இராமாயணம் - பரதன் 7 - பரதனின் தந்தைப் பாசம்
இராமாயணம் படிப்போர் எல்லாம் , இராமனுக்கும் தயரதனுக்கும் உள்ள நெருக்கமான உறவைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசுவார்கள். சொல்லப் போனால் தயாரதனுக்கு பரதன் மேல் கோபம் கூட உண்டு. தனக்கு அவன் பிள்ளை இல்லை, தனக்கு அவன் இறுதிக் கடன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு உயிர் விடுகிறான் தயரதன்.
ஆனால், தயரதன் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறான் பரதன்.
தந்தை மகன் உறவு எப்போதும் மௌனத்திலேயே நடக்கிறது. இருவரும் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.
பரதனின் தந்தைப் பாசம் கண் கலங்க வைக்கும்.
ஒரு பெண்ணைப் போல ஆணால் அன்பை, உணர்ச்சியை எளிதாக வெளிப் படுத்த முடிவதில்லை.
தயரதன் இறந்துவிட்டான். பரதன் , தயரதனைத் திட்டுகிறான்.
"நீ பாட்டுக்கு இப்படி பொறுப்பு இல்லாமல் இறந்து போய் விட்டாயே. நீ இறந்து விட்டால் இந்த அறத்தையும், அருளையும், நீதியையும், நீ சேர்த்த செல்வத்தையும் யார் காப்பாற்றுவார்கள். இப்படி பொறுப்பில்லாமல் இறந்து விட்டாயே" என்று ஏசுவது போல துக்கத்தில் குமுறுகிறான்.
பாடல்
‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?
பொருள்
‘அறம்தனை = அறத்தை
வேர் அறுத்து = வேரோடு அறுத்து
அருளைக் கொன்றனை = அருளை, கருணையை கொன்றாய்
சிறந்த= உயர்ந்த
நின் = உன்னுடைய
தண்ணளித் = தண் + ஒளி = குளிர்ந்த ஒளி பொருந்திய
திருவைத் = செல்வத்தை
தேசு = பெருமை, செல்வாக்கு
அழித்து = அழித்து
இறத்னை ஆம் எனின் = இறந்துவிட்டாய் என்றால்
இறைவ! = தலைவனே
நீதியை = நீதியை , ஞாயத்தை
மறந்தனை; = மறந்து விட்டாய்
உனக்கு = உனக்கு
இதின் = இதைவிட
மாசு = குற்றம்
மேல் உண்டோ? = அதிகம் உண்டோ
தயரதனை "இறைவ " என்று அழைக்கிறான். காக்கும் தொழில் இறைவனின் பிராதன தொழில். நாம் இறைவனிடம் எதிர்பார்ப்பது நம்மை காப்பாற்றுவதைத் தான். யாரும் கடவுளிடம் "கடவுளே என்னை படை , என்னை உருவாக்கு" என்று கேட்பது இல்லை. நாம் தான் ஏற்கனவே படைக்கப் பட்டு விட்டோமே. "ஆண்டவா என்னை அழித்து விடு "என்று யாரும் ஆண்டவனை வேண்டுவது இல்லை. அழிப்பதும் ஆண்டவன் தொழில் தானே. கடவுளிடம் வேண்டுவது எல்லாம் காப்பாற்றுதல் ஒன்றுதான்.
யார் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் கடவுள்.
அரசனுக்கு "இறைவன்" என்று பெயர். இறைமாட்சி என்று ஒரு அதிகாரம் வைத்தார் வள்ளுவர், அரசனின் கடமைகளை சொல்ல.
அறத்தை, நீதியை, அருளை, புகழை காக்கும் தொழில் அரசனுக்கு உண்டு.
அவன் இறந்ததே குற்றம் என்கிறான். இதெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று நீ பாட்டுக்கு இறந்து விட்டாய் என்று புலம்புகிறான்.
நாங்கள் எல்லாம் சின்னப் பிள்ளைகள். எங்களுக்கு என்ன தெரியும். அறமும், நீதியும், அருளும், புகழும் எல்லாம் உனக்குத்தான் தெரியும். நீ இறந்து விட்டால் நாங்கள் என்ன செய்வோம். நீ இப்படி இறந்தது தவறு என்று ஒரு சிறு பிள்ளை போல் அழுகிறான்.
தந்தை இறந்த அந்த சோகத்திலும் அவனுக்கு மனதில் முதலில் வருவது "ஐயோ, இந்த அறத்தை இனி யார் காப்பார்கள்" என்பது தான். துக்கத்திலும் அற உணர்வே அவனிடம் மேலிட்டு நிற்கிறது.
அறத்தை காப்பது அரசனின் கடமை . தயரதன் அந்தக் கடமையில் இருந்து தவறி விட்டான் என்று புலம்புகிறான் பரதன்.
இப்படி ஒரு பிள்ளையை கண்டது உண்டா ?
நீ சொல்லும் பொருள் நன்றாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஆனால், இப்படி யோசித்தால் என்ன? இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்னதற்காக, தசரதன் மேல் பரதனுக்குக் கோபம் என்று இந்தப் பாடல் காட்டுகிறதோ?