Pages

Saturday, February 18, 2017

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ? - பாகம் 2

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ? - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை எங்கே வாசிக்கலாம் 

http://interestingtamilpoems.blogspot.in/2017/02/blog-post_17.html

)

இறைவன் எங்கே இருக்கிறான் என்று நாளும் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். கைலாயத்தில் இருக்கிறான். வைகுண்டத்தில் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு அங்கே போக வழி தேடிக் கொண்டிருக்கிறான்.

நாவுக்கரசர் சொல்லுகிறார்

"மனதில் இருக்கிறான். வாக்கில். அடியவர்கள் மத்தியில் இருக்கிறான். தேவர்களின் தலைக்கு மேலே இருக்கிறான். அண்டங்களுக்கு அப்பால் இருக்கிறான். மலையில் இருக்கிறான். கொன்றைப் பூவில். நெருப்பில் இருக்கிறான். காற்றிலும் இருக்கிறான். மேகத்தில் இருக்கிறான். கைலாயத்தின் உச்சியில் உள்ளான். என் கண்ணுக்குள்ளே இருக்கிறான் " என்கிறார்.

பாடல்

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே


சீர் பிரித்த பின்

மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான்
    வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
    ஏழு அண்டத்துக்கு அப்பாலன் இப்பாற் செம்பொன்
புனத்து அகத்தான்  நறுங்கொன்றைப் போதினுள் உள்ளான்
    பொருப்பின் இடையான்  நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியில் உள்ளான் 
    காளத்தியான் அவன் என் கண்ணுளானே

பொருள்

மனத்து அகத்தான் = மனதினுள் இருக்கிறான்

தலை மேலான் = தலைக்கு மேலே இருக்கிறான்

வாக்கினுள் உள்ளான் = சொல்லில் இருக்கிறான்

வாயாரத் = வாயால்

தன் அடியே = தன்னுடைய திருவடிகளையே

பாடும் = பாடும்

தொண்டர் இனத்து = தொண்டர் கூட்டத்தின்

அகத்தான் = நடுவில் இருப்பான்

இமையவர் = இமைக்காமல் இருக்கும் தேவர்கள்

தம் சிரத்தின் மேலான் = அவர்களுடைய தலைக்கு மேலே இருக்கிறான்

ஏழு அண்டத்துக்கு = ஏழு அண்டங்களுக்கு

அப்பாலன் = வெளியே இருக்கிறான்


இப்பாற் = இந்தப் பக்கம்

செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற

புனத்து அகத்தான் = புனைகளுக்கு மத்தியில் இருக்கிறான்

நறுங்கொன்றைப் = நல்ல கொன்றைப்

போதினுள் = பூவில்

உள்ளான் = இருக்கிறான்

பொருப்பின் இடையான் = மலையின் மேல் இருக்கிறான்

நெருப்பிடையான் = நெருப்பில் இருக்கிறான்

காற்றி னுள்ளான் = காற்றில் இருக்கிறான்

கனத்தகத்தான் = மேகத்தில் இருக்கிறான்

கயிலாயத்து உச்சியில் உள்ளான் = கைலாயத்தின் உச்சியில் இருக்கிறான்

காளத்தியான் = திருக்காளத்தி என்ற ஊரில் இருக்கிறான்

அவன் என் கண்ணுளானே = அவன் என் கண்ணில் இருக்கிறான்.


தலைக்கு மேலே இருக்கிறான் என்று இரண்டு முறை கூறுகிறார் நாவுக்கரசர்.


தலை மேலான்
இமையவர் தம் சிரத்தின் மேலான்

ஏன் இரண்டு தடவை கூறுகிறார் ? தலைக்கு மேல வேலை இருக்கிறது என்று சொல்லக் கேட்டு இருக்கிறறோம். அது என்ன தலைக்கு மேல வேலை ?

அதிகமான வேலை என்று அர்த்தம் அல்ல. உண்மையாகவே தலைக்கு மேலே  ஒரு வேலை இருக்கிறது. 

