திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?
அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?
அரப்பள்ளியானும் = அரவணையில், பாம்பு அணையில் துயிலும் திருமாலும்
அலர் உறைவானும் = மலரின் மேல் வாழும் பிரம்மாவும்
அறியாமைக் = அறியாமல்
கரப்பு = மறைந்து இருப்பதை
உள்ளி = எண்ணி
நாடிக் = தேடி
கண்டிலரேனும் = காணவில்லை என்றாலும்
கல் சூழ்ந்த = கற்கள் நிறைந்த
சிரப்பள்ளி = திருச்சிராப்பள்ளி
மேய = வாழும்
வார்சடைச் = நீண்ட சடை முடியை கொண்ட
செல்வர் = செல்வர்
மனைதோறும் = வீடு வீடாக சென்று
இரப்பு உள்ளீர்;= பிச்சை பெற்று கொண்டு இருந்தால்
உம்மை = உன்னை
ஏதிலர் = மற்றவர்கள்
கண்டால் = பார்த்தால்
இகழாரே? = பரிகாசம் செய்ய மாட்டார்களா
ஏதிலார் என்றால் மற்றவர்கள் என்று பொருள்.
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் திருவள்ளுவர்.
மற்றவர்கள் குற்றத்தைப் பார்க்கும் போது , தன்னுடைய குற்றத்தையும் சிந்தித்தால் இந்த உலகில் எந்த தீமையும் நிகழாது என்கிறார் வள்ளுவர்.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
எல்லோரும் இருக்கும் போது, காதலனும் காதலியும் எதோ மற்றவரக்ளை பார்ப்பது போல பார்த்துக் கொள்வார்கள். தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப் படுத்த மாட்டார்கள்.
ஏன் ஏதிலார் என்றார் ?
சிவ பெருமான் பெரிய ஆள். எல்லாம் வல்லவர் என்று அவரை வணங்குபவர்களுக்குத் தெரியும். ஆனால் அவரை வணங்காத மற்ற சமயத்தவர்களுக்கு என்னடா இவர் பெரிய ஆள் என்கிறார்கள் வீடு வீடாக போய் பிச்சை வாங்குகிறாரே என்று பரிகாசம் செய்வார்கள் அல்லவா. அதனால் ஏதிலார் என்றார்.
சிவனுக்கு பெரிய மலை கோட்டையே இருக்கிறது. அவ்வளவு பெரிய வீடு இருக்கும் ஆள் எதுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று நகைப்பார்கள்.
திருமாலும், பிரமனும் ஆண்டவனின் அடியையும் முடியையும் காணச் சென்றார்கள். காணமுடியாமல் வந்தார்கள் என்ற இந்த கதையை வைத்துக் கொண்டு சிவனா, திருமாலா யார் பெரியவன் என்ற சர்ச்சை தொடங்கி விட்டது.
இந்த கதைக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன ?
முதலாவது, திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகளின் கணவன். ப்ரம்மா அறிவுக்கு அதிபதி. காலை மகளின் கணவன். இறைவனை அறிவினாலோ, செல்வத்தாலோ காண முடியாது , பக்தி ஒன்றே அவனை அறியும் வழி என்று சொல்லுவது முதல் அர்த்தம்.
இரண்டாவது, மாலும் அயனும் ஏன் அடி முடி தேடிச் செல்ல வேண்டும் ? சிவன் எங்காவது சென்று ஒளிந்து கொண்டு எங்கே என்னை கண்டு பிடியுங்கள் என்று சொல்லி இருக்கலாமே ? அடி முடி காணச் சென்றார்கள் என்றால், இறைவன் என்பவன் இவ்வளவுதான் என்று வரையறை செய்யச் சென்றார்கள் என்று அர்த்தம். இங்கே தொடங்கி, இங்கே முடிவது தான் இறை என்று வரையறை செய்யச் சென்றார்கள்.
இறைவன் நம் சிந்தனைக்கு உட்பட்டவன் அல்ல. இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே
என்பார் மணிவாசகர்.
மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே
இராமனைக்
இராமனைப் பற்றி சொல்ல வந்த கம்பர் சொல்கிறார்,
"யாரே முடியக் கண்டார் " என்று. யாரும் இராமனை முழுமையாக காணவில்லை என்று.
மிதிலை நகர் பெண்கள் எல்லாம் இராமனின் தோளைக் கண்டவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள், அவன் திருவடியைப் பார்த்தவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள்
தோள் கண்டார். தோளே கண்டார்.
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.
.
ஏன் இறைவனை முழுமையாக அறுதியிட்டு சொல்ல முடியாது ?
வெளியே இருக்கும் ஒன்று என்றால் அதை பார்த்து, தொட்டு உணர்ந்து, இது இப்படி இப்படி இருக்கிறது என்று சொல்லி விடலாம். உள்ளே இருக்கும் ஒன்றை எப்படி அறிந்து கொள்வது. உள்ளே இருக்கும் ஒன்றே வெளியே தேடினால் எப்படி கிடைக்கும் ?
இறைவன் உள்ளே இருக்கிறான்.
"கரப்பு உள்ளி"
அப்படி என்றால் ஏன் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எப்படித்தான் தெரிந்து கொள்வது.
நாவுக்கரசர் சொல்கிறார்.
பாலில் நெய் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிகிறதா ? தெரியவில்லை.
கன்னுக்குத் தெரியவில்லை என்பதால் பாலில் நெய் இல்லை என்று சொல்ல முடியுமா ?
விறகின் உள்ளே தீ இருக்கிறது. தொட்டுப் பார்த்தால் சுடுமா என்றால் சுடாது. தீ என்றால் சுட வேண்டுமே ? எனவே விறகில் தீ இல்லை என்று சொல்ல முடியுமா ?
பின் எப்படி நெய்யும், தீயும் இருக்கிறது என்று நாம் அறிகிறோம்.
பாலை காய்ச்சி, உறை விட்டு, அதை தயிராகச் செய்து, பின் அதை கடைந்து எடுத்தால் வெண்ணை வரும். அந்த வெண்ணையை உருக்கினால் நெய் வரும்.
அதை போல, விறகை கடைந்தால் தீ வரும்.
அது போல இறைவனை எப்படி காண்பது ?
உறவு கோல் நாட்டு, உணர்வு கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன்
நிற்கும் என்கிறார் நாவுக்கரசர்.
விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே
excellent....
ReplyDeleteexcellent....
ReplyDeleteஎன்ன நைசாக திருமாலையும், பிரமனையும் மட்டம் தட்டுகிறார்!
ReplyDeleteஉரையில் குறிப்பிட்டுள்ள மாணிக்கவாசகர் பாடலும் மிக இனிமையாக இருக்கிறது.
நன்றி.
மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
ReplyDeleteமயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஐயா .... இப்பாடல் அப்பர் ஸ்வாமிகள் பாடியது .......