் = வில்
ஏர் உழவர் = கலப்பையை கொண்ட உழவர்
வெம் முனைச் சீறூர்ச் = கூரிய முனையைக் கொண்ட சின்ன ஊர்
சுரன் முதல் வந்த = புஞ்சை நிலத்தில் முதலில் வந்த
உரன் மாய் = வலியைக் குறைக்கும்
மாலை = மாலைப் பொழுது
உள்ளினென் = நினைத்தேன்
அல்லெனோ = ஒரு வேளை நினைக்க வில்லையோ
யானே = நானே
உள்ளிய = நினைத்த
வினை முடித்தன்ன இனியோள் = வேலை செய்து முடித்ததை போன்ற இனிமையானவள்
மனை = இல்லத்தில்
மாண் = மாண்பொடு
சுடரொடு = விளக்கு ஏற்றி வைத்து
படர் பொழுது எனவே.= நீளும் பொழுதைப் போல
என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வரிகளாக இருக்கிறதா ?
முட்டை போட்ட பருந்து, வேப்ப மர நிழல், விளையாடும் சிறுவர்கள், வீடு திரும்பும் ஆண்கள். விளக்கு ஏற்றும் நேரம்.
இதில் என்ன கவிதை இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும்.
கொஞ்சம் கரடு முரடான தமிழ்தான்.
சிந்திப்போம்.
இந்த பாடலை எழுதியது யாராக இருக்கும்.
வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி எழுதியதால் எழுதியது ஒரு ஆண் என்று புரிகிறது.
எந்த மனநிலையில் இருந்து எழுதி இருக்கிறான் ?
பிரிவின் சோகத்தில் இருந்து எழுதுகிறான்.
எப்படி என்று பார்ப்போம்.
முதலில், பருந்து முட்டை இட்டு வலியில் இருக்கிறது. ஆனால்,அது அந்த மரத்தின் அடியில் விளையாடும் சிறுவர்களுக்குத் தெரியாது.அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது, கல்லாச் சிறார் என்றதால், அந்த காலத்தில் எல்லா பிள்ளைகளும் பள்ளிக் கூடம் போய் படிக்கவில்லை என்று தெரிகிறது. படிப்பறிவு இல்லாத சிறுவர்கள். அவர்கள் எப்படி பருந்தின் வலியை உணர மாட்டார்களோ, அப்படி நானும் அவளின் சோகத்தை அறியாமல் பொருள் தேடி வெளியூர் போகிறேன் என்பது சொல்லாமல் சொன்ன கதை.
மூன்றாவது, மாலை நேரத்தில் வேலைக்குப் போன ஆண்கள் எல்லோரும் வீடு திரும்புகிறார்கள். உழவர்கள், வீரர்கள் எல்லோரும் வீடு திரும்பும் நேரம். தான் மட்டும் வீடு திரும்பாமல் எங்கோ தனிமையில் தவிக்கும் நிலை புரிகிறது அவனுக்கு.
நான்காவது, தனிமையில், அவள் விளக்கு ஏற்றி வைத்து காத்திருக்கும் சோகம் நம் மீதும் படர்கிறது.
ஐந்தாவது, அவள் மிக மிக இனிமையானவள். அவளின் இனிமைக்கு ஒரு உதாரணம் கண்டு பிடித்த இந்த கவிஞனுக்கு ஒரு கோவில் கட்டி கும்பிடலாம்.
" உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்"
நினைத்த வேலையை நல்ல படியாக முடித்தால் வரும் இன்பம் வருமே, அந்த இன்பத்தைப் போன்றவள் அவள் என்கிறான்.
ஒரு வீட்டை நன்றாக கட்டி, பால் காய்ச்சி குடி போகும் போது வரும் இன்பம், பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது வரும் இன்பம், இப்படி ஒரு பெரிய வேலையை நன்றாக முடித்த பின் வரும் இன்பம் போன்றவள் அவள்.
அதிலும் குறிப்பாக "உள்ளிய வினை" அதாவது நினைத்த வேலை. யாரோ சொன்ன வேலை. நாம் நினைத்து செய்த வேலை.
அடடா, என்ன ஒரு உதாரணம்.
தமிழனாகப் பிறந்ததற்கு இன்னுமொருமுறை கர்வப் பட்டுக் கொள்ளலாம்.
ஆறாவதாக, வெளியூரில் இருக்கும் அவன் வேலை மும்முரத்தில் சில சமயம் அவளை நினைப்பதைக் கூட மறந்து விடுகிறான். அப்படி நினைக்காதது அவனுக்கு ஒரு குற்ற உணர்வை தருகிறது. எனக்காவது வேலை இருக்கிறது. அவள் பாவம் தனியாக இருப்பாளே என்று தவிக்கிறான்.
"உள்ளினென் அல்லெனோ"
முதலில் நினைத்தேன் என்கிறான். உடனே குற்ற உணர்வு வருகிறது. "அல்லெனோ' , நினைக்கவில்லையோ என்று தவிக்கிறான்.
ஏழாவதாக, பகல் எல்லாம் எப்படியோ போய் விடும். இந்த மாலைதான் படுத்தும். வலிமையை குன்றச் செய்யும் மாலை என்கிறான்.
உரன் மாய் மாலை
வலிமையை மாய்க்கும் (அழிக்கும்) மாலை.
கடைசியாக, இந்த மாலையும் அதை தொடர்ந்து வரும் இரவும் இருக்கிறதே, அது சட்டென்று முடியாமல் நீண்டு கொண்டே போகிறதாம்.
"படர் பொழுது"
விளக்கு ஏற்றி வைக்கிறாள். விளக்கின் ஒளியில் நடக்கும் போது நிழல் எப்படி நீண்டு தெரியுமோ அப்படி இந்த மாலையும் இரவும் நீண்டு கொண்டே போகிறது. உருவம் என்னவோ சின்னது தான், ஆனால், இந்த நிழல் மட்டும் நீண்டு கிடக்கும் . அது போல, எப்போதும் சின்னதாக இருக்கும் மாலை இப்போது நீண்டு கிடக்கிறது.
வரிக்கு வரி பிரிவின் சோகம் நிழலாடும் பாடல்.
எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து வந்து, ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தை, பெயர் தெரியாத ஒரு ஆணையும்,பெண்ணையும், அவர்களின் பிரிவுத் துயரையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறதல்லவா இந்தப் பாடல்.
இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.
அந்த கிராமமும்,அந்த அந்தி நேரமும், விளக்கேற்றிய அந்த வீடும், அதில் பிரிவின் சோகத்தில் இருக்கும் அந்த பெண்ணும் உங்களுக்குத் தெரிவார்கள்.
http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_8.html
அருமையான பாடல் உங்களுடைய விவரமான விளக்கம் இல்லாமல் இந்த பாடலின் சுவையையோ இனிமையையோ அனுபவித்து இருக்க முடியாது. யார்எழுதியது ?
ReplyDeleteஏதோ ஓவியம் வரைந்தது போல நம் மனதில் காட்சி படர்கிறது. நன்றி.
ReplyDelete