இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம்
இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை கூறினான் வீடணன். இராவணன் கேட்டான் இல்லை. பின்,அவனை விட்டு பிரிந்து வந்து, தன்னுடைய மந்திரிகளிடம் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டான். அவர்களும், இராமனிடம் போய் சேர்வோம் என்று கூறினார்கள்.
வீடணனும், "நல்லது சொன்னீர்கள். இராமனைச் சேர்ந்து இந்த பிறவியை போக்கிக் கொள்ளலாம் " என்று கூறுகிறான்.
இங்கே சற்று நிறுத்தி யோசிப்போம்.
இராவணன் செய்த செய்கை சரி இல்லை என்றால், அவனுக்கு உதவி செய்யாமல் தனித்து நின்றிருக்கலாம். பரசுராமன், விதுரன் போன்றோர் துரியோதனன் செய்தது தவறு என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் பாண்டவர் பக்கம் போக வில்லை. துரியோதனனுக்கு துணை செய்யவில்லை. அவ்வளவுதான். எப்படியோ போ என்று விட்டு விட்டார்கள்.
அதே போல வீடணனும் செய்து இருக்கலாம். எதற்காக இராமன் பக்கம் சேர்ந்து, இராவணனுக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் ? அது சரியா என்று வீடணனை ஆழ்வார் என்று கொண்டாடுபவர்கள் கூட மனதுக்குள் சங்கடப்படுவதை நான் கேட்டு இருக்கிறேன். ஏன் அப்படி செய்தான் ?
இந்தப் பாடலில் விடை தருகிறான்.
பாடல்
'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.
பொருள்
'நல்லது சொல்லினீர்; = (மந்திரிகளே ) நல்லது சொன்னீர்கள்
நாமும், = நாமும்
வேறு இனி = வேறு இனி
அல்லது செய்துமேல் = மற்றயது எது செய்தாலும்
அரக்கர் ஆதுமால் = அது அரக்க செயலே ஆகும் என்பதால்
எல்லை இல் = எல்லை இல்லாத
பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய
இராமன் = இராமனின்
தாள் = திருவடிகள்
இணை = இரண்டையும்
புல்லுதும் = அடைவோம்
புல்லி = அடைந்து
இப் பிறவி போக்குதும் = இந்த பிறவியைப் போக்குவோம்
இராமன் திருவடிகளை சேராமல் வேறு எதைச் செய்தாலும், அது அரக்க குணமே என்று வீடணன் நினைக்கிறான். இராவணனை விட்டு விலகிப் போய் , இராமன் கூட சேராமல் தணிந்து நின்றாலும் அது அரக்க குணமே என்பது அவன் எண்ணம்.
தவறு என்று தெரிந்தால் அதை எதிர்க்க வேண்டுமே அல்லால், நமக்கு என்ன , அவன் பாட்டுக்கு செய்து விட்டுப் போகட்டும், நம்மை பாதிக்காதவரை நல்லது என்று ஒதுங்கிப் போகக் கூடாது. அப்படி செய்தால், அது அரக்க குணமே.
அது மட்டும் அல்ல, வீடணனின் எண்ணம் எல்லாம், இராவணனை தண்டிப்பதோ, சீதையை விடுவிப்பதோ அல்ல.
அவன் இராமனை சேர வேண்டும் நினைத்தது, அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.
இந்தப் பிறவி என்னும் சூழலில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு இராமனின் திருவடிகளே துணை என்று நினைத்து போய் சேர்ந்தான். இராவணனுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதோ, இராவணன் இறந்தால் தனக்கு அந்த அரசு கிடைக்கும் என்பதோ அவன் எண்ணம் அல்ல. இந்தப் பிறவி பிணியை போக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம்.
அதற்காக இராமனை சென்று சேர்கிறான்.
வாழ்க்கையில் துன்பங்கள் வரும். சலனங்கள் வரும். சூழ்நிலைகள் மாறும். நினைப்பது நடக்காது. நினையாதது நடக்கும்.
என்ன நடந்தாலும், நமக்கு வாழ்வில் என்ன குறிக்கோள் என்பதை மறந்து விடக் கூடாது. அதை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.
அலைகள் போல் மேலும் மேலும் எழும் பிறவிகள் நீங்கள் வேண்டும்...ஆர்த்து எழும் பிறவி துயர் நீங்க வேண்டும் என்பார் மணிவாசகர்.
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பது வள்ளுவம்.
இந்த பிறவி என்ற பெருங்கடலில் நம்மை தூக்கி போட்டு இருக்கிறார்கள். சும்மா போடவில்லை, பந்த பாசம், ஆசை, கோபம், பொறாமை போன்ற கற்களை சேர்த்து கட்டி தூக்கி போட்டு இருக்கிறார்கள். அதில் இருந்து நீந்தி கரை சேர துணையாய் இருப்பது "நமச்சிவாய" என்ற மந்திரமே என்பார் அப்பரடிகள்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
என்பது தேவாரம்.
"எல்லை இல் பெருங்குணம்" எல்லை இல்லாத பெரிய குணங்கள். இராமனுக்கு இவ்வளவு தான் உயர்ந்த குணங்கள் என்று ஒரு பட்டியல் போட்டுக் காட்ட முடியாது. எவ்வளவு பெரிய பட்டியல் போட்டாலும், அதையும் தாண்டி அவன் பெரிய குணங்கள் நீளும்.
இவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் என்று சொல்ல முடியாது , உயர்வு அற உயர் நலம் உடையவன் அவன் என்பார் நம்மாழ்வார்.
உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே
என்பது பிரபந்தம்.
அவன் திருவடிகளை பற்றினால் இந்த பிறவி என்ற பெருங்கடலை தாண்டலாம்.
"இந்தப் பிறவி என்னும் சூழலில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு இராமனின் திருவடிகளே துணை என்று நினைத்து போய் சேர்ந்தான்" என்று எழுதுகிறாய். ஏன், நடுநிலையில் இருந்திருந்தால் பிறவிப் பிணி தீர்ந்திருக்காதோ?
ReplyDelete"அறத்துக்கும் மறத்துக்கும் உள்ள போரில், நடுநிலை நிற்பது தவறு" என்று சொன்னால் போதாதா? சும்மா பிறவிப் பிணி தீர்க்கிறேன் என்றது தேவையே இல்லை.
சுவாரசியமான பாடல். தந்ததற்கு நன்றி.