நமது உடலில் ஏழு  சக்கரங்கள் இருக்கிறது என்று இந்து சமயம் கூறுகிறது 

மூலாதாரம் 
சுவாதிஷ்டானம் 
மணிபூரகம் 
அனாஹதம் 
விஷுதி 
ஆஞ்சை 
சகஸ்ராரம் 

என்று அவற்றின் பெயரை குறிப்பிடுகிறது. 


இதில் மூலாதாரம் மிக மிக கீழே உள்ள சக்கரம். 

சகஸ்ராரம் மேலே உள்ள சக்கரம். அது எங்கே இருக்கிறது தெரியுமா ?

தலைக்கு மேலே 12 அங்குல தூரத்த்தில் இருக்கிறது. ஆயிரம் இதழ் கொண்ட  மலர் போல விரிந்து நிற்கும்.

ஆகாயத் தாமரை என்றும் கூறுவார்கள். 


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

என்பார் மணிவாசகர் (திருவாசகம் - சிவ புராணம் )

இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்க வேண்டும். 

அப்படி வணங்குபவரை ஏற்றம் பெறச் செய்வான் அவன் என்கிறார் மணிவாசகர்.

எனவே, தலைக்கு மேல் இருக்கும் அந்த இடத்தில் இருப்பவன் இறைவன் என்கிறார் அப்பரடிகள். 

மூலாதாரத்தில் இருக்கும் அந்த கனலை மூட்டி மேலே கொண்டு வர வேண்டும். 

சரி, மூலாதாரம் என்பது எங்கே இருக்கிறது ?

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் , மனிதனை உச்சந்தலையில் இருந்து சரி பாகமாக அறுத்துக் கொண்டே வந்தால் , கடைசியாக அந்த கத்தி வெளிப்படும் இடம் மூலதாதாரம். 

பிறப்பு உறுப்புக்கும், ஆசன உறுப்புக்கும் இடைப்பட்ட இடம். 

நமது சக்தி அங்கே தங்கி இருக்கிறது. உடலின் கடைக்கு கோடி இடம் அது. 

காம சக்தியாக அது வெளிப்படுகிறது. அந்த சக்தியை திரட்டி மேலே கொண்டு வர வேண்டும். 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

என்பது அவ்வை வாக்கு.  மூலாதாரத்தில் இருக்கும் கனலை காற்றால் (கால் என்றால் காற்று) எழுப்பி என்றால் ப்ரணாயாமத்தால் எழுப்பி.

"வாக்கினுள்ளான் "  வாக்கில் அதாவது சொல்லில் இருக்கிறான் என்பது மேலோட்டமான பொருள். 

வாக்கு என்பது நம் காதுக்கு கேட்க்கும் ஒலி மட்டும் அல்ல. 

இன்றைய அறிவியல் கூறுவது என்னவென்றால் ஒளியும், ஒலியும் ஒன்றுதான். மின் காந்த அதிர்வலைகள் (electro mangetic waves ) என்கிறது. அதாவது, ஒலியை செறிவூட்டிக் கொண்டே போனால் அது ஒளியாகி விடும். 

மலை மேல் மயிலாடக் கண்டேன் , மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய் என்று குதம்பை சித்தர்  கூறுவது இதைத்தான். 

மயில் என்பது அழகிய வடிவம். 

குயில் என்பது இனிய குரல்.

வடிவம் என்பது ஒளி சார்ந்தது. குரல் என்பது ஒலி சார்ந்தது. ஒளி என்பது ஒலியாக மாறியது என்கிறார். 

வாக்கு என்பது நமது வாயை விட்டு வெளியே வரும்போது சப்தமாக வருகிறது. 

ஒரு சொல்லை மனதால் நினைக்க முடியும்.

அ - ம் - மா என்று மனதுக்குள் சொல்ல முடியும். சப்தம் உள்ளே இருக்கும். நமக்கு கேட்கும். வெளியே உள்ளவர்களுக்கு கேட்காது. 

