இராமாயணம் - பரதன் குகன் - பிரியாதனைப் பயந்த பெரியாள்
கோசாலையை அறிமுகப் படுத்திய பின், அருகில் இருக்கும் சுமித்திரையை காட்டி
"அன்பு நிறைந்த இவர்கள் யார்" என்று குகன் கேட்கிறான்
அதற்கு பரதன், "நெறி தவறாத தசரதனின் இளைய மனைவி. எல்லோரும் வணங்கும் இராமனை விட்டு எப்போதும் பிரியாத இலக்குவனை பெற்ற பெரியாள் " என்றான் பரதன்
பாடல்
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
பயந்த பெரியாள்’ என்றான்.
பொருள்
அறம் தானே = அறத்தின் மொத்த உருவாய் தானே
என்கின்ற = என்பது போன்ற
அயல் நின்றாள்தனை = அருகில் இருந்த அவளை (சுமித்ரை)
நோக்கி, = பார்த்து
‘ஐய! = ஐயனே
அன்பின் நிறைந்தாளை உரை’ என்ன = அன்பால் நிறைந்த இவளைப் பற்றி சொல் என்று கேட்ட போது
‘நெறி திறம்பாத் = உயர்ந்த நெறிகளில் இருந்து மாறாத
தன் மெய்யை நிற்பது ஆக்கி = தன்னுடைய உண்மையை நிலைத்து நிற்கும்படி செய்து
இறந்தான்தன் = இறந்த தசரதனின்
இளந் தேவி; = இளைய மனைவி
யாவர்க்கும் = எல்லோருக்கும்
தொழு குலம் = தொழுகின்ற குல தெய்வமாய்
ஆம் = ஆகும்
இராமன் = இராமனின்
பின்பு = பின்னால்
பிறந்தானும் உளன் = பிறந்தவனுக்கு உள்ளான்
என்னப் = என்று
பிரியாதான் தனைப் = எப்போதும் இராமனை விட்டு பிரியாத தனை
பயந்த பெரியாள்’ என்றான் = பெற்ற பெரியவள் என்றான்
சுமித்திரையின் மூலம் கம்பன் நமக்கு சில உயர்ந்த விஷயங்களை சொல்லுகிறான்.
அறம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும். "அறம்தானே " என்கின்ற வடிவு உடையாள். "அன்பின் நிறைந்தாள் " என்கிறான்.
இன்னும் சொல்லப் போனால் அன்பு நிறைய நிறைய அறம் பெருகும். அன்பாக இருப்பதுவே அறம் . அன்பு இல்லாதவர்களை அறம் கொன்று போடும் என்கிறார் வள்ளுவர்.
என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்
எலும்பு இல்லாத புழுக்களை எப்படி வெயில் காய்ந்து கொல்லுமோ அது போல அன்பு இல்லாதவர்களை அறம் கொல்லும் என்கிறார்.
அன்போடு இருப்பதுதான் அறம் .
மனதில் அன்பு வந்து விட்டால், எப்படி தவறு செய்ய முடியும் ?
″அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″
என்பது திருமந்திரம்
அன்பே சிவமாகி விடும்.
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே
என்பது நாச்சியார் திருமொழி. அன்பு இல்லாதவர் மனதில் ஆண்டவன் வர மாட்டான் . (மேவலன் - மேவ மாட்டான், வர மாட்டான் )
தசரதன் கட்டுக்குப் போகச் சொன்னது இராமனை மட்டும் தான். இலக்குவனை யார் கானகம் போகச் சொன்னது ? சுமித்திரை தான் சொன்னாள் . இராமன் திரும்பி வந்தால் நீ வா , இல்லை என்றால் அவனுக்கு முன்னால் நீ முடி என்று இலக்குவனிடம் சொல்லி அவனை கானகம் அனுப்பினாள் . தன் பிள்ளையை காட்டுக்கு அனுப்ப எந்த தாய் சம்மதிப்பாள் ? சுமித்திரை செய்தாள். இராமனும் சீதையும் துன்பப் படுவார்கள். அவர்களுக்கு உதவிக்கு ஒரு ஆள் வேண்டும் என்று அனுப்பினாள் . இராமன் மேல் கொண்ட அன்பு. உடன் பிறந்தவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அறம் . நம்மை நம்பி நம் வீட்டுக்கு வந்த பெண் (சீதை ) துன்பப் படக்கூடாது என்ற அறம் மற்றும் அன்பு. "சீதையை தாயாக நினைத்து அவள் பின் போ " என்று அனுப்பினாள் .
சொத்துக்காக நீதி மன்ற படியேறும் அண்ணன் தம்பிகள் படிக்க வேண்டும் இந்த இராமாயணத்தை.
மருமகளை எப்படி நடத்த வேண்டும் என்று மாமியார்கள் கற்றுக் கொள்ள வேண்டும் இராமாயணத்தில் இருந்து.
நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி
நீதி நெறியை நிலை நிறுத்தும் பொருட்டு தன் இன்னுயிரை தந்தான் தசரதன் என்கிறான் பரதன்.
வாக்கு விலை வேண்டும் என்று சொல்லுவார்கள்.
"ஆமாம் வரம் தந்தேன். அதுக்கு என்ன இப்போ ? அதெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டேன் ...இராமனையெல்லாம் காட்டுக்கு அனுப்ப முடியாது. ..." என்று சொல்லி இருக்கலாம்.
அப்படி சொல்லி இருந்தால் அவனை யாரும் பெரிதாக குறை சொல்லி இருக்க முடியாது.
இருந்தாலும், தன் வாக்கை காப்பாற்றி அதற்காக தன் உயிரையே கொடுத்தான் தசரதன்.
இப்படி இராமாயணத்தில் எங்கு பார்த்தாலும் வாழ்க்கைக்கு வேண்டிய வழி முறைகள் கொட்டி கிடக்கிறது.
அடிக்கடி படித்தால் இந்த நல்ல குணங்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் வந்து விடும்.
படித்துப் பாருங்கள்.
இறந்தான்தன் இளந் தேவி
நீதி நெறியை நிலை நிறுத்தும் பொருட்டு தன் இன்னுயிரை தந்தான் தசரதன் என்கிறான் பரதன்.
வாக்கு விலை வேண்டும் என்று சொல்லுவார்கள்.
"ஆமாம் வரம் தந்தேன். அதுக்கு என்ன இப்போ ? அதெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டேன் ...இராமனையெல்லாம் காட்டுக்கு அனுப்ப முடியாது. ..." என்று சொல்லி இருக்கலாம்.
அப்படி சொல்லி இருந்தால் அவனை யாரும் பெரிதாக குறை சொல்லி இருக்க முடியாது.
இருந்தாலும், தன் வாக்கை காப்பாற்றி அதற்காக தன் உயிரையே கொடுத்தான் தசரதன்.
இப்படி இராமாயணத்தில் எங்கு பார்த்தாலும் வாழ்க்கைக்கு வேண்டிய வழி முறைகள் கொட்டி கிடக்கிறது.
அடிக்கடி படித்தால் இந்த நல்ல குணங்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் வந்து விடும்.
படித்துப் பாருங்கள்.
சுமித்திரை இலக்குவனைக் காட்டுக்கு அனுப்பிய பாடல் பற்றி எழுத வேண்டுகிறேன்.
ReplyDelete