Pages

Tuesday, December 6, 2016

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 


குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

உடற்பிறப்பால் தோள்வலிபோம் = உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய் விடும்

பொற்றாலி யோடெவையும் போம் = தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது.   தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படை  சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான்.  எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது.  மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின்  சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.

தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"


சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு  செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு  ஒரு மதிப்பு இல்லை. 

மனைவி  என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக,  பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.

மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.  

மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க   வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள். 

மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல   அறிவுரை கூறி,  உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல  வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட  மனைவி போனால், எல்லாம் போய் விடும். 

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....

16 comments:

  1. "தாலியோடு எவையும் போகும்" - கணவன் இறந்ததும், பெண்களின் தாலியை எடுத்து விடுவதால், இந்த வரி "கணவன் இறந்துவிட்டால், பெண்களுக்கு எதுவுமே மிச்சம் இல்லை" என்று பொருள் தருவதாக எண்ணினேன். ஆனால், உன் விளக்கப்படி "மனைவியை இழந்துவிட்டால், ஆண்களுக்கு எதுவுமே இல்லை" என்று எழுதியிருப்பது ஒரு ஆச்சரியமே. அதுவும் சரிதான்! நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Your thinking is also applicable here, since in Patti Manram everyone interpret literatures according to their understanding. My honest feelings are that the whole poem applicable to all, ie both men and women. In the past 70 years I do think and explain this poem when we lose our kith and kin.

      Delete
  2. இந்தப் பாடலைப் பல முறை படித்திருக்கிறேன். இந்த அளவிற்கு ஆழ்ந்து உணர்ந்ததில்லை.
    நன்றிகள் உரித்தாகுக!

    ReplyDelete
  3. மனைவியின் அருமையை அந்த காலத்திலேயே எவ்வளவு அருமையாக ஆழமாக சொல்லிருக்கிறார்கள்

    ReplyDelete
  4. நுண்ணிய நூல்பல கற்பினும்
    பொதிந்த பொருள் அறிதல் அறிவார்ந்தவர் வழி தான் என உணர்த்தி இருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  5. Best song.... I will use this song in my retirement function in my acceptance speech

    ReplyDelete
  6. Fantastic gospel line forget in my life.

    ReplyDelete
  7. Excellant! I have studied this song some 65years ago but cant remember correctly now i know it avvaiyar song.

    ReplyDelete
  8. Knew and heard this poem many times but when finding such losers often, always feel the poem versions are so minutely composed by Avvayar so greatly

    ReplyDelete
  9. விளக்கம் இனிது \ பாராட்டு \ தோள் வலிமை - தோள் கொடுக்கும் வலிமை, எதிராளியிடமிருந்து காக்கும் வலிமை

    ReplyDelete
  10. மணமாகாத ஒருவரால் (ஔவ்வை கிழவியால்) எப்படி இதை உணர்ந்து எழுதியிருக்க முடியும் என்று வியக்கிறேன்.

    ReplyDelete
  11. Even though this poem was written a long time ago, it is still applicable in today's world!

    ReplyDelete