அதே அ - ம் - மா என்பதை மனதில் நினைக்க முடியும் - சப்தமில்லாமல்.  வரி வடிவில் நினைக்க முடியும். ஒரு நிமிடம் கண் மூடி நினைத்துப் பாருங்கள். சப்த்தம் இல்லை. ஆனால் அர்த்தம் இருக்கிறது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம். வரி வடிவம் கூட இல்லாமல், வெறும் ஒளியாக பார்க்க முடியும். 

அதற்கும் மேலே ஒரு படி இருக்கிறது என்கிறார்கள் 

வாக்கின் பல்வேறு வடிவங்கள் , அல்லது நிலைகள் என்பன 

வாக்கு முதலில் சூக்கும நிலையில் இருக்கும்.  பின், அது 
பரை என்ற நிலையை அடைகிறது - இது ஒரு நுண்ணோசை.. பின் அது, 
பைசந்தி என்ற நிலையை அடைகிறது - இது ஒரு நினைவோசை. பின் அது 
மத்திமை நிலையை அடைகிறது - இது கருத்து ஓசை  எனப்படும். பின் அது 
வைகரி என்ற மேல் நிலையை அடைகிறது. இதுவே நாம் கேட்கும் செவி ஓசை.

நாம் மற்றவர்களோடு பேசும் போது வாக்கு என்ற நிலையில் பேசுகிறோம். கேட்கிறோம். 

ஞானிகள் பேசாமலேயே கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். தட்சிணா மூர்த்தி ம் மௌன குருவாக இருந்து சீடர்களுக்கு போதனை செய்தார். 

இந்த மௌன பாஷை நமக்கும்  கொஞ்சம் பரிச்சியம் இருக்கலாம். காதலித்தவர்களுக்குத் தெரியும். காதல் வயப் பட்ட ஆணும் பெண்ணும் அருகருகில் அமர்ந்து இருப்பார்கள். வாய் திறந்து பேச்சிருக்காது. இருந்தாலும் கருத்து பரிமாற்றம் இருக்கும். 

சந்தேகம் இருப்பவர்கள் , அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெளிந்து கொள்க. 

உள்ளே இருக்கும் சக்தி வாக்காக வெளிப்படுகிறது.  வாக்கை கட்டுப் படுத்தினால், அது மனதுக்குப் போகும். மனம் கிடந்து அலையும். சப்த்தம் இருக்காதே தவிர , சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். உற்று கவனித்தால் தெரியும்,  சிந்தனை எல்லாமே சொற்றொடர்களாகவே இருக்கும்.  

அதையும் நிறுத்தினால், அந்த சக்தி இன்னும் உள்ளே போகும். கடைசியில் அந்த வாக்கு பற்ற ஒன்றும் இல்லாமல் சிவனைப் பற்றும். 

"வாக்கில் உள்ளான்"

அவர் காணும் இடமெல்லாம் இருக்கிறான். மலை மேலே, பூவில், காற்றில் என்று காணும் இடமெல்லாம் இருக்கிறான். 

அப்படி எல்லா இடத்திலும் இருந்தால், நமக்கு ஏன் தெரியவில்லை ?

"என் கண்ணுள்ளானே " என்கிறார். என் கண்ணில் இருக்கிறான் எனவே நான் காணும் இடமெல்லாம் அவன் தெரிகிறான் என்கிறார். 

உங்கள் மனதில், வாக்கில், கண்ணில் அவன் இருந்தால் , உங்களுக்கும் அவன் காணுமிடமெல்லாம் தெரிவான். 

நேரம் கிடைக்கும் போது அமைதியாக இந்த பாடலை சிந்தனை செய்து பாருங்கள். 

அவ்வளவு அர்த்தம் செறிந்த பாடல்.  இறைவனை காண்கிறோமோ இல்லையோ, மனதின் அழுக்கை மாற்றி நம்மை ஒரு படி மேலே உயர்த்தும் பாடல்கள் இவை. 

No comments:

Post a Comment