Pages

Sunday, January 8, 2017

தேவாரம் - அஞ்சி ஆகிலும்

தேவாரம் - அஞ்சி ஆகிலும் 


மனிதன் இறைவனை தொழ ஆரம்பித்தது பயத்தினால்தான். இடி இடித்தால் பயம், மின்னல் வெட்டினால் பயம். வெள்ளம், நில நடுக்கம், கிரகணம் , கொள்ளை நோய் என்று பலவற்றை கண்டு மனிதன் பயந்தான். தனக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்து கொண்டான். அந்த சக்தியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதன் தயவைப் பெற, அதை வழி படத் துவங்கினான்.


மனிதனின் பயம் இடம் மாறியது. இடி மின்னலில் இருந்து , பாவம், புண்ணியம், சொர்கம் , நரகம் என்று நினைக்கத் தொடங்கினான். தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்று நினைத்தான். எண்ணெய் கொப்பரை பயம் பற்றிக் கொண்டது.

நாள் ஆக ஆக , அறிவு வளர்ந்தது. அறிவியல் பலவற்றை கண்டு சொல்லியது.


மழையும், இடியும், மின்னலும், நோயும் , கிரகணமும் எப்படி வருகிறது என்று கண்டு சொல்லியது. மனிதனின் பயம் குறையத் தொடங்கியது. நோய் என்றால்    தெய்வ  குத்தம் என்று கோவிலுக்குப் போவதில்லை, மருத்துவமனைக்குப் போகிறான்.

பயம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் ஆண்டவனை தொழுவது குறையவில்லை. எதற்கு தொழ வேண்டும் ? எதெல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருந்தானோ, அது எல்லாம் ஆண்டவன் செயல் அல்ல என்று புரிந்த பின் ஏன் ஆண்டவனைத் தொழ வேண்டும் ?

நாளடைவில் , ஆண்டவன் மேல் அன்பு வரத் தொடங்கியது. பயம் , அன்பாய் மலர்ந்தது.

பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு முதலில் பயம் இருக்கும். வளர்ந்து பெரிய ஆளானபின் அந்த பயமே அன்பாக மாறுவது போல.....

"அச்சத்தின் காரணமாகவேனும், அன்பினாலாவது இறைவனை நினை " என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

சீர் பிரித்தபின்

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டாகிலும் 
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் இமையோர் தொழ 

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே

பொருள்

அஞ்சி ஆகிலும் = அச்சத்தின் காரணமாகவேனும்

அன்பு பட்டாகிலும்  = அன்பினாலாவது

நெஞ்சம் வாழி = நெஞ்சே நீ வாழ்க

நினை  = நினைப்பாயாக

நின்றியூரை நீ = திரு நின்ற ஊர் என்ற தலத்தில் உள்ள

இஞ்சி மாமதில்= காவலை உடைய பெரிய மதில்களைக் கொண்ட

இமையோர் தொழ = கண் இமைக்காத தேவர்களும் தொழ


குஞ்சி = தலை முடியில்

வான்பிறை = வானில் உள்ள பிறையை

சூடிய கூத்தனே = சூடிய கூத்தனே

வாழ்க்கை என்ற மிகப் பெரிய இன்பத்தைக் கொடுத்த இறைவனிடம் அன்பு செலுத்தச் சொல்கிறார்  நாவுக்கரசர். ஆரோக்கியமான உடல், அளவான செல்வம், அன்பான குடும்பம், அமைதியான நாடு...இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகளைத் தந்த ஆண்டவனை அன்போடு நினைக்கச் சொல்கிறார் அப்பர்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/01/blog-post_12.html




1 comment:

  1. நடக்கும் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம் சொல்லும் தன்மை மனிதனுக்கு இருக்கிறது. ஒரு காரணமும் இல்லாமல் ஒரு செயல் நடப்பதாகச் சொன்னால், மனிதன் பயப்படுகிறான். அதனால்தான் இன்னும் இறைவன் என்று ஒன்றை வைத்துக் கொண்டு, காரணம் சொல்ல முடியாத செயல்களுக்கு "இறைவன் செயல்" என்று ஒரு காரணத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறான். நம் வாழ்கை random ஆக நடக்கிறது என்பதைத் தாங்க முடியாமல் இறைவன் என்ற ஒரு சக்தியை உருவகித்துக் கொள்கிறான் மனிதன்.

    ReplyDelete